/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramadoss-in_3.jpg)
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார் (வயது 93) வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று (17/05/2021) காலமானார். சென்னை சாலிகிராமம் வீட்டில் உயிரிழந்த துளசி அய்யாவின் உடல் சொந்த ஊரான பூண்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் துளசி அய்யாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது; “காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், கல்விக் கொடையாளருமான பூண்டி துளசி அய்யா வாண்டையார் அவர்கள் காலமானர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தமிழகத்தின் பெருநிலக்கிழார்களில் ஒருவர். தமது குடும்பத்தின் செல்வம் ஏழை, எளிய மக்களுக்குபயன்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் பூண்டி கிராமத்தில் மிகப்பெரிய கல்லூரியை உருவாக்கி, அரசு உதவியுடன் உயர்கல்வி வழங்கியவர். காவிரி டெல்டா மாவட்டங்களின் அனைத்து கிராமங்களிலிருந்தும் பூண்டி கல்லூரியில் படிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவரது கல்லூரியில் படித்தவர்கள் உலகின் பல நாடுகளில் நல்ல வேலைகளில் உள்ளனர். கல்வி மட்டுமே மக்களை உயர்த்தும் என்பதை உணர்ந்து, அதை செயல்படுத்திக் காட்டியவர் அவர்.
இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் காமராசர், இராஜாஜி உள்ளிட்ட தலைவர்களுடன் நெருங்கி பழகியவர். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர். பூண்டி பகுதியின் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் உதவியர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)