Skip to main content

தமிழ் மண்ணை அமளிக்காடாக்க ராமராஜ்ஜிய யாத்திரை வருகிறது; வருமுன் காப்பீர் -அனுமதி மறுப்பீர்!கி.வீரமணி

vee

 

ராமராஜ்ஜிய யாத்திரை என்று கூறி விசுவ இந்து பரிஷத் என்ற சங் பரிவார் அமைப்பு தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது; அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டை அமளிக்காடாக்கத் திட்டமிட்டுள்ளனர். 

வருமுன் காக்கும் வகையில் தக்க கவனம் செலுத்தி, இந்த அமளி ராம யாத்திரைக்குத் தமிழ்நாடு அரசு அனுமதியளிக்கக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

 

அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டை ஜாதி வெறி, மதவெறி என்ற வெறிகளால் அமளிக்காடாக்கிட தூபம்போடும் விசுவ இந்து பரிஷத்தின் ராமராஜ்ஜிய ரத யாத்திரையை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்துள்ள நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் (தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ், முகமது அபுபக்கர்) ஆகியோரின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்கவேண்டும்.

 

தற்போது சில இடங்களில் மதுரை, காஞ்சிபுரம் பகுதி களில் கிறித்துவ சமுதாயத்தினரைத் தாக்கியும், பெண்களின் கையில் உள்ள பைபிளைக்கிழித்தும், அதுபோல முசுலீம்களின் வழிபாட்டு இடத்தில் திரிசூலத்தை நட்டும்- வீண்வம்பு, வன்முறைக் கலவரங்களை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.,சங் பரிவார்கள் விதைத்து, செயல்படுத்தி வருகின்றனர்.

 

தமிழக அரசின் காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்க்கும் அவல நிலை உள்ளது!  புதுச்சேரியில் காவல்துறையின் அனுமதி பெற்று நடத்தப்பட்ட திராவிடர் கழகக் கூட்டத்தில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

பாபர் மசூதி இடிக்கப்பட்ட 1992 இல் இந்தியா முழுவதும் இரத்த ஆறுகள், கொலைகள், மதக்கலவரங்கள் நடைபெற்ற நிலையில், அமைதிப் பூங்காவாக தமிழ் நாடுதான் விளங்கியது. ‘பெரியார் பூமி’தான் என்பதையும் நிரூபித்தது.

 

மேலும் இதற்குக் காரணம் திராவிட இயக்க ஆட்சிகள் என்று ஏடுகளே எழுதின. அந்த வரலாற்றைத் தலைகீழாக்கி, ‘‘பெரியார் சிலையை உடைப்போம்; அம்பேத்கர் சிலையை சேதப்படுத்துவோம்‘’ என்றெல்லாம் விஷமங்களுக்கு ஆர்.எஸ்.எஸ்., பரிவார் வகையறாக்கள் வித்தூன்றுவது வீண்கலவரங்களை விதைக்கும் தவறான முயற்சிகளே!எனவே, தற்போதுள்ள அ.தி.மு.க. அரசு இதில் கண்டிப்பாக சட்டம், ஒழுங்கைப் பராமரித்திட காவல்துறைக்குத் தக்க சுற்றறிக்கை ஆணைகளைப் பிறப்பிக்கவேண்டும்.

 

திராவிடர் கழகம் எந்த மதங்களுக்கும் சார்பானது அல்ல; அதே நேரத்தில், மனிதநேயம், மனித உரிமைகள் அடிப்படையில் இப்படிப்பட்ட வன்முறைகளைத் துவக்கினால், அது அடக்கப்படுதல் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள ஓர் இயக்கம்.

 

இதில் முழு கவனத்தையும் தற்போதுள்ள ஆட்சி செலுத்தி, சமூக நல்லிணக்கத்தைக் குழிதோண்டி புதைக்க முயலும் நாசகார மதவெறிச் சக்திகளை அடக்கி வைக்க, தயவு தாட்சண்யமின்றி உரிய நடவடிக்கைகளை காவல் துறைமூலம் எடுக்கவேண்டியது அவசரம், அவசியம்!

 

குதிரை காணாமல் போன பின் லாயத்தை இழுத்துப் பூட்ட வேண்டாம்; முன்கூட்டியே நடவடிக்கை தேவை! தேவை!!’’

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்