Skip to main content

எடப்பாடி பழனிச்சாமி ஏழுமலையானா? அரசு விளம்பரம் அநாகரீகத்தின் உச்சம்! ராமதாஸ்

Published on 24/04/2018 | Edited on 24/04/2018
 Ramadoss


ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்த போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்துக் கொண்டிருந்ததைப் போல, காவிரி உரிமைக்காக தமிழ்நாட்டு மக்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தம்மை கடவுளாகக் காட்டிக் கொண்டிருப்பது ஆணவம் மட்டுமல்ல... அநாகரீகத்தின் உச்சமும் ஆகும். இதுபோன்ற செயல்களை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் திரையிடப்படும் சாதனை விளக்க விளம்பரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏழுமலையானாக சித்தரிக்கப்பட்டு  இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முதலமைச்சராக பதவியேற்ற 15 மாதங்களில் மக்களின் நலனுக்காக எதையுமே செய்யாத பழனிச்சாமி கூச்சமின்றி இப்படி விளம்பரப்படுத்திக் கொள்வது கண்டிக்கத்தக்கது.
 

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பினாமி அரசு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைக் குறிக்கும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அவரது தோழி மற்றும் உறவினருடன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தும்படி கோருகிறார். யாருடைய பெயரில் வழிபாடு நடத்த வேண்டும் என்று கோவில் குருக்கள் கேட்கும் போது, மாற்றுத் திறனாளி பெயரில் வழிபாடு நடத்தும்படி அவரது உறவினர் கூறுகிறார்.

ஆனால், அதை இடைமறிக்கும் மாற்றுத் திறனாளி தமது பெயரில் வழிபாடு செய்ய வேண்டாம்; சுவாமி பெயருக்கு வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுகிறார். எந்த சுவாமி பெயருக்கு என குருக்கள் கேட்க, ‘‘ நம்ம தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா பெயருக்கு... அவர் தான் எனக்கு வேலை கொடுத்த சுவாமி’’ என்று அந்த மாற்றுத்திறனாளி கூறுகிறார். அடுத்த வினாடி திருப்பதி வெங்கடாஜலபதி சிலையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தோன்றி மறைகிறார்.
 

திரையரங்குகளில் இந்த விளம்பரத்தைப் பார்க்கும் மக்கள் நகைச்சுவையாகக் கருதி சிரிக்கிறார்கள் என்றாலும், இது ஒரு குரூரமான சிந்தனையாகும். தமிழகம் கடவுள் இல்லை என்று கூறிய முதல்வர்களைப் பார்த்திருக்கிறது.... கடவுள் உண்டு என்று கூறிய முதலமைச்சர்களைப் பார்த்திருக்கிறது.... ஆனால், நான் தான் கடவுள் என்று கூறும் முதலமைச்சரை தமிழ்நாடு இப்போது தான் பார்க்கிறது. ஜெயலலிதா  முதலமைச்சராக இருந்த போது தன்னை அகிலாண்டேஸ்வரியாகவும், கன்னிமேரியாகவும் சித்தரித்து அதிமுக நிர்வாகிகள் பதாகை அமைத்தால் அதை நினைத்து மனதிற்குள் மகிழ்வார்; அவர்களுக்கு பதவிகளை வாரி வழங்குவார். ஆனால், அதை ஒருபோதும் அவர் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அரசு செலவில் தம்மை கடவுளாக சித்தரித்து விளம்பரப் படம் தயாரித்து வெளியிட்டுக் கொண்டதில்லை.
 

ஆனால், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாமல், சட்டப்பேரவை உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி, ஆட்சியில் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய அனைத்து நாகரிகங்களையும் காலில் போட்டு மிதித்து விட்டு தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார். முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு மக்கள் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்தினால், மக்களே ஆட்சியாளர்களை கடவுளாக கருதி வழிபடுவார்கள். சிங்கப்பூரின் லீ குவான் யூ-வையும், தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா, கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ, தமிழகத்தின் ஓமந்தூரார், காமராசர் ஆகியோரையும் மக்கள் கடவுளாகத் தான் கருதினர். அது தான் மக்கள் தரும் அங்கீகாரம் ஆகும். ஆனால், போட்டிகளில் வெற்றி பெற்று விருது வாங்க முடியாதவர், பாத்திரக்கடையில் கேடயம் வாங்கி பெருமைப்பட்டுக் கொள்வதைப் போலத் தான் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்கள் அமைந்துள்ளன.
 

தமிழகத்தில் ஒன்றரை கோடி பேர் படித்து விட்டு வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் கடைசி இடத்திற்கும் கீழே ஏதேனும் இடம் இருக்குமா? என்று தேட வேண்டிய நிலையில் தான் தமிழகம் உள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியாததால் ஆண்டு தோறும் அனிதாக்களை இழந்து கொண்டிருக்கிறோம். நிதி ஆணையத்தின் அதிகார வரம்பு மாற்றப் பட்டதால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ரூ.40,000 கோடி வருவாய்க்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆட்சியாளர்களுக்கு திறமை இல்லை. மணல் கொள்ளையும், மது விற்பனையும் தான் இந்த ஆட்சியின் அடையாளங்களாக மாறியிருக்கின்றன. ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்த போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்துக் கொண்டிருந்ததைப் போல, காவிரி உரிமைக்காக தமிழ்நாட்டு மக்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தம்மை கடவுளாகக் காட்டிக் கொண்டிருப்பது ஆணவம் மட்டுமல்ல... அநாகரீகத்தின் உச்சமும் ஆகும். இதுபோன்ற செயல்களை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
 

தமிழகம் 7 லட்சம் கோடி கடன் சுமையில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்களின் வரிப்பணத்தை சுய விளம்பரத்திற்காக எடப்பாடி பழனிச்சாமி வீணடிப்பதை ஏற்க முடியாது.  திருப்பதி ஏழுமலையானாக தம்மைக் காட்டிக் கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமியின் மலிவான செயல்களால், இறைவழிபாட்டில் நம்பிக்கைக் கொண்ட மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். மக்களை மட்டுமின்றி, கடவுளையும் அவமதிக்கும் வகையிலான விளம்பரப் படத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் தாங்களாகவே வீதிகளில் இறங்கி போராடுவதை தவிர்க்க முடியாது. இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

தமிழக அரசு சார்பில் தொல்காப்பியர் உருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Flower salutation program for Tolkappiyar statue

தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891- இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சாரும்.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது. ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும் 7 அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது.

இந்நிகழ்ச்சி சித்திரை முழுமதி நாளான இன்று (23.04.2024) காலை 10.00 மணிக்கு சென்னை மெரினா எதிர்புறம் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் (திருவள்ளுவர் சிலை எதிர்புறம்) அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அரசு செயலாளர், தமிழறிஞர்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுச் சிறப்பிக்க உள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.