
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும் அவர்களுக்கான விரைவான நீதியைப் பெற்று தருவதிலும் திராவிட மாடல் அரசு காட்டும் உறுதிப்பாட்டிற்கும் நடவடிக்கைகளுக்கும் இந்தத் தீர்ப்புச் சாட்சியாகி இருக்கிறது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை உடனடியாகக் கைது செய்து தண்டனைப் பெற்று தருவதற்கான உறுதியான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுத்தது. குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றச்செயலில் ஈடுபட்ட ஞானசேகரனை தமிழ்நாடு காவல்துறை கைது செய்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விரைவான நீதியையும் குற்றவாளிக்கு கடுமையான தண்டனையையும் பெற்றுத்தர வேண்டும் எனும் முனைப்போடு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அண்ணா பல்கலைக்கழக வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவித்தார்கள். அதனடிப்படையில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றவாளி தப்பிக்க முடியாத வகையில் ஆதாரங்களைத் திரட்டி வலுவான வாதங்களை நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எடுத்த வைத்ததின் அடிப்படையில் இன்று ஐந்தே மாதத்தில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும் அவர்களுக்கான விரைவான நீதியைப் பெற்று தருவதிலும் திராவிட மாடல் அரசு காட்டும் உறுதிப்பாட்டிற்கும் நடவடிக்கைகளுக்கும் இந்தத் தீர்ப்புச் சாட்சியாகியிருப்பது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றங்களையும் சகித்துக் கொள்ளாது, அதற்கெதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பாதிக்கப்பட்டோருக்கு விரைவான நீதியைப் பெற்றுத் தரும் என்பது மக்கள் மன்றத்தில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.