Skip to main content

ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன்... உச்சநீதிமன்றம் உத்தரவு!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

 Rajendrapalaji granted bail by Supreme Court

 

பணமோசடி புகாரில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

 

ஆவின் மற்றும் அரசுத்துறைகளில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 கோடி வரை மோசடி செய்தார் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது அதிமுக முன்னாள் ஒ.செ.விஜயநல்லதம்பி அளித்த புகார் வழக்காகப் பதிவானது. இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடியானது. இதனைத் தொடர்ந்து,  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் அந்த மனுவை விசாரிப்பதற்குள்  கர்நாடகாவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

 

6-ஆம் தேதி,  ராஜேந்திரபாலாஜியின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ராஜேந்திரபாலாஜி அவசர அவசரமாக கைது செய்யப்பட்டுள்ளார் என, அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே குறிப்பிட, நீதிபதிகள் ‘இந்த மனு விசாரணைக்கு வருவது தமிழக அரசுக்கு தெரியாதா? அவசர அவசரமாக ராஜேந்திரபாலாஜியைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்த விசாரணைக்கு காத்திராமல் அவசரமாக கைது செய்யாவிட்டால் வானம் இடிந்தா விழப்போகிறது? இந்த கைது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செய்யப்பட்டதா?’ என்றெல்லாம் கேள்விகள் எழுப்பி வழக்கை ஒத்திவைத்திருந்தனர்.

 

இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு நான்கு வார இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜேந்திரபாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

‘பதஞ்சலியின் மன்னிப்பை லென்ஸ் வைத்து தேட வேண்டியுள்ளது’ - உச்சநீதிமன்றம் கண்டனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Supreme Court condemns on Patanjali's apology needs to be looked at with a lens

ஆங்கில மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்தேவும், பாலகிருஷ்ணாவும் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார். இவ்வாறு தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 16ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ள உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்தார்.

இதனையடுத்து பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் செய்ததற்காக நேரில் ஆஜாராகி மன்னிப்பு கேட்டார். அப்போது, “தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீற மாட்டேன். பொது மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என ராம்தேவ் உறுதியளித்தார். இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று (23-04-24) நடைபெற்றது. அப்போது. ராம்தேவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘பதஞ்சலி நிறுவனம் 61 நாளேடுகளில் பகிரங்க மன்னிப்பு கோரி விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாக’  தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், ‘பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்துக்கு இணையாக, அதே அளவில் மன்னிப்பு இருந்ததா?. பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு கோரும் விளம்பரங்களை லென்ஸ் வைத்து தேடும் அளவுக்கு சிறிதாக உள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களை இது போல் சிறிய அளவில் தான் செய்வீர்களா?. பொருளை விளம்பரப்படுத்துவது போல், மன்னிப்பும் பெரிய அளவில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விளம்பரங்களை வெளியிட வேண்டும்’ என்று கண்டனம் தெரிவித்து இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். மேலும், தவறான விளம்பரத்தை வெளியிட்ட பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசின் செயல் அதிருப்தியாக உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.