Skip to main content

ராகுலுக்கு சிறைத் தண்டனை; மோடியின் உருவ பொம்மை எரிப்பு

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

பிரதமர் மோடி குறித்து கருத்து தெரிவித்ததற்காக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் குஜராத் சூரத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் ராகுல் காந்தி குற்றவாளி எனவும் அவருக்கு இரண்டு ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதித்தும் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் சாலை மறியல், ரயில் மறியல் மற்றும் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா சாலை தர்கா அருகில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் சாலை மறியல் மற்றும் பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் அஸ்வத்தமன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மணிகண்டன், பிரதாப் மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் சென்னை அண்ணா சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

 

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் பேசுகையில், "2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கர்நாடகாவில் ஒரு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்ததற்காக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டு இன்றைக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக இரண்டு ஆண்டு காலம் சிறைத் தண்டனை என்பது பழிவாங்கும் செயல். எங்கள் இளம் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தை கண்டு பிரதமர் மோடி பயந்துள்ளார். மத்திய அரசின் இது போன்ற நடவடிக்கைகளுக்கு எல்லாம் ஒருபோதும் நாங்கள் அஞ்சமாட்டோம். மத்திய பாஜக அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பும் நாள் நெருங்கிவிட்டது அதற்காக நாட்களை எண்ணத் தொடங்கி விட்டனர்" எனவும் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்