Skip to main content

‘வாதாடி வென்றது அதிமுக; உரிமை கோருவது திமுக!’ -இடஒதுக்கீடு தீர்ப்பு குறித்து கே.டி.ராஜேந்திரபாலாஜி ட்வீட்!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

 

‘திமுகவை சீண்டாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்..’ என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருப்பார் போலும், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி!

 

தனது ட்விட்டர் பக்கத்தில் ‘யார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கோருவது? வழக்கை தொடுத்து வாதாடி வென்றது அதிமுக, அதற்கு உரிமை கோருவது திமுக. சொந்த புத்தியும் இல்லை, உழைப்பும் இல்லை. அன்றுமுதல் இன்றுவரை, ஒட்டுண்ணி அரசியல் செய்வது திமுக’ என்று பதிவிட்டுள்ளார்.

 

‘உச்ச நீதிமன்றத்தில் முன்னோடியாக சென்று வழக்கு தொடர்ந்தது திமுக-தானே? அதனையொட்டித்தானே அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளோடு, தமிழக அரசும் சமூக நீதி கேட்டு வழக்கு தொடர்ந்தன அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் ட்விட்டர் பதிவு எந்தவிதத்தில் சரியாகும்?’ என்று அதிமுகவினரிடம் கேட்டோம். 

 

“தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் சமூக மறுமலர்ச்சியைக் கருத்தில்கொண்டு, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும் ஊறு நேரா வண்ணம், எப்பொழுதும்போல், இனி வருங்காலம் முழுவதிலும், அரசு பணிகளிலும், கல்வி நிலையங்களின் அனுமதியிலும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து அமலில் இருக்கத்தக்க வகையில், இந்திய அரசியல் சட்டத்தில் விரைவில் உரிய திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென்று, மத்திய அரசை வலியுறுத்தும் விதத்தில்,  தமிழக சட்டமன்ற பேரவையின் சிறப்பு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். 

 

இடஒதுக்கீடு பிரச்சனையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த இந்த உறுதியான நடவடிக்கைக்காகத்தான்,  ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  வழியில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக,  இட ஒதுக்கீடு பிரச்சனையில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தொடர்ந்து போராடி வருகிறார். 

 

இந்நிலையில்,  ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு பிரச்சனையில் அதிமுகவும் வழக்கு தொடர்ந்து வெற்றிபெற்ற நிலையில்,  அந்த வெற்றியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி,  திமுக அரசியல் செய்து விளம்பரம் தேடுகிறது. அதனால்தான், ட்விட்டரில் கே.டி.ராஜேந்திரபாலாஜி, திமுகவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்” என்கிறார்கள்.   

 

சமூக நீதிக்கு கிடைத்த வெற்றியாக கொண்டாடப்பட வேண்டிய இடஒதுக்கீடு தீர்ப்பினை, அரசியலாக்குவது கொடுமையே!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கருத்துக் கணிப்பை நினைத்து சோர்ந்துவிடாதீர்கள்! - ராஜேந்திர பாலாஜி அட்வைஸ்!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Rajendra Balaji said that don't get tired of the poll

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட சிவகாசி கிழக்கு பகுதி, மேற்கு பகுதி, திருத்தங்கல் கிழக்கு பகுதி, மேற்கு பகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம்,  விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி. “விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஒன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து வரலாற்று சாதனை படைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தனியாக நிற்க வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தால்,  அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது.  அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து விடுவார்கள்; கெடுக்க நினைத்தவர்கள் கெட்டுப்போய் விடுவார்கள்.

தற்போது கருத்துக்கணிப்பு,  கருத்துத் திணிப்பு என்றெல்லாம் சொல்கிறார்கள். நாம் அதை நினைத்து சோர்ந்து விடக்கூடாது. கருத்துக்கணிப்பு என்பது ஒரு ஓட்டலில் உட்கார்ந்து கொண்டு நிர்ணயம் செய்யப்படுவது.  இப்போது வருவது கருத்துக் கணிப்பு அல்ல; அது கருத்துத் திணிப்பு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட ராஜராஜசோழனுக்கு அடுத்து,  ஏரிகளை தூர்வாரி நீர் நிலைகளில் நீரைச் சேமித்து வைத்த பெருமை இ.பி.எஸ்.ஸையே  சேரும்.

இன்றைய திமுக ஆட்சியில் கண்மாய்களைத் தூர்வாறுகிறோம்,  அகலப்படுத்துகிறோம் என்று சொல்லி,  அந்த மண்ணைக் கரையில் மெத்தாமல் எடுத்துச் சென்று விடுகிறார்கள். திமுக அரசு குடும்ப அரசியல் செய்து வருகிறது.  எம்ஜிஆர், ஜெயலலிதா, அதன்பிறகு வந்த எடப்பாடி பழனிசாமி  குடும்ப அரசியல் செய்தது இல்லை.  இ.பி.எஸ். ஆட்சியில் ஜாதி, மத மோதல்கள் இல்லை. அதிமுக,  ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி.  இந்த நிலைப்பாட்டை,  சிறுபான்மை மக்கள் அனைவரிடமும் எடுத்துக்கூறி  இரட்டை இலைக்கு  வாக்கு சேகரிக்க வேண்டும்.” என்றார்.

Next Story

பட்டாசு தொழிலை முடக்க நினைப்பதா? - ராஜேந்திரபாலாஜி ஆவேசம்!     

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

Rajendra Balaji question Should the firecracker industry be shut down

 

சிவகாசியில்  அதிமுக  பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக விருச்சிக மரம் போல் வளர்ந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக உறுப்பினர் எண்ணிக்கையை  2 கோடியே 1 லட்சமாக உயர்த்தியவர் எடப்படி பழனிசாமி. நம்முடைய இலக்கு டெல்லி. அடுத்தது தமிழ்நாடு. அதிமுக ஆட்சியில் 15 நாட்களுக்கு முன்பே பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது.  

 

தமிழ்நாட்டில் தற்காலிகப் பட்டாசு கடைகளுக்கு தற்போது வரை அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் 10 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கேயிருக்கும் அதிகாரிகள் ஏன் உரிமம் கொடுக்க மறுக்கிறார்கள்?  பட்டாசு ஆலை அதிபர்களும் பட்டாசு தொழிலாளர்களும் திமுக அரசு மீது கடும் கோபத்தில்  இருக்கிறார்கள். பட்டாசு தொழிலை கெடுக்கின்ற பணியை திமுக செய்தால், அதைத் தடுக்கின்ற பணியை  அதிமுக செய்யும். தமிழ்நாட்டில் திமுக அரசு இருக்கிறதா? இல்லையா? இந்த அரசு  தூங்கிக்கொண்டிருக்கிறது.   

 

தற்காலிகப் பட்டாசு கடைகளுக்கு உடனடியாக அனுமதி  கொடுக்காவிட்டால்,  அதிமுக சார்பாக பல்வேறு அமைப்புகளைத் திரட்டி போராட்டம் நடத்துவோம். திமுக ஆட்சியின் கதவுகள் தட்டப்படும். சாலையில் விபத்து நடக்கிறது. அதற்காக சாலையை மூடி விடுகிறோமா? வெடி விபத்து நடக்கிறது  என்பதற்காக பட்டாசு தொழிலை முடக்க நினைப்பதா? உரிமம் பெறுவதற்காக விற்பனையாளர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.  

 

நமது உழைப்பு எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக அமர வைப்பது. நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். எடப்பாடி பழனிசாமி அடையாளம் காட்டுபவர் பிரதமராக வரவேண்டும். அல்லது.. அவரே பிரதமராக வரவேண்டும். எடப்பாடி பழனிசாமியைக் கண்டு  திமுக அஞ்சுகிறது.  திமுக ஆட்சிக்கு ஆப்பு வைக்கவேண்டும். வெற்றி நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.” என்றார்.