Skip to main content

ராஜதந்திரத்தை அடிமை என்பதா? - அமைச்சர் உதயநிதிக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி

Published on 20/06/2023 | Edited on 20/06/2023

 

RB Udayakumar question to Minister Udhayanidhi

 

ஜெயலலிதா இருக்கிற வரை உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தினுடைய பார்வையாளராகத்தான் வர முடிந்ததை தவிர, அவர் சட்டமன்ற உறுப்பினராக முடியவில்லை என்கிற அந்த வரலாற்றையாவது அவர் நினைத்துப் பார்த்து அளவோடு நாவடக்கத்தோடு அரசியல் நாகரீகத்தோடு பேச வேண்டும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாகச் சாடியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர் உதயநிதிதான் தமிழ் மக்களுடைய காவலர் போலவும், பலமுறை தமிழ் இனத்துக்காக போராட்டம் நடத்தி சிறை சென்றவர் போலவும், தமிழ் மொழிக்காக பல போராட்டங்களிலே தன் சிறு வயது முதல் பங்கேற்றவர் போலவும், தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள் செய்தது போலவும் பேசி வருகிறார். தன்னுடைய தந்தை பெயரைச் சொல்லி, தாத்தா பெயரைச் சொல்லி அரசியலுக்கு புறவாசல் வழியாக வந்தவர்தான் உதயநிதி ஸ்டாலின். 2016, 2021 ஆம் ஆண்டுகளில் மாடத்திலிருந்து சட்டசபையினுடைய பார்வையாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின், ஒரே சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவி வரை வந்தது எப்படி?

 

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் தொடங்கி, நீதி கட்சியிலே தொடங்கி, தந்தை பெரியாரின் திராவிட இயக்கத்தினுடைய பரிணாம வளர்ச்சியிலே, கொட்டுகிற மழையில் உழைப்பால், தன் பேச்சால் ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய அண்ணாவுக்கு உறுதுணையாக இருந்தவர் எம்ஜிஆர். அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் அதிமுக இயக்கத்தை தொடங்கி ஆட்சிக் கட்டில் அமர்ந்தவரை உங்கள் தாத்தாவால் கோட்டை பக்கம் எட்டிப் பார்க்க முடியவில்லை என்ற வரலாற்றை நீங்கள் படித்து இருப்பீர்களா? அதேபோன்று ஜெயலலிதா இருக்கிற வரை உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தினுடைய பார்வையாளராகத்தான் வர முடிந்ததை தவிர, அவர் சட்டமன்ற உறுப்பினராக முடியவில்லை என்கிற அந்த வரலாற்றையாவது அவர் நினைத்துப் பார்த்து அளவோடு, நாவடக்கத்தோடு, அரசியல் நாகரீகத்தோடு பேச வேண்டும்.

 

மோடிக்கும், ஈடிக்கும் பயப்பட மாட்டோம் என்று சொல்கிறீர்கள். இதே பிரதமரை நீங்கள் சந்தித்து பாவமன்னிப்பு கேட்டீர்கள். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மோடியிடம் ஸ்டாலின் கொஞ்சிக் குலாவினார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது வரவேண்டாம் என கோ பேக் மோடி என்று சொல்லிவிட்டு, ஆளுங்கட்சியாக வந்தவுடன் மோடியே வருக (கம்பேக்) என்று கூறி உள்ளீர்கள். அடிமை என்று எங்களை சொல்லுகிற உதயநிதி ஸ்டாலின் அவர்களே, இன்றைக்கு செந்தில் பாலாஜி என்கிற ஒற்றை நபருக்கு ஒட்டுமொத்த திராவிட முன்னேற்றக் கழகமும் திமுக குடும்பமும் அடிமையாக இருக்கிறதா, இல்லையா? இன்றைக்கு செந்தில் பாலாஜி ஈ.டி விசாரணையால் உங்களுக்கு இடி விழுந்து போய் இருக்கிறதே என மக்கள் உங்களிடத்தில் திருப்பிக் கேட்கிறார்கள்.

 

ஐந்து பவுன் நகை அடமானம் வைத்தால் தள்ளுபடி செய்யப்படும் என்று சொல்லி தற்போது தகுதி உள்ளவர்களுக்கு மட்டும்தான் தருவோம் என்று கூறி உள்ளீர்கள். இதன் மூலம் 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பாவி ஏழை எளிய மக்களிடத்திலே ‘நீட்’ தேர்வு ரத்தாகும் என்று உங்கள் வார்த்தையை நம்பி லட்சக்கணக்கான இளைஞர்கள் நடு ரோட்டில் நிற்கிறார்களே? ஆயிரம் ரூபாய் தருவோம் என்று சொன்ன உங்கள் வார்த்தையை நம்பி இன்றைக்கு கோடிக்கணக்கான பேர் நடுத்தெருவில் நிற்கிறார்கள். இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்ல போகிறீர்கள்? செந்தில் பாலாஜியை பார்க்க அனைத்து அமைச்சர்களும் சென்று விட்டனர். ஆனால் ஒரே ஒரு அமைச்சர் மட்டும் போகவில்லை தன்மானமுள்ள அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன் மட்டும் செல்லவில்லை. அவர்தான் சொன்னார் 30 ஆயிரம் கோடியை உதயநிதியும், சபரீசனும் இன்றைக்கு எங்கே வைப்பது என்று திக்குத் தெரியாமல், திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்ன அந்த ஆடியோ விவகாரம் இன்று வரைக்கும் சந்தி சிரித்து இருக்கிறதே. அதற்கு விளக்கம் கொடுப்பதற்கு உதயநிதி ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா?

 

உதயநிதி ஸ்டாலின்... நீங்கள் பேசுவது இன்றைக்கு தொண்டர்கள் ரசிப்பதாக உங்களிடத்திலே தவறான தகவல் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் யாரும் ரசிக்கவில்லை. நீங்கள் 5 முறை தமிழகத்தில் ஆட்சி செய்தபோது கொண்டு வராத எய்ம்ஸ் மருத்துவமனையை கே.பழனிசாமி கொண்டு வந்தார். நீங்கள் ஒரு செங்கலை காட்டி ஒரு செங்கல் கூட வைக்க முடியவில்லை என்று பிரச்சாரம் செய்தீர்கள். தற்போது ஒரு செங்கலை கூட உங்களால் வைக்க முடிந்ததா? எடப்பாடி பழனிசாமி தமிழகத்துக்கு கட்டமைப்பு திட்டங்களை கொண்டு வந்தார். சாலை கட்டமைப்பு மேம்பாலங்கள் கொண்டு வந்து சேர்த்தார். இதனை எல்லாம் கே.பழனிசாமி மத்திய அரசிடம் ராஜதந்திரத்துடன் பெற்று தந்ததை அடிமை என்பதா? உங்கள் தாத்தா கருணாநிதி மதுரையில் நூலகத்தை கட்டி முடித்திருக்கிறீர்களே, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு நீங்கள் என்ன முயற்சி எடுத்தீர்கள்?

 

தினந்தோறும் ஒரு கோடி மது பாட்டில் விற்பனை ஆகிறது. ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது என்று சொன்னால் நாள்தோறும் ரூ. 10 கோடி. ஒரு மாதத்திற்கு ரூ.300 கோடி என்ற அளவிலே இன்றைக்கு அது உயர்ந்து வருடத்திற்கு ரூ. 3,600 கோடி என்கிற அளவிலே உயர்ந்திருக்கிற இந்த கணக்குகள் குறித்து தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நீங்கள் சொல்லும் விளக்கம் என்ன?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்