ADVERTISEMENT

அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய சிறப்பு கிராம சபைக் கூட்டம்- தீர்மானங்களை நிறைவேற்றுவதாக எம்.எல்.ஏ உறுதி

11:07 PM Oct 30, 2018 | bagathsingh

ADVERTISEMENT

பனங்குளம் அரசுப்பள்ளி கட்டிடம், கழிவறை, சுற்றுச்சுவர் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். பள்ளி கட்டிடம், சுற்றுச்சுவர் ஆகியவற்றை உடனடியாக கட்டித்தருவதாக மெய்யநாதன் எம்.எல்.ஏ உறுதியளித்தார்.

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எழுத்தறிவுத் திட்டம் தொடக்கவிழா மற்றும் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் வெளியீடு, மாணவர்களுக்கு புதிய வண்ண ஆடைகள் வழங்குதல் ஆகிய விழாக்கள் பள்ளி வளாகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜா தலைமையில் அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச்செல்வன் (பொ), திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர் நடராஜன், முன்னால் ஊராட்சிமன்றத் தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பையன் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் 69 மாணவ, மாணவிகளுக்கு தாரகை இக்பால் புதிய வண்ண ஆடைகள் வழங்கினார். அனைத்து திட்டங்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா தொடங்கி வைத்து பேசும் போது.. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தான் பண்முகத்திறன் கொண்டவர்களாக உருவாகி வருகிறார்கள். மேலும் எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் மூலம் எழுத்தறிவை பெற வேண்டும். அனைவரும் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றார்.

தொடந்து பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்கள் நடத்திய சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது. கிராம சபை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் எப்போதெல்லாம் நடத்தப்படுகிறது. அதில் கொண்டு வரும் தீர்மானங்கள் சிறப்பு வாய்ந்தவைகளாக உள்ளது என்பதை மாணவர்கள் விளக்கியதுடன் ஒவ்வொரு மாணவராக எழுந்து தங்கள் பள்ளிகளின் தேவைகளை பற்றி பேசி அதை தீர்மானமாக எழுதினார்கள். பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், சுற்றுச்சுவர், கழிவறை வசதி போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அப்போது எழுந்த ஒரு மாணவன் கிராம சபை கூடி தீர்மானத்தை எழுதி வைத்துக் கொண்டால் எந்த பணியும் நடக்காது. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர் போன்ற உள்ளாட்சி பிரதிநிதிகளின் கவணத்திற்கு கொண்டு சென்றால் தான் தீர்மானங்கள் செயல்வடிவம் பெரும் என்று கூறினார்.

உடனே கிராம சபையில் கூடியிருந்த மாணவர்கள் நமது சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். நாம் நிறைவேற்றிய தீர்மானங்களை அவர்களிடமே கோரிக்கை மனுவாக கொடுக்கலாம் என்று கூறி கிராம சபை தீர்மானங்களை மெய்யநாதன் எம்.எல்.எ விடம் கொடுத்தனர்.

மாணவர் மாதிரி கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பெற்றுக் கொண்ட மெய்யநாதன் எம்.எல்.ஏ பேசும்.. ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்காக நிதி செலவிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பனங்குளம் பள்ளி மாணவர்களின் கோரிக்கையான வகுப்பறை, சுற்றுச்சுவர், கழிவறை அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்படும். முதலில் ரூ. 2 லட்சத்தில் சுற்றுச்சவர் அமைக்கும் பணிகள் 10 நாட்களில் தொடங்கும் மார்ச் மாதம் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்படும். வரும் கல்வி ஆண்டில் புதிய கட்டிடத்தில் வகுப்புகள் நடக்கும் என்றார்.


மாணவர்களின் கிராம சபை தீர்மானத்திற்கு உடனடி தீர்வு கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். விழா முடிவில் ஆசிரியை சுமதி நன்றி கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT