Ramadoss warning to Central Govt for tamilnadu issue

Advertisment

நாட்டின் 74வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் படாக் எல் சிசி பங்கேற்றார்.

குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள் மற்றும் மத்திய அரசுத் துறைகளின் 6 அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. தமிழ்நாடு அரசின் சார்பில் அலங்கார ஊர்தியில் தஞ்சை பெரிய கோவில் கோபுரம் இடம் பெற்று இருந்தது. மேலும் அலங்கார ஊர்தியே கல்வி, கலை, போர் போன்றவற்றில் பெண்கள் வலிமையுடன் இருக்கிறார்கள் என்பதைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. அலங்கார ஊர்தியில் ஔவையார், பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி, பரதநாட்டியக் கலைஞர் பால சரஸ்வதி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி, விவசாயம் மேற்கொள்ளும் 107 வயது மூதாட்டி பாப்பம்மாள் ஆகியோரது சிலைகள் இடம் பெற்று இருந்தன.

இந்நிலையில், டெல்லியில் நடந்த அலங்கார ஊர்தி அணிவகுப்பில் சிறந்த ஊர்திக்கு மக்கள் வாக்களிக்கும் முறை மத்திய அரசின் MyGov.in என்ற இணையதளத்தில் உள்ளது. இதில் தமிழ்நாடு (tamilnadu) என்பதற்கு பதிலாக ‘தமிழ் நாயுடு’ (tamilnaidu) என இருந்ததால் சர்ச்சை எழுந்தது.

Advertisment

இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், “தில்லி குடியரசு நாள் விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில்சிறந்த ஊர்தியை இணையவழி வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் இணையதளத்தில் (www.mygov.in) தமிழ்நாட்டின் பெயர் Tamil Naidu என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் பெயர் பிழையாக குறிப்பிடப்பட்டிருப்பது எழுத்துப்பிழை என்று மட்டும் கருதி கடந்து செல்ல முடியாது. அரசின் இணையதளங்கள் அரசிதழுக்கு இணையானவை. அவற்றில் சிறிய பிழை கூட நிகழ அனுமதிக்கக்கூடாது. இது உலக அரங்கில் நாட்டிற்கு அவப்பெயரைத் தேடித் தரும். தமிழ்நாடுபெயர் அண்மைக்காலமாக தேவையின்றி சர்ச்சைக்குள்ளாகப்பட்டுவரும் சூழலில், மத்திய அரசு இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது பல்வேறு வகையான ஐயங்களை ஏற்படுத்துகிறது. இந்த பிழை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

www.mygov.in இணையதளத்தில் நடந்த இந்த பிழைக்கு அதை நிர்வகிக்கும் தேசிய தகவலியல் மையம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டின் பெயர் பிழையாக பதிவு செய்யப்பட்டதற்கு காரணமானவர்கள் யார்? என்பது அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.