Skip to main content

நரேந்திர மோடியிடம் ராமதாஸ் கொடுத்த மனு!

 

வண்டலூர் கிளாம்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற மோடியிடம் பிரதமர் நரேந்திர மோடியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் மனு அளித்தார். மனுவின் முழு விவரம் வருமாறு:
 

அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு,
 

பொருள்: 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் & அது குறித்த அமைச்சரவைத் தீர்மானத்தை நிறைவேற்றக் கோருதல் - தொடர்பாக

 

தமிழ்நாட்டு மக்களின் உணர்வு மற்றும் மனிதநேயம் சார்ந்த மிக முக்கியப் பிரச்சினை குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த கோரிக்கை மனுவை மாண்புமிகு இந்தியப் பிரதமராகிய தங்களின் பார்வைக்காகவும், பரிசீலனைக்காகவும் தமிழக மக்களின் சார்பில் முன்வைக்கிறேன்.

 

ramadoss - modi


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தொடக்கத்தில் தூக்கு தண்டனை விதிக்கப் பட்டு, பின்னர் பல்வேறு காலகட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டது. இவர்கள் அனைவரும் 1991&ஆம் ஆண்டு முதல் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
 

இந்த வழக்கில் பேரறிவாளனுக்கு எந்த தொடர்பும் இல்லை; அவரது வாக்குமூலத்தை தாம் திரித்து எழுதியதால் தான் அவர் தண்டிக்கப்பட்டார் என்று இந்த வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரி தியாகராஜன் ஒப்புக் கொண்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்து அவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக கே.டி.தாமஸ், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்டோர் குற்றம் செய்திருப்பார்கள் என்று தாம் நம்பவில்லை என்றும், அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்கள் ராஜிவின் துணைவியாரான சோனியா காந்திக்கு  தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார்.
 

7 தமிழர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா? மாநில அரசுக்கு உள்ளதா? என்பது குறித்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6&ஆம் தேதி தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், 7 தமிழர்களையும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161&ஆவது பிரிவின்படி ஆளுனர் மூலம் அவர்களை தமிழக அரசு விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிதிருந்தது. அதனடிப்படையில்,  7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 9&ஆம் தேதி நிறைவேற்றி தமிழக ஆளுனர் பன்வாரிலாலுக்கு அனுப்பி வைத்தது. அதன்மீது ஆளுனர் விரைந்து முடிவெடுப்பார் என்று ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்தது; காத்துக் கொண்டிருக்கிறது.
 

தமிழக அமைச்சரவையின் பரிந்துரை ஆளுனருக்கு அனுப்பப்பட்டு இன்றுடன் 179 நாட்கள்  நிறைவடைந்து விட்டன. ஆனால், 7 தமிழர்கள் விடுதலை குறித்து  தமிழக ஆளுனர் அலுவலகம் இன்று வரை எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது. 7 தமிழர்களை விடுதலை செய்ய சட்டப்படி எந்த தடையும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டு விட்டன. அதற்கெல்லாம் மேலாக 7 தமிழர்களை விடுதலை  செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு அளித்திருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகு 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுனர் தாமதிப்பது ஏன்? எனத் தெரியவில்லை.
 

7 தமிழர்களையும் விடுதலை செய்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ராஜிவ் காந்தியின் துணைவியார் சோனியா காந்தி அவர்களும், புதல்வர் ராகுல் காந்தி அவர்களும் பல்வேறு கால கட்டங்களில் கூறியுள்ளனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ்,  விசாரணை அதிகாரி தியாகராஜன் ஆகியோரும் இந்த வழக்கில் 7 தமிழர்களும் விடுதலை செய்யப் படுவது தான் சரியானது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மறைந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், கேரளத்தின் முன்னாள் சட்ட அமைச்சரும், மனித உரிமை ஆர்வலருமான வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களும் 7 தமிழர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு காலகட்டங்களில் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 

7 தமிழர்களை விடுதலை செய்ய வலிவான காரணங்கள் உள்ளன; அவர்களின் விடுதலைக்கு எதிராக எந்த காரணமும் இல்லை. அவ்வாறு இருக்கும் போது அவர்களின் விடுதலை தொடர்பான முடிவை ஆளுனர் தாமதிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. அதுமட்டுமின்றி, 7 தமிழர்களும் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அவர்களை தொடர்ந்து சிறைகளில் அடைத்து வைத்திருப்பது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படக் கூடும்.
 

எனவே, இனியும் தாமதிக்காமல் 7 தமிழர்களையும் விடுதலை செய்யத் தேவையான நடவடிக்கைகளை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாண்புமிகு இந்தியப் பிரதமராகிய தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அதற்காக ஒட்டுமொத்த தமிழகமும் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும் என்பதையும் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருக்கிறது.