நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா மற்றும் சிலர் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் கட்சியை பலப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமமுக சார்பாக நடத்தப்பட்டது. மேலும் கட்சியை பதிவு செய்த பின்னரே தேர்தலில் போட்டியிடுவது என்று தினகரன் தெரிவித்து இருந்தார்.

ammk

ஏற்கனவே தினகரன் கட்சியில் இருந்து தினகரனின் முக்கிய நபர்களாக வலம் வந்த தங்கத்தமிழ்செல்வன்,செந்தில்பாலாஜி, இசக்கி சுப்பையா வெளியேறியது அக்கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் கடந்த வாரம் புதுச்சேரி நிர்வாகிகள் பலர் அமமுகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தனர். இதனையடுத்து தினகரனுக்கும், சசிகலாவுக்கும் வலது கரமாக இருந்த புகழேந்தி அக்கட்சியில் இருந்து வெளியேற போகிறர் என்ற தகவல் வந்து கொண்டிருக்கிறது. மேலும் புகழேந்தி பற்றிய வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அதில் 'நாம் போகும் இடத்தில் நமக்கு உள்ள இடத்தை சரி செய்துவிட்டு தான் செல்ல வேண்டும். அதனால் அந்த பட்டியலை சேர்த்து ரெடி செய்து வைக்கிறேன். 14 வருஷம் அட்ரஸ் இல்லாமல் இருந்த டிடிவி தினகரனை ஊருக்கு காண்பித்து போராட்டம் எல்லாம் செய்தோம். அம்மா மரணம் அடைந்த போது கூட இவர் இல்லை என்று பேசுவது போல் இருக்கின்றது. இதுவரை இந்த வீடியோவுக்கு புகழேந்தி மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகிகளை தினகரன் நீக்கியதால் புகழேந்தி அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது.