Skip to main content

ராமதாஸ் மௌனமும் கவனிக்கப்பட வேண்டும்: டி.டி.வி.தினகரன்

Published on 01/06/2019 | Edited on 01/06/2019

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

எட்டுவழிச் சாலைத்திட்டம் நல்ல திட்டம் என்று சட்டமன்றத்திலேயே முழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின், இப்போதாவது மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அத்திட்டத்தை எதிர்த்து அறிக்கை விட்டிருக்கிறார். மகிழ்ச்சிதான். அதேபோல, மக்களின் உணர்வுகளை மதிப்பதாகச் சொன்ன முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, தனது நிலைப்பாட்டை மாற்றாமல், அந்த ஐந்து மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்யாமல், இத்திட்டத்திற்கான தனது எதிர்ப்பை எடுத்துரைக்க வேண்டும். 


  Ramadoss - T. T. V. Dhinakaranமாறாக மத்திய அரசுக்கு சேவகம் செய்யும் தனது வழக்கமான குணத்தால் இத்திட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தால் தமிழகம் ஒருபோதும் அவரையும் இந்த அரசையும் மன்னிக்காது. அத்துடன் ஒரு பெரும் போராட்டத்தை இந்த அரசு சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். 
 

இந்தத் திட்டத்தை எதிர்த்து வழக்குப்போட்ட டாக்டர் ராமதாஸ், அதிமுகவுடன் கூட்டணி வைத்தபோது, எதற்காகவும் எங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று சொல்லியிருந்தார். இப்போது அவரது கூட்டணிக் கட்சியான பிஜேபி ஆளும் மத்திய அரசு மேல்முறையீடு செய்திருக்கும் இந்த சூழலில் அவரது மௌனமும் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.


 

தனது கொள்கையில் உறுதியாக இருந்து அத்திட்டத்தை தொடர்ந்து எதிர்க்கப்போகிறாரா? அல்லது எப்படியாவது இத்திட்டத்தை கொண்டுவர விரும்பும் எடப்பாடியை பகைத்துக்கொண்டால், தனது கட்சிக்கு கிடைக்க வேண்டிய ராஜ்யசபா சீட் கிடைக்காமல் போகலாம் என்பதால் அமைதி காக்கப்போகிறாரா என்பதை அவர் தெளிவுப்படுத்த வேண்டும். இவர்களது அரசியல் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும், மத்திய மாநில அரசுகள், அப்பகுதி மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'முதல்வர் பதவி விலக வேண்டும்' - ஆர்ப்பாட்டத்தை அறிவித்த அதிமுக

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
AIADMK announced the protest 'cheif minister must resign'

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 42 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய மரண சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

AIADMK announced the protest 'cheif minister must resign'

''இந்த மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி, அதிகாரம் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை” எனக் கடுமையாக விமர்சனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார். இந்தநிலையில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக தமிழக அரசைக் கண்டித்து ஜூன் 24ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 24ஆம் தேதி வருவாய் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.

Next Story

உயிரிழப்பு அதிகரிப்பு; கள்ளக்குறிச்சி விரையும் அமைச்சர்கள்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
 increase in casualties; Kallakurichi rushing ministers

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டபடுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், அதனைப் பத்துக்கும் மேற்பட்டோர்கள் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் சாராயம் குடித்த ஜெகதீஷ், பிரவீன், சுரேஷ், சேகர் ஆகிய 4 பேர் கள்ளச்சாரம் அருந்தி உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட ஆட்சியர் தரப்பில் உயிரிழப்பு கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்ததா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனச் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் மறுபுறம் கள்ளச்சாராயம் குடித்ததாலேயே நான்கு பேர் இறந்துள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை மேற்கொண்டு வந்த சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்று கோவிந்தராஜனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நான்கு பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணிகண்டன்(35),  மற்றும் மேலும் இருவர் என உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.