Skip to main content

விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் அலட்சியம் காட்டும் அ.தி.மு.க. அரசு: எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

 

mkstalin

 

பருவமழையால் பாழ்படும் நெல்மூட்டைகளைப் பாதுகாத்து, அவற்றை விரைவாகக் கொள்முதல் செய்து, விவசாயிகளின் வாழ்க்கையையும் நலனையும் உரிய நேரத்தில் காப்பாற்றிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முப்போகம் விளைந்த நிலமெல்லாம் ஒரு போக விளைச்சலுக்கே போராடித் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், விளைந்த நெல்லையும் முறையாகக் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் அலட்சியம் காட்டி வருகிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு. 


தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், அதனை உணர்ந்து விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், அதன் அலட்சியப் போக்கினால் கடலூர் மாவட்டத்தில் 20ஆயிரத்திற்கும் அதிகமான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. 


நெல்கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறந்திருப்பதாக அரசு சொன்னாலும், அவை உரிய வசதிகளுடனும்  பாதுகாப்புடனும் இருப்பதில்லை. கடலூர் மாவட்டத்தில் 22 நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டபோதும், 11 நிலையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதில் ராஜேந்திரபட்டணம் என்ற இடத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்திற்குச் சுற்றுவட்டார கிராமத்து விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெல்லை மூட்டை மூட்டையாகக் கொண்டு வந்த நிலையில், அதனை உடனடியாகக் கொள்முதல் செய்வதற்கு வழியின்றி அங்கேயே அடுக்கி வைக்கச் செய்துள்ளது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம். 


அடுக்கி வைக்கப்பட்ட மூட்டைகளை மூடுவதற்கு தார்பாலின், ப்ளாஸ்டிக் ஷீட் போன்றவை போதிய அளவில் இல்லாததாலும், வெறுந்தரையிலேயே மூட்டைகளை அடுக்கியதாலும், அண்மையில் பெய்த கனமழையால், 20ஆயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளன. கடலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இந்த அவலம் தொடர்கிறது.


டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையினால், அறுவடைக்குத் தயாராக உள்ள குறுவைப் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பது ஒரு புறமென்றால், அறுவடை செய்யப்பட்ட பெரும்பாலான நெல் மூட்டைகள் தண்ணீரில் நனைந்து வீணாகியுள்ளன. 

 

200-க்கும் அதிகமான அளவில் அரசு திறந்துள்ள நேரடி கொள்முதல் நிலையங்கள் பலவற்றுக்கு நிரந்தரக் கட்டடம் கிடையாது. கிடங்குகள் அமைக்கப்படவில்லை. போதிய அளவிலான பாதுகாப்பு வசதிகள் இல்லை. மழைநீர் புகாமல் நெல்மூட்டைகளை மூடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதனால் விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெல்லை சாலையோரத்தில் அடுக்கி வைத்து, கொள்முதல் நிலையத்தின் அழைப்புக்காகக் காத்திருக்க வேண்டிய அவலம் தொடர்கிறது. 


அதுமட்டுமின்றி, 18% ஈரப்பதத்திற்குள் இருக்கும் நெல்லை மட்டுமே கொள்முதல் செய்யும் வழக்கத்தைத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கடைப்பிடிப்பதால், மழையில் நனைந்த நெல் மூட்டைகளில் ஈரப்பதம் அதிகமாகிவிடுகிறது. அவற்றை நேரடிக் கொள்முதல் நிலையங்களில் எடுப்பதில்லை. விவசாயிகளே அவற்றைக் காயவைத்து, ஈரப்பதம் நீக்கி, கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. 


ஏழை - எளிய விவசாயிகள் தங்கள் நெல்லைக் காய வைப்பதற்கு போதிய இடமின்றி, தார்ச்சாலைகளில் கொட்டி வைத்து வீணாகும் அபாயமும் ஏற்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அறுவடையைப் பார்க்கும் நெல் விவசாயிகள், அந்த அறுவடையில் கிடைத்த கண்மணிகளுக்கு இணையான நெல்மணிகள் வீணாவதைக் கண்ணீர் வழிந்தோடக் காணும் நிலைக்குத் தள்ளப்படுவது வேதனையிலும் வேதனையாகும்.  

 

விவசாயி விவசாயி என்று மூச்சுக்கு முந்நூறு தடவை தன்னைத்தானே கூறிக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, உண்மையான விவசாயிகளின் வாழ்வாதாரப் போராட்டம் பற்றிய கவனமும் இல்லை, கவலையும் இல்லை என்பதால், இதனை அவர் பார்வைக்குக் கொண்டு வந்து, உரிய நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் எதிர்க்கட்சிக்கு இருக்கிறது. 

 

http://onelink.to/nknapp


பருவமழையால் பாழ்படும் நெல்மூட்டைகளைப் பாதுகாத்து, அவற்றை விரைவாகக் கொள்முதல் செய்து, விவசாயிகளின் வாழ்க்கையையும் நலனையும் உரிய நேரத்தில் காப்பாற்றித் தர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.