தமிழக அமைச்சரவையில் புதியஅமைச்சராக டி.ஆர்.பி.ராஜா நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். அதேபோல் சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டிருந்தன. தமிழக அமைச்சரவையில் நிகழ்ந்த இந்த மாற்றம் குறித்து பல்வேறு அரசியல் பிரமுகர்களும் தங்கள் கருத்துகளைத்தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ராஜன் செல்லப்பா பேசுகையில், ''அதிமுக ஒன்றாகத்தான் இருக்கிறது. சில சில சிதறல்கள் இருக்கும். அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அதைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதும் இல்லை. ஒரு சிலரைத்தவிர மற்ற அத்தனை பேரும் அதிமுகவின் இரட்டை இலை இருக்கக்கூடிய; தலைமைக் கழகம் இருக்கக்கூடிய இடத்திற்கு நோக்கி வருவார்கள். அமைச்சரவையை மாற்றிய காரணத்தினால் ஊழல் செய்வது, தவறு செய்வது மாறிவிடாது. அமைச்சரவையில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றம் ஏமாற்றக்கூடிய மாற்றம் தான். ஒருவர் உண்மையைச் சொன்னார் என்பதற்காக மாற்றப்பட்டாரா? ஒருவர் திறமையற்றவர் என்பதற்காக மாற்றப்பட்டாரா? என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
ஜெயலலிதா ஒரு அமைச்சரை மாற்றுகிறார் என்று சொன்னால் அவருடைய பொறுப்பு மட்டுமல்ல, ஏதோ ஒரு சின்ன தவறு செய்திருப்பது ஜெயலலிதாவிற்கு மட்டும்தான் தெரியும். ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு, திறமை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதற்காக மாற்றலாம்; ஊழல் செய்வதற்காக மாற்றலாம்; அதிகம் பேர் உண்மையைப் பேசியதற்குப் பலியாகி இருக்கலாம். இப்படி பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இந்த மாற்றம் மக்கள் வளர்ச்சிக்காக இல்லை, அந்தக் கட்சியினுடைய ஊழலை மறைப்பதற்காக; திறமையின்மையை மறைப்பதற்காக மாற்றப்பட்டு இருக்கிறதே தவிர, மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கான மாற்றம் அல்ல'' என்றார்.