Punjab farmers congratulate MK Stalin

Advertisment

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், பஞ்சாப் ஆசாத் கிஷன் சங்கர்ஷ் கமிட்டி நிர்வாகியும், டெல்லி சிங்கு பார்டர் போராட்டக் களத்தில் இருந்து தமிழ்நாடு வந்து பாஜக - அதிமுக கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் செய்தவருமான ராஜ்விந்தர் சிங்க், கோல்டன் டெல்லியில் இருந்து ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மத்திய அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத சட்டங்களுக்கும் கொள்கைகளுக்கும் எதிராக ஒன்றுபட்டு விவசாயிகள் வாக்களித்திருக்கிறார்கள். விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. அது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

டெல்லி போராட்டக் களத்தில் உள்ள பஞ்சாப் விவசாயிகளின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.குறிப்பாக காவிரி டெல்டா விவசாயிகள் ஒன்றுபட்டு வாக்களித்து மகத்தான வெற்றியை தந்துள்ளனர். எனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி விவசாயிகளுடைய நலனுக்காகவும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர முன்னுரிமை கொடுத்து செயல்பட தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வர வேண்டுமென வேண்டுகிறோம், வாழ்த்துகிறோம்” என்றார்.