Advertisment

“நாம் தொடர்ந்து தட்ட வேண்டியது ஆளுநர் மாளிகையின் கதவு..” முதல்வரை வலியுறுத்தும் ராமதாஸ்..! 

Ramadoss statement to release perarivalan and others

Advertisment

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் பல வருடங்களாக சிறைத் தண்டனையை அனுபவித்துவருகின்றனர். இந்நிலையில், அவர்களை விடுதலை செய்ய தமிழ்நாடுஅரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “இராஜிவ்காந்தி கொலை வழக்கில் விசாரணை என்ற பெயரில் பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டு இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ராஜிவ்காந்தி கொலை வழக்கில்பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்று விசாரணை அதிகாரிகள் முதல் நீதிபதிகள்வரை அறிவித்தும் அவரை விடுதலை செய்யும் விஷயத்தில் ஆளுநர் மாளிகை தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடுவது கண்டிக்கத்தக்கது.

இராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளனிடம் சிறிய விசாரணை நடத்த வேண்டியிருப்பதாக 30 ஆண்டுகளுக்கு முன் 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதி இரவு சி.பி.ஐயின்சிறப்பு புலனாய்வுப் பிரிவு பேரறிவாளனின் பெற்றோரிடம் கூறியது. விசாரணை முடிவடைந்ததும் அடுத்த நாள் காலையில் பேரறிவாளனை அனுப்பிவைப்பதாக விசாரணை அதிகாரிகள் உறுதியளித்தனர். அதை ஏற்று பேரறிவாளனை அவரது பெற்றோர் எந்த அச்சமும் இன்றி அனுப்பிவைத்தனர். ஆனால், இராஜிவ் கொலை குறித்த சில விளக்கங்களை பெறுவதற்கான விசாரணை என்று அழைத்துச் சென்றஅதிகாரிகள், அங்கு பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திரித்து எழுதி கொலை வழக்கில்சேர்த்தனர். அதைத் தொடர்ந்து அந்த வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளனும், மேலும் 6 தமிழர்களும் இன்றுவரை 30 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது; பின்னர் அது ரத்து செய்யப்பட்டு பல்வேறு காலகட்டங்களில் வாழ்நாள் சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டது.பேரறிவாளன் எந்தக் குற்றமும் செய்யாதவர் என்று அவரை விசாரித்த காவல் அதிகாரியும், தண்டனை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதியும் கூறியதெல்லாம் அனைவரும் அறிந்த வரலாறு. பேரறிவாளன் உள்ளிட்ட தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த நிலையில், அதை மதித்து 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பரிந்துரை தீர்மானத்தை, 09.09.2018ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை, நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தது. ஆனால், அதன்மீது 871 நாட்களாக எந்த முடிவும் எடுக்காமல் அமைதி காத்துவிட்டு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கோப்புகளை தங்களுக்கு ஆளுநர் அனுப்பிவிட்டதாக 25.12.2020 அன்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை தெரிவித்ததில்தான் இவ்வழக்கு முடங்கிவிட்டது. அதை தகர்த்து எழுவரை விடுவிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த மாதம் பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் அவர்கள், 7 தமிழர்களை விடுதலை செய்யும் விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த மே 20ஆம் நாள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். 7 தமிழர் விடுதலை விவகாரத்தை குடியரசுத் தலைவரின் முடிவுக்கு கொண்டு செல்வது, அவர்களின் விடுதலையை தாமதப்படுத்தும் செயல் என்பது மட்டுமின்றி, மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசிடம் தாரைவார்ப்பதற்கு ஒப்பான செயலாகும். 7 தமிழர்களைவிடுதலை செய்யும் அதிகாரம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின்படி தமிழ்நாட்டு ஆளுநருக்கு உண்டு என்று பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் 07.09.2018 அன்று உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாக தீர்ப்பளித்துவிட்ட நிலையில், நாம் தொடர்ந்து தட்ட வேண்டியது சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையின் கதவுகளைத்தானே தவிர, தில்லி குடியரசு மாளிகையின் கதவுகளை அல்ல.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் தங்களுக்கு அனுப்பிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறினாலும் கூட, ஆளுநர் தரப்பிலிருந்து இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை அளித்த பரிந்துரையை ஆய்வுசெய்து ஒப்புதல் அளிக்க வேண்டியது அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின்படி ஆளுநரின் கடமை ஆகும். அதை அவர் தட்டிக்கழிக்க முடியாது. இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்ப முடியாது.

எனவே, 7 தமிழர்கள் விடுதலை குறித்து கடந்த 09.09.2018 அன்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை அளித்த பரிந்துரை மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநருக்கு இப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுத வேண்டும்.நேரிலும் சந்தித்து வலியுறுத்த வேண்டும். பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிடுவதற்கு மனித உரிமைகளில் அக்கறை கொண்ட திறமையான மூத்த வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். அதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சிறை சென்ற மகன் பேரறிவாளன் விடுதலையாகி வீடு திரும்புவதைக் கண்டு அவரது வயது முதிர்ந்த தாயும், தந்தையும் மகிழ்ச்சியடைவதை உறுதி செய்ய வேண்டும். மிக விரைவில் இருள் விலகி ஒளி பிறக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Ramadoss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe