Skip to main content

“ஜாதி அடிப்படையில் மக்களை பிரிக்கிறது இந்தியா” - ஆ. ராசா

 

 A. Raja says India divides people on the basis of caste

 

அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க ஐ.டி.பிரிவுத் தலைவர் அமித் மால்வியா சனாதனத் தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுப்பதாகக் குற்றம் சாட்டினார்.

 

இதனிடையே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க நிர்வாகிகள், இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  ‘சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களை இனப்படுகொலைக்கு அழைக்கவில்லை, நான் கூறியதை பா.ஜ.க.வினர் திரித்து பொய் செய்தியை பரப்பி வருகின்றனர்’ என்று தெரிவித்திருந்தார். அதே வேளையில், நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் அமைச்சர் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டது. ஒருபுறம் எதிர்ப்பு எழுந்தாலும், மற்றொரு புறம் உதயநிதி ஸ்டாலினுக்கு பலர் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.

 

இந்த நிலையில், திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா ஒரு வீடியோ கான்பரன்ஸில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “உலக அளவில் உள்ள ஜாதி என்ற நோய்க்கு இந்தியா தான் காரணம். ஜாதி அடிப்படையில் மக்களை பிரிக்கிறது இந்தியா. ஜாதியை பயன்படுத்தி பொருளாதார ரீதியிலும் மக்களை பிரிக்கிறது. சமூக சீர்கேட்டிற்கு மட்டும் ஜாதி பயன்படுத்தப்படவில்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் ஜாதியால் தான் கட்டமைக்கப்படுகிறது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும் இந்து மதத்தின் பெயரால் ஜாதியைப் பரப்புகிறார்கள். அதனால், இந்து மதம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது” என்று கூறினார். இது தொடர்பான வீடியோவை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர், “திமுக எம்.பி ஆ. ராசா, இந்து மதம் இந்தியாவிற்கும் உலகிற்கும் ஒரு அச்சுறுத்தல் என்று கூறுகிறார். தமிழகத்தில் ஜாதி பிளவு மற்றும் வெறுப்பை உருவாக்க திமுக தான் முக்கிய காரணம். அவர்கள் செய்த குழப்பத்திற்கு சனாதன தர்மத்தை குற்றம் சாட்டுகிறார் திமுக எம்.பி.” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !