Skip to main content

சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட கொடூரம்: கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்: ராமதாஸ்

Published on 07/07/2020 | Edited on 07/07/2020
Ramadoss

 

திருச்சி அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சியை அடுத்த அதவத்தூர்பாளையத்தில் 14 வயது சிறுமி, அவரது வீட்டுக்கு அருகிலேயே  உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அக்கறை காட்டி பாதுகாக்கப்பட வேண்டிய மழலை மொட்டுகள், மனித மிருகங்களால் சீரழிக்கப்படும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இவை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

அதவத்தூர் பாளையத்தை சேர்ந்த 14 வயது சிறுமி வீட்டிற்கு அருகிலுள்ள குப்பை தொட்டியில் குப்பையை போட்டுவிட்டு வருவதற்காக சென்றபோது மாயமாகியிருக்கிறார். அடுத்த பல மணி நேரம் கழித்து அச்சிறுமியின் உடல் எரிந்த நிலையில் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அப்பகுதியை சேர்ந்த சில மனித மிருகங்கள் அச்சிறுமியை சீரழித்து கொலை செய்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வேலூரை அடுத்த பாகாயத்தில் 10-ஆம் வகுப்பு மாணவியை, அவர் குளிக்கும்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் படம் எடுத்து தங்களின் பாலியல் தேவைகளுக்கு உடன்பட வேண்டும் என்று மிரட்டியதால் அந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது, செய்யூர் அருகில் இளம்பெண் ஒருவர் திமுக நிர்வாகிகளால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டது,  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது என இளம்பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. நமது குழந்தைகள் எவ்வளவு மோசமான, வக்கிரமான மனித மிருகங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதை நினைக்கவே வெட்கமாக உள்ளது.

திருச்சி அருகே சிறுமி எரித்துக் கொள்ளப்பட்ட வழக்கில் காவல்துறையினரின் விசாரணை திருப்தி அளிக்கிறது. கொலையாளிகளை கண்டுபிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐயத்தின் அடிப்படையில் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை விரைவாக கண்டுபிடித்து, அவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத்தரவும், இனியும் இத்தகைய நிகழ்வுகள் நடப்பதை தடுக்கவும் தமிழக அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோரும் தங்களின் குழந்தைகளை யாரையும் நம்பாமல் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்'' என கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.