ADVERTISEMENT

தேர்தல் குறித்த கேள்வி: “நன்றி, வணக்கம்” என்று நழுவிய நயினார் நாகேந்திரன்

12:29 PM Mar 22, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 30 லட்சம் ரூபாய்க்கு திருமண மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.

விழா முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாடு பட்ஜெட்டில் கிள்ளிகுளத்தில் மட்டும் 15 கோடி மதிப்பீட்டில் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்கள். திமுக கொண்டு வந்த திட்டங்கள் நல்ல திட்டங்கள் தான். ஆனால் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தென் மாவட்டங்களை பொறுத்தவரை குறிப்பாக குமரி மாவட்டம் என்பது முழுவதும் நஞ்சையாகவும் தென்னையாகவும் இருக்கும் மாவட்டம். நாஞ்சில் நாடு எனச் சொல்வார்கள். அதேபோல் திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலும் நஞ்சை அதிக அளவில் உள்ளது. இப்பகுதிகளில் நெல் ஆராய்ச்சி மையம் ஏற்கனவே இருந்து, இப்பொழுது இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இதைக் குறித்தும் சட்டமன்றத்தில் நிச்சயமாக பேசுவோம்.

திருநெல்வேலி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களுக்கு முன்பே நான் சொல்லியுள்ளேன். முதலமைச்சரை இதற்கு முன் சந்திக்கும் போது, வட மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவு உள்ளது. தென் மாவட்டங்களில் வறட்சி காணப்படுகிறது எனச் சொன்னேன். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசும் போது இதுகுறித்து கண்டிப்பாகப் பேசுவேன். தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என ஏற்கனவே சொல்லி இருந்தார்கள். மற்ற ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்டப்படும் என்று சொன்னார்கள். ஆனால், அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

அதிமுக தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி. அதனுடன் தான் கூட்டணியில் உள்ளோம். இந்திய அளவில் பெரிய கட்சி, உலகளவில் அதிக எம்.எல்.ஏக்கள், அதிக எம்.பி.க்கள் கொண்ட கட்சி பாஜக. இரு கட்சிகளுக்குள்ளும் தலைமையில் எந்த மாற்றமும் இல்லை. கீழ்மட்டத்தில் உள்ள சிலர் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுகின்றனர். பெரிய கட்சி என்கிற போது இம்மாதிரியான சிக்கல்கள் இருக்கும். அது கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது. தேர்தலில் வேட்பாளர்கள் அறிவித்த பின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வேலை பார்க்கும் போது எவ்விதமான கருத்தும் மனமாட்சிமைகளும் நிச்சயம் இருக்காது” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், வரும் தேர்தலில் வேட்பாளராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதா எனக் கேட்டபொழுது நயினார் நாகேந்திரன் நன்றி வணக்கம் எனக் கூறி நழுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT