Skip to main content

“ஆண்கள் அனைவரும் குற்றவாளிகளா.. இது ஆண், பெண் என்ற பாகுபாட்டை அதிகப்படுத்தும்..” - ராஜேஸ்வரிபிரியா

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

Rajeswaripriya condemn for Anbil Mahesh Announcement

 

சென்னையில் அமைந்துள்ள பி.எஸ்.பி. பள்ளியில் பணியாற்றிவந்த ராஜகோபாலன் எனும் ஆசிரியர், ஆன்லைன் வகுப்பின்போதும், பள்ளி நேரங்கள் முடிந்த பிறகும் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்துவந்தார். இவர்மீது அப்பளியின் முன்னாள் மற்றும் தற்போது பயின்றுவரும் மாணவிகளும் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணை நடந்துவருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம், ஆன்லைன் வகுப்பிற்கு வழிமுறைகளை வகுத்தது. அதுமட்டுமின்றி, மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவர் என அறிவிப்பை வெளியிட்டிருந்தது. 

 

இதனைக் கண்டித்தும் இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால், இது ஆண் பெண் என்ற பாகுபாட்டை அதிகப்படுத்தும் என்றும் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரிபிரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும் என்ற கருத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டிருந்தார். அந்த  யோசனை மிக தவறானது. ஆண், பெண் என்ற பாகுபாட்டை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எல்லா ஆண்களுமே பெண்களுக்கு எதிரானவர்கள் என்ற மனநிலையை உருவாக்கிவிடும்.

 

பெண்கள் அஞ்சாமல் எல்லாவற்றையும் எதிர்கொண்டு தீர்வு காண்பவர்களாக மாற‌ வேண்டுமே தவிர, ஆண்களைக் கண்டு அஞ்சி வாழ வேண்டும் என்ற‌ அவசியமில்லை. ஒரு ஆண் தவறாக பார்த்தாலோ, பேசினாலோ நெலிந்துகொண்டு கேட்பதை விடுத்து, நிமிர்ந்து நின்று தன் எதிர்ப்பு மனநிலையை வெளிபடுத்த பழக வேண்டும். பின் அதனை பெற்றோரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளின் நோட்டீஸ் பதாகையிலும் பாலியல் புகாரை அரசிடம் பதிவு செய்யும் தொடர்பு எண் எப்போதும் நன்றாக தெரியும்படி இருக்க வேண்டும்.

 

பள்ளிக்கல்வித்துறை தனி குழுக்களை அமர்த்தி புகார் கிடைத்த உடனே விசாரனை நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். கால தாமதமின்றி வழக்குப் பதிவுசெய்து சிறப்பு நீதிமன்றம் மூலமாக குற்றவாளிகள் மீது தண்டனைகள் கடுமையாக வழங்கப்பட வேண்டும் அதுவே அடுத்தடுத்த குற்றவாளிகள் உருவாகாமல் தடுக்குமே தவிர, பெண்கள்‌‌ இருக்கும் இடத்தில் ஆண் (ஆசிரியர்கள்) இருக்க கூடாது என்பதல்ல. இது ஆண், பெண் பிரிவினையை அதிகப்படுத்தி பின்னோக்கிய சமுதாயத்தை உருவாக்கிவிடும்.

 

பெண்கள் வீரத்தை வளர்த்துக்கொண்டு வலிமை உடையவர்களாக தங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர, பயந்து ஓடுபவர்களாக அல்ல‌. இப்படி எத்தனை இடங்களையும் துறைகளையும் பெண்கள் மட்டுமே உள்ள இடமாக மாற்ற முடியும்? பெண்கள் நாடு, ஆண்கள் நாடு என்று உருவாக்க முடியுமா? கடுமையான தண்டனையே தீர்வாக அமையும் என்பதை மனதில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்று‌ அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பாக கோரிக்கை வைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்