Advertisment

ரஜினியின் வழியிலேயே ரசிகர்கள்..! - மன்றத்தினரின் தவிப்பும் தனிவழியும்.. 

Rajini makkal mandram virudhunagar district secretary

Advertisment

விருதுநகர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் முருகன் நம்மைச் சந்தித்து “திமுக தரப்பிலிருந்து எனக்கும் வலைவீசுகிறார்கள் என்று மதுரை மாவட்ட நிர்வாகி கூறியதாக ‘நக்கீர’னில் செய்தி வந்திருக்கிறது. ‘தலைவர்’ அரசியலுக்கு வரவில்லை என்றாலும், என்னைப் போன்ற 99 சதவீத ரசிகர்களுக்கு, என்றென்றும் ரஜினி மட்டுமே தலைவர். அவரைத் தலைவர் என்று சொன்ன வாயால், எங்கள் உயிருள்ளவரை, வேறு யார் பெயரையும் தலைவரென்று உச்சரிக்கமாட்டோம்” என்றவர், “தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட மன்றங்களும், 30 ஆயிரத்துக்கும் மேல் பதிவு செய்யப்படாத மன்றங்களும் உள்ளன. இரண்டு வருடங்களுக்கு முன், ஒரு கோடி பேர் என்ற இலக்குடன் களத்தில் இறங்கியபோது, ஒரே வாரத்தில் செல்ஃபோன் ஆப் மூலம் 60 லட்சம் பேர் வரை இணைந்தனர். இதெல்லாம் வெளிப்படையான கணக்கு. எட்டு கோடி மக்கள் வாழும் தமிழகத்தில், ரஜினியை ரசிப்பவர்கள், அவர் தலைவராகி முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற ஏக்கத்தை மனதில் புதைத்திருந்தவர்கள், கோடானுகோடி பேர்” என புள்ளிவிபரம் தந்தார்.

‘ரஜினியே அரசியல் வேண்டாமென்று சொல்லிவிட்டார். மன்றத்தினரும் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இணையத் தொடங்கிவிட்டனர். இன்னுமா ரஜினி ஆதரவு எண்ணிக்கை அப்படியே இருக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது?’ என்று கேட்டபோது, “திரையுலகில் ஜாம்பவன்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜியோடு, தன்னை ஒப்பிட்டு மன்றத்தினர் பேசுவதை தலைவரே (ரஜினி) விரும்பமாட்டார். ஆனாலும், இன்றைய சூழ்நிலையில், சில விஷயங்களைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்” என்று நிறைய பேசினார் முருகன். அதனைத் தொகுத்துள்ளோம்.

திரையில் எம்.ஜி.ஆர். – சிவாஜி – ரஜினி!

‘மக்கள் திலகம்’ என்றால் அது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருந்தும். முதலமைச்சரானதால், 61 வயதிலேயே அவர் சினிமாவில் நடித்து முடித்துவிட்டார். 1978-ல் அவர் கடைசியாக நடித்து ரிலீஸான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’, 60 நாட்களே ஓடியது. 1977-ல் வெளிவந்த ‘நவரத்தினம்’கூட தோல்விப்படம்தான். இறந்து 33 வருடங்கள் ஆகியும், தமிழக மக்களின் மனதில் அழுத்தமாக இடம்பிடித்திருக்கும் வசூல் சக்ரவர்த்தி எம்.ஜி.ஆருக்கே, வெறும் 30 நாட்கள் மட்டுமே ஓடிய ‘பட்டிக்காட்டு பொன்னையா’, 40 நாட்கள் ஓடிய ‘காதல் வாகனம்’ போன்ற வணிக ரீதியாக வரவேற்பில்லாத சினிமாக்களும் உண்டு.

Advertisment

நடிப்பில் இமயம் என்றால் சிவாஜி மட்டும்தான். அவருக்கு இணையாக எந்த நடிகரும் கிடையாது. தன்னுடைய 56-வது வயதில், ‘தாவணிக் கனவுகள்’ படத்தில் பாக்யராஜோடு துணை வேடத்தில் நடித்தார். ‘முதல் மரியாதை’க்குப் பிறகு, பல படங்களிலும் கார்த்திக், விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜுன், விஜய் போன்ற ஹீரோக்களுடன், அவரால் துணை பாத்திரங்களிலேயே நடிக்க முடிந்தது. ‘படையப்பா’வில் ரஜினியோடு சிவாஜி நடித்தபோது, அவருக்கு வயது 71. வேடம் எதுவென்றாலும் ஏற்றுக்கொண்டு, அதில் தன்னுடைய நடிப்பு முத்திரையைப் பதித்தவர் சிவாஜி. எம்.ஜி.ஆருடன் தனது 26-வது வயதில் சிவாஜி வில்லனாக நடித்த படம் ‘கூண்டுக்கிளி’. அதே சிவாஜி நடித்த கடைசிப் படம் ‘பூப்பறிக்க வருகிறோம்’. அஜய் என்ற புதுமுகத்தோடும் தயக்கமில்லாமல் நடித்தார். அதன்பிறகு, 2 ஆண்டுகள் அவர் நடிக்கவேயில்லை. 73 வயதில் இறந்துவிட்டார்.

