Advertisment

“அன்புமணி தான் தவறு செய்தவர்” - ராமதாஸ் பரபரப்பு பேட்டி!

Ramadoss says Anbumani is the one who made the mistake

Advertisment

பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் (நிறுவன) தலைவர் ராமதாஸ் தலைமையில் புதுச்சேரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி (28.12.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாஸ், கட்சியின் மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் என்பவரை (முகுந்தன் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன்) நியமித்து அறிவிப்பினை வெளியிட்டார். இந்த அறிவிப்பை ராமதாஸ் அறிவித்து கொண்டிருக்கும் போதே மேடையில் இருந்த பா.ம.க. (செயல்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி குறுக்கிட்டு, ‘முகுந்தன் கட்சியில் சேர்ந்தே 4 மாதங்கள்தான் ஆகிறது. அவருக்கு என்ன அனுபவம் இருக்கு?’ என்று கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ், “நான் யாரை நியமிக்கிறேனோ அவர்கள்தான் நிர்வாகிகள். நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும்.

பிடித்தால் இருங்கள்; இல்லையென்றால் விலகிக்கொள்ளுங்கள்” என்று ஆவேசமாக கூறினார். இதனைத் தொடர்ந்து அன்புமணி, “எனக்கு என்று தனியாக பனையூரில் அலுவலகம் இருக்கிறது. என்னை பார்க்க வேண்டும் என்றால் அங்கு வாருங்கள்” என்று கூறிவிட்டு கூட்டத்தில் இருந்து பாதியிலேயே சென்றுவிட்டார். இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரத்தில் ராமதாஸ் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி (10.04.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பா.ம.க. தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். அன்புமணி இனி பா.ம.க. செயல் தலைவராகச் செயல்படுவார்” எனப் பேசியிருந்தார். ராமதாஸின் இந்த திடீர் அறிவிப்பு பா.ம.க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் “நானே பா.ம.க தலைவராகச் செயல்படுவேன்” என அன்புமணியும் அறிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் திருவிடந்தை பகுதியில் கடந்த 11ஆம் தேதி (11.05.2025) வன்னியர் சங்கம் சார்பில் ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ நடைபெற்றது. அப்போது இருவரும் அருகருகே அமர்ந்திருந்த போதிலும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மேலும் இந்த மாநாட்டில் கட்சி நிர்வாகிகளை ராமதாஸ் கடுமையாகச் சாடியிருந்தார். இத்தகைய பரபரப்பான சூழலில் தான் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமானது கடந்த 16ஆம் தேதி (16.05.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 8 மாவட்டச் செயலாளர்களும், 7 மாவட்ட தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட அன்புமணி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

Advertisment

இந்நிலையில் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “ தர்மபுரியில் ஒரு கூட்டத்தில் அன்புமணி பேசியது குறித்துப் பார்த்திருப்பீர்கள். நானும் பார்த்தேன். நாடும் பார்த்தது. நான் என்ன குற்றம் செய்தேன்?. ஏன் எனக்கு இந்த பதவி நீக்கம் அல்லது பதவி இறக்கம் என்று அன்புமணி சொல்லி இருக்கிறார். இது முழுக்க முழுக்க மக்களையும் கட்சிக்காரர்களையும் திசை திருப்பும் முயற்சியாகும். தான் செய்த தவறுகளை மறைத்து மக்களிடமும் கட்சிக்காரர்களிடமும் அனுதாபம் பெற முயற்சித்திருக்கிறார். இருப்பினும் அதற்குண்டான விளக்கத்தையும் பதிலையும் அளிப்பது எனது கடமையாகும். அன்றே அந்த மண்டபத்தில் (பத்திரிக்கையாளர்கள்) கேள்வி கேட்டீர்கள். இதே கேள்வியைக் கேட்டீர்கள் அதற்குப் பதில் சொல்கிறேன் என்று சொன்னேன். இனிப்பைத் தவிர்த்து கசப்பான வார்த்தைகளைக் கொண்ட மருந்தைத்தான் பதிலாகக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Ramadoss says Anbumani is the one who made the mistake

சொல்லப்போனால் தவறு செய்தது அன்புமணி அல்ல. அன்புமணியின் 35வயதில் என்னுடைய சத்தியத்தையும் மீறி மத்திய கேபினெட்அமைச்சராக்கி நான் தான் தவறு செய்துவிட்டேன். என்ன தவறு செய்தேன் எனக் கேள்வி கேட்டு என்னைக் குற்றவாளியாக மக்கள் மத்தியிலும் கட்சிக்காரர்களிடமும் அடையாளம் காட்டி அனுதாபத்தைப் பெற முயற்சிக்கிறார். நான் அவருக்குப் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும். அன்புமணி தான் தவறு செய்தவர். தவறான ஆட்டத்தைத் துவக்கி முதலில் அடித்து ஆட ஆரம்பித்தது அன்புமணிதான். ஏதோ நான் போகிற போக்கில் சும்மா சொல்லிவிட்டுப் போகவில்லை. ஆதாரத்தோடு இன்று ஒளிவு மறைவின்றி நடந்ததை அப்படியே வெளிப்படுத்துகின்றேன். பாண்டி பொதுக்குழுவில் என்ன நடந்தது என்பதை உலகமே பார்த்து அதிர்ந்தது ஒட்டுமொத்த பொதுக்குழுக் கூட்டமும், ஊடக நண்பர்களும் சேர்ந்து அதிர்ச்சிக்குள்ளானீர்கள்.

மேடை நாகரிகமோ அல்லது சபை நாகரிகமோ எதையும் கடைப்பிடிக்காமல் எடுத்தேன் கவித்தேன் எனப் பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொண்டது யார். நான் ஒரு அறிவிப்பை வெளியிட்டேன். முகந்தனை இளைஞரணி செயலாளர் என்று வீட்டில் எனக்கு உதவியாகவும் கட்சியில் அன்புமணிக்கு உதவியாகவும் இருக்க முகுந்தனை நியமனம் செய்தேன். சுவற்றில் வீசிய பந்து திரும்புவது போல உடனே மேடையிலேயே மறுப்பு தெரிவித்தது சரியான செயலா?. மேடையில் மேடை நாகரிகம் கருதாமல் அனைவரின் முன்பும் காலை ஆட்டிக்கொண்டிருந்தது சரியான செயலா?. மைக்கை தூக்கி என் தலையில் போடாத குறையாக டேபிளில் வீசியது சரியான செயலா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

anbumani ramadoss pmk Ramadoss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe