Advertisment

பா.ஜ.க.வுக்கு பல்லக்கு தூக்குவதற்கு ரஜினிகாந்த் தயாராகிவிட்டார்: கே.எஸ்.அழகிரி

பா.ஜ.க.வுக்கு பல்லக்கு தூக்குவதற்கு ரஜினிகாந்த் தயாராகிவிட்டார். ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் முகமூடி இன்றைக்கு அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Advertisment

rajinikanth ks alagiri

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியாவில் உள்ள மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற நோக்கத்தில் மத்திய பா.ஜ.க. அரசு இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இதை எதிர்த்து நாட்டு மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு தங்களது எதிர்ப்புகளை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். குடியுரிமை சட்டத் திருத்தம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எதிரானது என்கிற உணர்வு இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் மத்திய பா.ஜ.க. அரசின் மதவெறி அரசியல் தான்.

Advertisment

அண்ணல் அம்பேத்கர் வகுத்தளித்த இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 14, 15, 21 இந்திய நிலப்பரப்பில் வாழ்கிற அனைவரும் இந்தியர்களே என்று சமஉரிமை வழங்கியிருக்கிறது. மதச்சார்பற்ற கொள்கை என்பது அதன் ஜீவநாடியாக விளங்கி வருகிறது. இதை தவறு என்று ரஜினிகாந்த் கூறுகிறாரா ? அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிராக குடியுரிமை சட்டத் திருத்தம் அமைந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை பயன்படுத்தி, இந்தியாவில் உள்ள மக்களை மதரீதியாக கணக்கெடுப்பு எடுப்பதற்கு ஆதாரங்களை திரட்டுகிற முயற்சியில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சிகள் மக்களிடையே கடும் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த், ‘இதனால் நாட்டு மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, அரசியல் கட்சிகள் மக்களிடையே தவறான பிரச்சாரத்தின் மூலம் பீதியை கிளப்பி வருகிறார்கள்” என்று கருத்து கூறியிருக்கிறார். எப்படியோ பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ரஜினிகாந்த் யார் என்பதை அடையாளம் காட்டுவதற்கு இக்கருத்து ஒன்றே போதும். ஆன்மீக அரசியல் என்ற முகமூடி இன்றைக்கு கிழித்தெறியப்பட்டிருக்கிறது. மதங்களை பிளவுபடுத்துவது தான் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலா ? சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகு நீ எந்த மதத்தைச் சார்ந்தவன் ? உன் தந்தை எந்த மதத்தைச் சார்ந்தவன் ? நீ எங்கே பிறந்தாய் ? என்று ரிஷிமூலம், நதிமூலம் கேட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுவதுதான் ஆன்மீக அரசியலா ?

நண்பர் ரஜினிகாந்;த் அவர்களே, உடன் இருப்பவர்கள் கூறுவதை நம்பி பேசுவதனால் பல விளைவுகளை இதுவரை சந்தித்து வருகிறீர்கள். இந்நிலை தொடர்ந்தால் கடுமையான வீழ்ச்சியை நோக்கி நீங்கள் தள்ளப்படுவீர்கள் என்று உங்களை எச்சரிக்க விரும்புகிறேன். யாருடைய உதவியும் இல்லாமல் தயவு செய்து இந்திய குடியுரிமை சட்டம் 1955, குடியுரிமை சட்டத் திருத்தம் 2019 இரண்டையும் தயவு செய்து படித்து ஒப்பிட்டுப் பாருங்கள். அரசியல் வேறு, சினிமா வேறு. சினிமாவில் கதை வசனம் எழுதினால் அதை அப்படியே பேசுவது உங்களுக்கு கைவந்த கலை. ஆனால், அரசியலில் பிறர் எழுதிக் கொடுப்பதை நீங்கள் உள்வாங்கிக் கொண்டு அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா ? என்று உங்கள் அறிவைப் பயன்படுத்தி ஒரு முடிவிற்கு வந்த பிறகு நீங்கள் கருத்து கூறுவது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும்.

சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி., என்பவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இந்த மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை. இதை அமல்படுத்தும் போது பாதிக்கப்படப் போவது 17 கோடி முஸ்லீம் மக்கள் மட்டுமல்ல, மூன்றுகோடி கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, 83 கோடி இந்துக்களும் இதனால் பாதிக்கப்படப் போகிறார்கள். ஆதாரங்களை வழங்கி குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெறவில்லை என்றால், ‘சந்தேகத்திற்குரிய குடிமக்கள்” என்கிற முத்திரை குத்தப்படும். இதனால் தான் அசாம் மாநிலத்தில் 19 லட்சம் பேர் இந்திய குடிமக்களே அல்ல, அந்நியர்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் இந்துக்களும், முஸ்லீம்களும் அடங்குவர் என்பதை ரஜினிகாந்த் அறிவாரா ? இவர்களில் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமது குடும்பத்தாரும் உண்டு, கார்கில் போர் வீரரும் உண்டு, அசாமில் அமைக்கப்பட்டிருப்பதைப் போல தடுப்பு முகாம்களை இந்தியா முழுவதும் அமைக்க வேண்டுமென்று ரஜினிகாந்த் விரும்புகிறாரா ?

தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் 30 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். இலங்கைக்கு செல்ல விரும்பாத பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கேற்ப இந்திய குடியுரிமை வழங்க மத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் வாய்ப்பு வழங்கவில்லை. இதை கண்டிக்கிற வகையில் ரஜினிகாந்த் குரல் கொடுப்பரா ? தமக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி, நரேந்திர மோடியிடம் பேசுவாரா ? இதையெல்லாம் கண்டும் காணாமல் பொத்தாம் பொதுவாக குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து பேசுகிற ரஜினிகாந்தை தமிழக மக்கள் புரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பை அவரே வழங்கியிருக்கிறார். அவர் யார் என்பது இப்போது தெரிந்து விட்டது. இதன்மூலம் தமிழர்களின் விரோதியாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

எனவே, தமிழக அரசியலில் வகுப்புவாத பா.ஜ.க.வுக்கு பல்லக்கு தூக்குவதற்கு ரஜினிகாந்த் தயாராகிவிட்டார். ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் முகமூடி இன்றைக்கு அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் எந்த பாதையில் அவரை அழைத்துச் செல்ல வேண்டுமென்று அவரை இயக்குபவர்கள் முடிவு செய்திருக்கிறார்களோ, அந்தப் பாதையில் பயணிக்க ரஜினிகாந்த் தயாராகி விட்டார். இதன்மூலம் தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ரஜினிகாந்திற்கு ஏற்படப் போகிறது. இதுவரை ரஜினிகாந்தை ஒரு நடிகராக பார்த்த தமிழக மக்கள் இனி பா.ஜ.க.வின் ஊதுகுழலாக அவரை பார்க்க வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது''. இவ்வாறு கூறியுள்ளார்.

rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe