Advertisment

ராஜ்யசபா சீட்... எடப்பாடி பழனிசாமியிடம் 40 மாவட்ட செயலாளர்கள் மனு

தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக இன்று முதல் 8-ம் தேதி வரை வேட்பு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

rajya sabha members P Wilson, K Shanmugam

இந்த தேர்தலில் திமுக சார்பில் 3 பேரும், அதிமுக சார்பில் 3 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் எம்பிக்கள் யார் என்றஎதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதில் ஒரு இடம் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. மற்ற இரண்டு இடங்களில் வழக்கறிஞர் வில்சன், தொமுச சண்முகம் ஆகியோர் போட்டியிடுவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வில்சன் மற்றும் சண்முகம் ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிலையில், அதிமுகவுக்கு கிடைக்கும் 3 மாநிலங்களவை எம்பி பதவிகளை கேட்டு அக்கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மக்களவைக்கான தேர்தல் கூட்டணி ஏற்பட்டபோதே, பாமகவுக்கு 7 சீட் மற்றும் ஒரு மாநிலங்களவை எம்பி பதவி என்று ஒப்பந்தம் போடப்பட்டது. அதனால் பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி பதவியை கொடுக்க வேண்டிய சூழ்நிலை அதிமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 2 இடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

Advertisment

அதிமுக சார்பில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேனுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் 40 எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர்கள் மனு அளித்துள்ளனர். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

eps

ஏற்கனவே தனக்கு 81 வயதாகிறது. இதுவரை தான் எம்.பி., எம்.எல்.ஏ., ஆனதில்லை என்று தமிழ்மகன் உசேன் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், கடந்த 65 ஆண்டுகளாக (1954 முதல் 2019 வரை) பொதுவாழ்க்கையில் இருக்கிறேன். 1972ம் ஆண்டு அதிமுக தொடங்கப்பட்டதில் இருந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்து கட்சியில் பல்வேறு பணிகளில் தொடர்ந்து இருந்து வருகிறேன். தற்போது எனக்கு 81 வயதாகிறது. இதுவரை சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியதில்லை. இது எனக்கு வேதனையாக இருக்கிறது. எனவே அதிமுகவில் நான் ஆற்றிய பணிகளை எண்ணி பார்த்து, எனதுஉழைப்பையும், தியாகத்தையும், முதுமையையும் கருதி, இஸ்லாமியனாகிய எனக்கு வருகிற ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கும் மாநிலங்களவை தேர்தலில் எம்பி பதவியை அதிமுக சார்பில் எனக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதேபோல் ஏற்கனவே ராமநாதபுரம் முன்னாள் அதிமுக எம்பி அன்வர் ராஜாவும் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, கோகுல இந்திரா, மைத்ரேயன், மனோஜ்பாண்டியன், பொன்னையன் உள்பட 10க்கும் மேற்பட்டோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டு எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

District Secretaries Edappadi Palanisamy Rajya Sabha
இதையும் படியுங்கள்
Subscribe