ADVERTISEMENT

புதுச்சேரியில் சொல்வதால் கைதுசெய்ய சொல்லும் நாராயணசாமி, தமிழ்நாட்டில் சொல்லும் தி.மு.க கூட்டணியினரை கைதுசெய்ய சொல்வாரா... -ரங்கசாமி

10:52 PM Apr 03, 2019 | sundarapandiyan

அதிமுக கூட்டணியில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர், முன்னாள் முதல்வர் ரங்கசாமி தேங்காய்திட்டு மரப்பாலம் நான்கு முனை சந்திப்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ADVERTISEMENT


ADVERTISEMENT

அப்போது அவர், "என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற செய்வதின் மூலம் பாராளுமன்ற நிதியை புதுச்சேரி மாநிலத்திற்கு சரியாக பயன்படுத்த முடியும். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் மாநிலத்திற்கு எதையும் சரியாக செய்யவில்லை. எந்த திட்டத்திற்கும் நிதியைக் கொண்டுவரவில்லை. இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதால்தான் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் இளைஞரை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். இளைஞர்களால் தான் முழுமையாக பணியாற்ற முடியும். இளைஞர்கள் அரசியலுக்கு வர ஊக்குவிக்க வேண்டும்.

என். ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது கொண்டுவந்த திட்டங்களைக்கூட ஆளும் காங்கிரசார் செயல்படுத்தவில்லை. ஏற்கனவே புதுச்சேரி சிறப்பாக உள்ளபோது இதில் பொலிவுரு திட்டத்தினை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என காங்கிரஸ் முதல்வர் கூறுகிறார். ஆனால் நாங்கள் ஆட்சியில் இருந்தபோதே இத்திட்டத்திற்கான கோப்புகள் அனுப்பப்பட்டது. ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் இப்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்றவர்களை குறைகூறியே ஆளும் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது.

புதுச்சேரியில் ஆட்சி கவிழும் என்று கூறுபவர்களை சிறையில் தள்ள வேண்டுமென நாராயணசாமி கூறுகிறார். ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ஸ்டாலின், முத்தரசன் ஆகியோர் தமிழகத்தில் ஆட்சி கவிழும் என கூறிவருகிறார்கள். அவர்களை எல்லாம் கைதுசெய்ய வேண்டுமென காங்கிரசார் கூறுவார்களா? புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநரை எதிர்த்து கோமாளித்தனமான அரசியல்தான் நடைபெற்று வருகிறது" என்றார்.

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பிரச்சாரத்தின்போது, நான்கு முனை சந்திப்பில் ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்ததால் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT