ADVERTISEMENT

புதுச்சேரி வாக்கு எண்ணும் பணி தொடக்கம்! 

09:00 AM May 02, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரியில் மொத்தம் 324 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இம்மாநிலத்தில் பதிவான வாக்குகள், புதுச்சேரியில் 3 வாக்கு எண்ணிக்கை மையங்கள், காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் தலா 1 மையம் என மொத்தம் 6 மையங்களில் எண்ணப்படுகின்றன.

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளில், 8 தொகுதிகள் வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதற்கட்டமாக காலை 8 மணிக்கு மண்ணாடிப்பட்டு, மங்கலம், கதிர்காமம், காமராஜர் நகர், லாஸ்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு, ஏம்பலம் ஆகிய 8 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதேபோல் காரைக்காலில் உள்ள நெடுங்காடு, திருநள்ளாறு, அதனுடன் மாஹே, ஏனாம் ஆகிய தொகுதிகள் என மொத்தம் 12 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முதற்கட்டமாக நடைபெறும். புதுச்சேரியில் உள்ள 3 வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஒவ்வொரு தொகுதிக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, அடுத்தடுத்த தொகுதிகள் என வரிசைப் பிரகாரம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

2வது கட்டமாக பிற்பகல் 12 மணிக்கு புதுச்சேரியில் உள்ள திருபுவனை, வில்லியனூர், இந்திரா நகர், முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, உருளையன்பேட்டை, அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம் ஆகிய 8 தொகுதிகள் மற்றும் காரைக்காலில், காரைக்கால் வடக்கு, தெற்கு ஆகிய 2 தொகுதிகள் என மொத்தம் 10 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும்.

மூன்றாம் கட்டமாக, மாலை 6 மணிக்கு தொடங்கி, புதுச்சேரியில் ஊசுடு, உழவர்கரை, தட்டாஞ்சாவடி, ராஜ்பவன், முதலியார்பேட்டை, மணவெளி, பாகூர் ஆகிய 7 தொகுதிகள் மற்றும் காரைக்காலில் நிரவிதிருப்பட்டினம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்படுவதால் முகவர்களுக்கான தீவிர சோதனை காரணமாக, வாக்கு எண்ணும் பணி சற்று தாமதமாக தொடங்கியது. புதுச்சேரியில் புதிய ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது பற்றிய விவரங்கள் பிற்பகலில் தெரியவரும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT