ADVERTISEMENT

கார்பரேட் மயமாக்கி விவசாயிகளை நவீன கொத்தடிமைகளாக்க மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிடுகிறது  – முத்தரசன் அறிக்கை

09:32 PM May 03, 2020 | rajavel

ADVERTISEMENT



"கரோனா காலத்தில் நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்." என அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்.

ADVERTISEMENT

மேலும் அவரது அறிக்கையில்,

"இரண்டு நாள் முன்பு பிரதமர் திரு.நரேந்திர மோடி, வேளாண்மை துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளார். நாட்டின் 130 கோடி மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் விவசாயத்துறையில்தான் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வேளாண்மை துறை அமைச்சரும், அதிகாரிகளும் கரோனா வைரஸ் நோய் பெருந்தொற்று விவசாயத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர். இது உண்மை நிலைக்கு மாறானது என்பதைப் பிரதமர் அறிந்து கொள்ள வேண்டும்.

கோவிட் 19 நோய் பெருந்தொற்று பரவல் தடுப்புக்காக நாடு முழுவதும் முடக்கம் செய்யப்பட்டுள்ள இந்தக் கால கட்டத்தில் விவசாயிகள் விளைந்த உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்த முடியாததால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளர்.

வாழை, பலா, தர்பூசணி, வெள்ளரி, கரும்பு, முந்திரி, மலர்கள் காய்கறிகள், தென்னை (இளநீர்) போன்ற பணப்பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கடன் சுமையால் மன உளைச்சலுக்கு ஆளான திருச்சி மாவட்ட குத்தகை விவசாயி பெரியசாமி தற்கொலை செய்து கொண்டார்.

நாடு முடக்கக் காலத்தில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை மத்திய, மாநில அரசுகள் ஈடு செய்ய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். இது போல் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்பை மத்திய வேளாண்மை அதிகாரிகள் பிரதமரின் ஆய்வுக் கூட்டத்தில் பிரதிபலிக்கவில்லை.

வேளாண்மை தொழிலில் உயர் தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மை, தீமைகள் குறித்தும், பயிர்கள் உற்பத்தி திறன் மேம்பாடு குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

விவசாயத்தில் புதியமுறையைப் புகுத்துவது என்ற பெயரில் கார்ப்ரேட் கம்பெனிகள் ஆளுகைக்குள் விவசாயத்தைத் தள்ளிவிடும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ‘பிராண்ட்‘ இந்தியா திட்டம் என்ற முறையில் தனியார் சந்தைகளை உருவாக்கி, விவசாய விளை பொருள்களைக் கொள்முதல் செய்யும் பொறுப்பை அதனிடம் விட்டுவிட்டு அரசு ஒதுங்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.


கார்ப்ரேட் விவசாயத்தை ஊக்கப்படுத்தி சிறு, குறு விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் நவீன அடிமைகளாக்கும் நவ தாராளமயக் கொள்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வேலையில் பாஜக மத்திய அரசு ஈடுபட்டிருப்பதை ஆய்வுக் கூட்ட முடிவில் வெளியான செய்திக் குறிப்பு வெளிப்படுத்துகிறது.

பாஜக மத்திய அரசின் விவசாய விரோதக் கொள்கைகளை , நாடு முழுவதும் விவசாயிகள் ஒன்று பட்டு போராட முன் வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது." எனக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT