The quality of politics has started to declineTrichy Siva MP Fear 

நாடாளுமன்றத்தில் அரசியல் சாசன சட்டம் குறித்து சிறப்பு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் முடிவில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மத்திய உள்துறை அமித்ஷா பேசியது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் தான் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று (19.12.2024) போராட்டம் நடத்தினர்.

Advertisment

அதே சமயம் பாஜகவினரும் போட்டி போராட்டம் நடத்தினர். அப்போது இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தனது மண்டை உடைந்ததாக பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சாரங்கி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாஜகவைச் சேர்ந்த மற்றொரு எம்.பி.யான முகேஷ் ராஜ்புத்துக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், ஆர்.எம்.எல். மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அமித்ஷா, ‘காங்கிரஸ் கட்சி எப்போது பார்த்தாலும் அம்பேத்கர் அம்பேத்கர் என்று தெரிவித்துக் கொண்டு உள்ளார்கள். அவர் பெயரைச் சொல்வதற்குப் பதிலாகக் கடவுள் பெயரைச் சொல்லி இருந்தால் கூட உங்களுக்கு எதிர்காலத்தில் ஏழு ஜென்மத்திலும் புண்ணியம் கிடைக்கும்’ எனப் பேசி இருந்தார். இந்த வார்த்தை என்பது அம்பேத்கர் பெயரை உச்சரிப்பதால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதாகும். அதற்கு ஒரு கடவுள் பெயரைச் சொல்லி இருந்தால் எனச் சொல்வது ஏற்புடையது அல்ல. அம்பேத்கர் என்பவர் மிகச் சிறந்த தலைவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார்.

அரசியலமைப்பு சட்டம் உருவாக்குவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர். அரசியலமைப்பு வரைவு குழுவின் தலைவராக இருந்தவர். பல நியாயமான விஷயங்கள் வருவதற்கு அறிவுப்பூர்வமான விவாதங்களுக்கும் காரணமாக இருந்தவர். கடந்த 1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் நாள் அன்று இந்திய அரசியலமைப்பு சட்டம் நிறைவேற அவர் ஆற்றிய உரை என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது. அது அவ்வளவு அறிவார்ந்த உரையாடல். அதன் மூலம் அவருக்கு எவ்வளவு அறிவு திறமை உள்ளது என்பது புலனாகும். அவர் வெளிநாட்டுக்குச் சென்று படித்தார். நாட்டுக்கு உழைத்தார். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தார். அவரை தெய்வமாக வணங்குகிற, பின்பற்றுகிற லட்சக்கணக்கானோர் நாட்டில் உள்ளனர்.

Advertisment

The quality of politics has started to declineTrichy Siva MP Fear 

அதற்கும் மேல், அப்பாற்பட்டு எல்லா கட்சியினருக்கும் அவர் மீது மரியாதை உண்டு. அவர் பெயருக்குப் பதிலாகக் கடவுள் பெயரை உச்சரிப்பது என்பது மனதைப் புண்படுத்துவதாக உள்ளது. இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பொறுப்புள்ள ஒரு அமைச்சரிடம் இருந்துஎதிர்பார்க்கவில்லை. இந்த வார்த்தைகளால்காயம்பட்ட காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற நுழைவாயிலில் எதிர்க்கட்சியினரோடு ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது பாஜகவினரும் போட்டி போராட்டம் நடத்தி தெருச் சண்டை போல் ஒரு சூழலை உருவாக்கினார்கள். ஒரு கட்சி போராட்டம் நடத்துகின்ற போது மற்றவர்கள் சிரித்துக் கொண்டே ஒதுங்கிச் செல்வதுதான் வழக்கம். நாடாளுமன்றத்திலும் அரசியல் தரம் குறையத் தொடங்கிவிட்டது. எதிர்க்கட்சியினர் ஒரு காரணத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினால், அதற்கு அவையில் வந்து ஆளுங்கட்சியினர் பதில் சொல்ல வேண்டும். அல்லது விளக்கம் சொல்லலாம்” எனத் தெரிவித்தார்.