எம்.ஜி.ஆர். நடித்தது 42 ஆண்டுகள். சிவாஜி நடித்தது 47 ஆண்டுகள்.1975-ல் வில்லனாக நடிக்க ஆரம்பித்து, 1978-ல் ஹீரோவாகி, இன்று வரையிலும் தமிழ்த்திரையுலகில் சூப்பர் ஸ்டார் இடத்தை தக்கவைத்திருக்கிறார் ரஜினி. எம்.ஜி.ஆர்., சிவாஜியைப் போலவே, கடந்த 45 ஆண்டுகளில் ரஜினிக்கும் ‘லிங்கா’, ‘பாபா’ போன்ற வசூலில் சொதப்பிய படங்கள் உண்டு. உடல் நலிவுற்றும்,வயது எழுபது ஆகியும், ‘கபாலி’, ‘காலா’, ‘பேட்ட’, ‘தர்பார்’ என சமீபத்திய படங்கள் வரை, அவர் ஏற்றிருந்தது வீரதீர ஹீரோ கேரக்டர்கள்தான். ஆனாலும், சூப்பர் ஸ்டார் இமேஜ் குறித்த கவலையே இல்லாமல், தன்னுடைய உடல்நிலைக் குறித்து, இத்தனை வெளிப்படையாக அறிவித்துள்ளார். இந்த அம்சம் ரஜினிக்கே உரித்தானது.

அரசியல் ஆழம் தெரியாமல் காலைவிடும் மன்றத்தினர்!

போலித்தனம் இல்லாத அவர், அரசியலுக்கு வந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். ஆனால், முதுமையும் உடல்நிலையும் ஒத்துழைக்க மறுக்கும்போது, அவர் எடுத்த முடிவு மிகச் சரியானதுதான். அவருடைய உடல்நலத்தில் அக்கறை உள்ளவர்கள் என்றால், அரசியலுக்கு வந்தே ஆகவேண்டும் என்று கூறுவார்களா? கொடுமையாக இருக்கிறது. எங்களில் ஒருசிலரின் நடவடிக்கையைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.

‘பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா.. சோதனையை பங்கு வச்சா சொந்தமில்ல பந்தமில்ல..’ என்றொரு சினிமா பாட்டு இருக்கிறது. நிஜத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.

‘இனியும் ரஜினி ரசிகராக, மன்றப் பொறுப்பில் நீடித்தால், எதுவும் கிடைத்துவிடாது.எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றிக்கொள்ள முடியாது..’ என்பது தெரிந்துதான், சென்னையில் சிலர் திமுகவில் சேர்ந்திருக்கிறார்கள். இங்கே ராஜபாளையத்தில் சிலர், அதிமுகவில் சேர்ந்திருக்கிறார்கள். ரஜினி ரசிகர்களில் இவர்களைப் போன்றவர்கள் ஒரு சதவீதம்கூட இருக்க மாட்டார்கள். இவர்கள்தான், அரசியல் ஆழம் தெரியாமல் காலை விட்டிருக்கிறார்கள். என்னைப் போன்ற 99 சதவீதம் பேர், நிச்சயம் தடம் மாறமாட்டார்கள்.

என்ன மரியாதை கிடைத்துவிடும்?

நான் கேட்கிறேன். இங்கிருந்து போய் அரசியல் கட்சிகளில் சேர்ந்திருக்கிறார்களே? இவர்களால் எப்படி ரஜினி ஆதரவு வாக்குகளைக் கவர்ந்துவிட முடியும்? ரஜினி மன்ற மாவட்டச் செயலாளராகவோ, நகரச் செயலாளராகவோ இருந்தவர் பின்னால் ரஜினியை உண்மையிலேயே நேசிக்கும் ரசிகர்கள் போவார்களா? தேர்தல் நேர சில்லறைகளாகத்தானே இவர்களை மக்கள் பார்ப்பார்கள்? இவர்களுக்கு என்ன மரியாதை கிடைத்துவிடப் போகிறது? இவர்களால் எம்.எல்.ஏ. ஆக முடியுமா? அமைச்சராக முடியுமா?

பெற்றோரைக் கைவிட்ட பிள்ளைகளைப் போல்!

இதையெல்லாம் பார்க்கும்போது தலைவர் (ரஜினி) மனது என்ன பாடுபடும்? ‘நான் அரசியலுக்கு வந்த பின்னால் நிறைய சம்பாதிக்கலாம் என்ற உள்நோக்கத்தோடு மன்ற நிர்வாகிகளாக என்னிடமே நடித்தார்களா? ஒருவேளை, நான் அரசியல் கட்சி ஆரம்பித்திருந்தால், இவர்கள்தானே முண்டியடித்து முன்னால் வந்திருப்பார்கள்? இவர்களை வைத்துக்கொண்டு என்னால் மக்களுக்கு என்ன செய்திருக்க முடியும்?’ என்றல்லவா, மனப்புழுக்கத்தில் இப்போது அவர் தவிப்பார். வயதான காலத்தில் நோய்வாய்ப்பட்ட பெற்றோரைக் கவனிக்காமல் கைவிட்ட பிள்ளைகளைப் போலவே, என் கண்ணுக்கு இவர்கள் தெரிகிறார்கள்.

மன்னிப்புக்கு மரியாதை தர வேண்டாமா?

ஒரு நடிகருக்கும் ரசிகருக்கும் என்ன தொடர்பு? நடிப்பை ரசிப்பது மட்டும்தானே?‘கட்சியும் வேணாம்; ஒரு கொடியும் வேணாம்..’, ‘கட்சியெல்லாம் இப்ப நமக்கெதற்கு?’ என்ற எண்ணமே, அவரது படத்தில் பாடல்களாக வந்தன. ஒருகட்டத்தில்,‘அது யாரோ எழுதிய வசனம். நான் பேசியிருக்கேன். அதை உண்மைன்னு நீங்க எடுத்துக்கிட்டா நான் என்ன செய்யறது?’ என்று அரசியல் என்ட்ரி குறித்த கேள்விக்கு சினிமா மூலமாகவே பதிலளித்தார். ஆனாலும், விடுவதாக இல்லை. மாய்ந்து மாய்ந்து வசனம் எழுதினார்கள். அவரும் பேசினார். சினிமா வெற்றிக்கு இதெல்லாம் தேவைப்பட்டது. இதற்கு அவரும் ஒத்துப்போனார். ஆனால், நேரமும் காலமும் ஒத்துழைக்கவில்லை. அதனால், ‘என்னை மன்னியுங்கள்’ என்று அறிக்கையே வெளியிட்டார். ‘தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு சேவை செய்வேன்.’ என்றார். தலைவர் கேட்ட மன்னிப்புக்கு மரியாதை தர வேண்டாமா? பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா? மன்றத்தினரில் வெகுசிலர் அரசியல்தான் வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார்கள். அவர்கள்தான், அரசியல் கட்சிகளில் போய் ஒட்டியிருக்கிறார்கள்.

தலைவரே அரசியல் வேண்டாமென்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டார். நாங்களும் அவர் வழியில், எங்களுக்கு இந்த அரசியல் தேவையில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். தலைவர் மீதான அன்பு ஒன்றே போதும் என்று வாழ்க்கையைத் தொடர்கிறோம். தலைவர் எப்போதும் சொல்வார். ‘உங்களுக்கு குடும்பம்தான் முக்கியம். முதலில் குடும்பத்தைக் கவனியுங்கள். பிறகுதான் மற்றது எல்லாமே!’ என்பார். எல்லாருக்கும் குடும்பம் இருக்கிறது” என்று விரிவாகவே பேசினார் முருகன்.

தமிழகத்தில் தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா காலத்திலிருந்தே, நடிகர்களை ரசிகர்கள் கொண்டாடுவது இருந்துவருகிறது. அதுவே, எம்.ஜி.ஆர்., சிவாஜி எனத் தொடர்ந்து, ரஜினி, கமல் வரை, அரசியலுக்கு இழுக்கும் மனநிலைக்கு ரசிகர்களைத் தள்ளியிருக்கிறது. ஆனாலும், அரசியலுக்கு ‘நோ’ சொல்லிவிட்ட ரஜினிக்கும் ரசிகர்களுக்கும் இடையில் உள்ள பந்தம் அழுத்தமாகவே தொடர்வது, அற்புதமான அதிசயமே.

Virudhunagar rajnikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe