Advertisment

ரயில்வே கார்டு தேர்வில் தமிழர்களுக்கு அநீதி: விசாரணைக்கு ஆணையிட வேண்டும்: ராமதாஸ்

ramadoss

சரக்குத் தொடர்வண்டி கார்டு பணிக்கான துறை சார்ந்த போட்டித் தேர்வை ரத்து செய்து விட்டு, தேர்வுத்தாளில் விடை எழுதும் வகையில் அத்தேர்வை மீண்டும் வெளிப்படையாக நடத்த தொடர்வண்டித்துறை முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு தொடர்வண்டித்துறையில், பதவி உயர்வு அடிப்படையில் சரக்குத் தொடர்வண்டி கார்டு பணிக்கு 96 பேரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற ஆன்லைன் தேர்வுகளில், முழுக்க முழுக்க வட இந்திய பணியாளர்கள் வெற்றி பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இத்தேர்வுகளில் தமிழகத்திலிருந்து வெறும் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.

Advertisment

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கிய தெற்குத் தொடர்வண்டித் துறையில் 96 சரக்குத் தொடர்வண்டி கார்டு பணியிடங்கள் காலியாக இருந்தன. அதிக அனுபவம் தேவைப்படும் இந்தப் பணிகளுக்கு நேரடியாக ஆட்கள் நியமிக்கப்படுவதில்லை. தொடர்வண்டித்துறையில் பாய்ண்ட்ஸ் மேன், ஷண்டிங் மாஸ்டர்ஸ் உள்ளிட்ட பணிகளில் உள்ள பட்டதாரிகளுக்கு துறை சார்ந்த போட்டித்தேர்வு நடத்தப்பட்டு, அதில் தகுதியானவர்கள் இந்தப் பணிகளுக்கு நியமிக்கப்படுவார்கள். சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட இந்த தேர்வுகளின் முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 96 பணிகளுக்கு தமிழகத்திலிருந்து 3000-க்கும் கூடுதலானவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில், அவர்களில் வெறும் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் வட இந்தியர்கள் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

துறை சார்ந்த இந்தத் தேர்வை ஆன்லைனில் நடத்தியது தான் அனைத்து குளறுபடிகளுக்கும் காரணம் என்று போட்டித் தேர்வுகளில் பங்கேற்ற தொடர்வண்டித்துறை பணியாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்தத் தேர்வு சாதாரண முறையில் தேர்வுத் தாளில் விடை எழுதும் முறையில் நடத்தப்பட்ட போது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் மிக அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றனர்; ஆனால், ஆன்லைன் முறைக்கு தேர்வு மாற்றப்பட்டவுடன் வட இந்திய பணியாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு முறைகேடுகள் நிகழ்த்தப்படுகின்றன; அதனால் தான் தமிழகத்தைச் சேர்ந்த பணியாளர்களால் சரக்குத் தொடர்வண்டி கார்டு பணிக்கான துறைத் தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை என்று தொடர்வண்டித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டு புறக்கணிக்கக்கூடியது அல்ல.

கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்வண்டித்துறையின் ஆள்தேர்வுக்கான போட்டித் தேர்வுகள் வட இந்திய மாணவர்களுக்கு சாதகமாகவே நடத்தப்படுகின்றன. சென்னையிலுள்ள தெற்கு தொடர்வண்டித் துறை தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டாலும் கூட, அதில் உள்ள வட இந்திய அதிகாரிகளின் முயற்சியால் வட இந்திய மாணவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படுத்தப்படுகிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுத்துக் கொடுத்துள்ள அனைத்து குடிமக்களுக்கும் சமவாய்ப்பு கோட்பாட்டுக்கு எதிராக உள்ளது. இந்தப் போக்கை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது.

தொடர்வண்டித்துறை பணிக்கான போட்டித் தேர்வுகளில் உள்ளூர் மாணவர்கள் வீழ்த்தப்பட்டு, வட இந்திய மாணவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பும் பல முறை இதே போன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு முறை இதுபோன்று புகார்கள் எழும் போது மத்திய அரசின் சார்பில் ஏதேனும் விளக்கம் அளிக்கப்படுவதும், அதன்பின் மீண்டும் பழையபடியே முறைகேடுகள் நடப்பதும் வாடிக்கையாகி விட்டது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போலவே தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள இடைநிலை மற்றும் கடைநிலை பணிகள் அனைத்தும் முழுக்க முழுக்க உள்ளூர் மக்களைக் கொண்டே நிரப்பப்பட வேண்டும் என்ற நிலை உறுதி செய்யப்படுவது மட்டுமே இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். அத்துடன் சரக்குத் தொடர்வண்டி கார்டு பணிக்கான துறை சார்ந்த போட்டித் தேர்வை ரத்து செய்து விட்டு, தேர்வுத்தாளில் விடை எழுதும் வகையில் அத்தேர்வை மீண்டும் வெளிப்படையாக நடத்த தொடர்வண்டித்துறை முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

exam railway pmk Ramadoss
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe