
பா.ம.க தலைவராக இனி அன்புமணி செயல்மாட்டார் என்றும், அவர் இனிமேல் செயல் தலைவராக செயல்படுவார் என்றும் பா.ம.க தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன் என்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அண்மையில் தெரிவித்திருந்தார். ராமதாஸின் இந்த திடீர் அறிவிப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் திருவிடந்தை பகுதியில் கடந்த 11ஆம் தேதி வன்னியர் சங்கம் சார்பில் ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ நடைபெற்றது. அப்போது இருவரும் அருகருகே அமர்ந்திருந்த போதிலும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மேலும் இந்த மாநாட்டில் கட்சி நிர்வாகிகளை ராமதாஸ் கடுமையாகச் சாடியிருந்தார்.
இத்தகைய பரபரப்பான சூழலில் தான் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமானது கடந்த 16ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 8 மாவட்டச் செயலாளர்களும், 7 மாவட்ட தலைவர்கள் மட்டுமே வருகை தந்திருந்தனர். மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட அன்புமணி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மேலும் ராமதாஸ் தலைமையில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற மகளிரணி, மாணவரணி மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்திலும் சொற்ப அளவிலான நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொண்டனர். இதனால், கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், விழுப்புரம் தைலாபுரத்தில் ராமதாஸ் இன்று (19-05-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், பா.ம.கவில் பதவிகள் மாற்றம், பொறுப்பு நீக்கம், புதிய பொறுப்பாளர்கள் நியமனத்திற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராமதாஸ், “இந்த தகவல்கள் எல்லாம் வதந்தி தான். இந்த வதந்தி எல்லாம் வேண்டாம். கட்சியில் மாற்றங்கள் செய்யப்பட்டால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.