Advertisment

புதுச்சேரியின் புதிய அமைச்சரவை நாளை பொறுப்பேற்பு..! 

Puducherry's new cabinet takes charge tomorrow ..!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15வது சட்டப்பேரவைக்கான தேர்தல், கடந்த ஏப்ரல் மாதம் 06ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மே மாதம் 2ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் என்.ஆர். காங்கிரஸ் 10 தொகுதிகளையும், பாஜக 6 தொகுதிகளையும் கைப்பற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தது. என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மே மாதம் 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.ஆனாலும் துணை முதல்வர், சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவி கேட்டு பாஜக நிர்ப்பந்தப்படுத்தியதால் அமைச்சரவை பதவியேற்பது காலதாமதமானது.

Advertisment

இந்நிலையில் நீண்ட இழுபறிக்குப் பிறகு பாஜகவிற்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவி கொடுப்பதற்கு ரங்கசாமி சம்மதித்தார். அதையடுத்து பாஜகவைச் சேர்ந்த மணவெளி சட்டமன்ற உறுப்பினர் ஏம்பலம் செல்வம் சபாநாயகராக பொறுப்பேற்றார். இதனிடையே பாஜக சார்பில் தனக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று காமராஜ் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர்.

Advertisment

தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற சமரசத்தை அடுத்து அமைச்சரவை பட்டியல் தயாரானது. அதனைத் தொடர்ந்து 50 நாட்கள் கழித்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவை இறுதி செய்யப்பட்டு கடந்த 23ஆம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து அமைச்சர்கள் பெயர் பட்டியலைக் கொடுத்தார். மத்திய அரசின் ஒப்புதலுக்காக அமைச்சர்கள் பட்டியலை தமிழிசை சௌந்தரராஜன் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிவைத்தார். உள்துறை அமைச்சகம் அந்தப் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலின்படி பாஜகவைச் சேர்ந்த மண்ணாடிப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் நமச்சிவாயம், ஊசுடு சட்டமன்ற உறுப்பினர் சாய் ஜெ. சரவணக்குமார் ஆகிய இருவரும்என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்பவன் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன், மங்களம் சட்டமன்ற உறுப்பினர் தேனீ ஜெயக்குமார், காரைக்கால் - நெடுங்காடு சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்காஆகியோரும்அமைச்சர் பதவியேற்க உள்ளனர்.

புதிய அமைச்சரவை நாளை (27.06.2021) மதியம் 2.30 மணிக்கு ராஜ்பவன் எதிரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பதவியேற்கவுள்ளனர். புதிய அமைச்சர்களுக்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். விழாவில் அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கைப்பை, பூச்செண்டு, பழங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றும், முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pondicherry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe