Advertisment

"உடனடியாக அமைச்சரவை பொறுப்பு ஏற்காவிட்டால் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும்" முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

publive-image

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்தும்பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று (11.06.2021) நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநிலத் தலைவர் ஏவிஎஸ் சுப்பிரமணியன் தலைமையில் கம்பன் கலையரங்கம் எதிரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த நாராயணசாமி, "கரோனா நோய் பரவல் மற்றும் ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகின்றனர். அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாத இக்கட்டான சூழ்நிலையில் வாழ்கின்றனர். இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு மத்திய பாஜக அரசு வழிவகை செய்துள்ளது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத போக்கு கண்டனத்துக்குரியது.

Advertisment

கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டதால் பெட்ரோல் விலை உயர்ந்திருக்கிறது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் கூறுகிறார். தற்போது கச்சா எண்ணெய் பேரல் 70 டாலர்தான். காங்கிரஸ் ஆட்சியில் 110 டாலராக இருந்தது. அப்போது நாங்கள் 68 ரூபாய்க்கு பெட்ரோல் கொடுத்தோம். ஆனால் இன்று பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்டது.

சட்டமன்றத் தேர்தலின்போது பாஜகவுக்கு வாக்களித்தால் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிடும் என்றோம், அது இப்போது நடந்துகொண்டிருக்கிறது. தேர்தல் காலமாக இருந்ததால் விலை உயர்வை நிறுத்திவைத்திருந்தார்கள். அதை இப்போது உயர்த்திவிட்டனர். இங்கிருந்து பூடானுக்கு ஏற்றுமதி செய்யும் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 68 ஆகவும், நேபாளத்திற்கு ஏற்றுமதி செய்யும் பெட்ரோல் ரூபாய் 72 ஆகவும் உள்ளது. ஆனால் நம்மூரில் மட்டும் கடந்த 40 நாட்களில் 21 முறை மோடி அரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. ரூபாய் 3.60 ஆக இருந்த மத்திய கலால் வரி, தற்போது ரூபாய் 36 ஆக உயர்ந்துள்ளது. இதுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம். கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணம் கிடையாது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 1 ரூபாயும், டீசலுக்கு 50 பைசாவும் உயர்த்தினால் தெருவில் இறங்கி போராட்டம் நடத்திய பாஜகவும் மோடியும் தற்போது வாயை மூடிக்கொண்டு மௌனமாக இருக்கிறார்கள். எனவே மத்திய அரசு உடனடியாக கலால் வரியை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை 36 ரூபாய் குறையும். தற்போதைய முதலமைச்சர் ரங்கசாமி வணிக வரியைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க இடையே அதிகார சண்டைதான் நடக்கிறது. யார் துணை முதல்வர்? மூன்று அமைச்சர்கள் கொடுப்பதா? 4 அமைச்சர்கள் கொடுப்பதா? எந்தெந்த இலாகாக்கள் கொடுப்பது? என காலம் கடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதனால் புதுச்சேரி மாநில நிர்வாகம் வீணாகப் போகிறது. மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஒரு ஆண்டில் மொத்த உயிரிழப்பு 600தான். ஆனால் கடந்த மே மாதத்தில் மட்டும் 750 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு முதலமைச்சர் பதில் சொல்வாரா? அல்லது பாஜக பதில் சொல்லுமா? புதுச்சேரியில் துணை முதல்வர் என்ற பதவியே கிடையாது. முதல்வருடன் சேர்த்து 6 பேர்தான் அமைச்சராக பதவியேற்க முடியும். ஆனால், பதவி வெறியில் மாநில நிர்வாகம் சீர் கெட்டுப் போய்விட்டது. யாரும் எதற்கும் பொறுப்பேற்பதில்லை. கரோனா பற்றி கவலைப்படுவதில்லை. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது இல்லை. இன்று மதுக்கடையைத் திறந்துவிட்டனர். அதனால் இன்னும் அதிகமாகப் போகிறது. அதுமட்டுமில்லாமல் கருப்பு பூஞ்சை நோய் வேறு வந்துள்ளது. அதற்கு மருந்தும் கிடையாது. முதலமைச்சர் ரங்கசாமி ஒருவர் மட்டும் முதல்வராகவும் அமைச்சராகவும் இருந்துகொண்டு அவலமான ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார். இது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. விரைவில் அமைச்சர்கள் பதயேற்றுக்கொண்டு மக்கள் பணியை செய்ய வேண்டும். இல்லை என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் செல்ல வேண்டும்" என்றார்.

petrol Diesel pondichery
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe