PAPSCO workers demand

தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் புதுச்சேரி பாப்ஸ்கோ (PAPSCO) மேலாண் இயக்குநர் உள்ளிட்டோர் முன் பணமாக பலமாத சம்பளத்தை எடுத்துக் கொண்டதைக்கண்டித்தும், தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கக் கோரியும் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

Advertisment

புதுச்சேரி பாப்ஸ்கோ நிறுவனத்தில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு 32 மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தி நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பாப்ஸ்கோ தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்காக 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தப் பணத்தில் சம்பளம் வழங்காமல் 3½கோடி ரூபாய் EPF கட்டுவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள 3½ கோடி ரூபாயில் கரோனா ஊரடங்கை ஒட்டி தொழிலாளர்களுக்கு ஒரு மாதச் சம்பளம் வழங்குவதற்கு நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது. நிர்வாகமும் ஒரு மாதச் சம்பளம் வழங்க ஒப்புக்கொண்டு ரூபாய் 1½ கோடிக்கு கோப்பு தயார் செய்து ஒப்புதலுக்கு அனுப்பியது. இந்தக் கோப்பில் ஒரு மாதச் சம்பளம் ரூபாய் 1½ கோடி வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்து முதலமைச்சர், துறையின் அமைச்சர், தலைமைச் செயலர், நிதித்துறைச் செயலர், துறையின் செயலர், குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநர் ஆகியோர் கையொப்பமிட்டு, துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆளுநர் கிரண்பேடி சம்பளம் வழங்குவதற்கான கோப்பிற்கு அனுமதி கொடுக்காமல் பாப்ஸ்கோ மதுபானக் கடைகளுக்குக் கிஸ்தி கட்டுவதற்கு ரூபாய் 1½ கோடியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோப்பில் எழுதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இந்த நிலையில், பாப்ஸ்கோ நிறுவனத்தில் கையிருப்பு தொகை சுமார் 50 லட்சம் ரூபாய் இருந்து வந்தது. கரோனா காலத்தைக் கருத்தில் கொண்டு இந்தப் பணத்தில் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் முன்பணமாக ரூ.5,000 வழங்க வேண்டுமென மேலாண் இயக்குநர் முத்துக்கிருஷ்ணனிடம் வலியுறுத்தப்பட்டது. அதற்குச் சம்மதிக்காத மேலாண் இயக்குனர் தனக்கு 20 மாதச் சம்பளமாக ரூ.19,60,000/- AGM-அமரன் 5 மாதச் சம்பளம் ரூ.2,25,000/-, AGM-ஸ்ரீபதி 5 மாதச் சம்பளம் ரூ.2,25,000/-, AGM -குருமூர்த்தி 5 மாதச் சம்பளம் ரூ.2,00,000/-, AGM-தினகரன் 5 மாதச் சம்பளம் ரூ.1,80,000/-, கம்பெனி செக்ரட்டரி ராஜம் 10 மாதம் சம்பளம் ரூ.5,00,000/-, ஆக மொத்தம் ரூ.32,90,000/- மேலும், மேலாண் இயக்குநருக்கு வேண்டப்பட்ட அலுவலக ஊழியர்கள் 27 நபர்களுக்கு 1 மாதச் சம்பளம் ரூ.6,17,196/- ஆக மொத்தம் ரூ.39,07,196/- சம்பளமாக வழங்கியுள்ளார்.

மேலாண் இயக்குநரின் இந்த நடவடிக்கை ஒரு மாதச் சம்பளம் கேட்டுப் போராடி வரும் 1,100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியையும், மன உளச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

தன்னிச்சையான மேலாண் இயக்குநரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும் சம்பளமாக எடுத்துக்கொண்ட ரூ.39,07,196/- தொகையை பாப்ஸ்கோ நிறுவனத்தின் கணக்கில் கொண்டு வந்து கரோனா பேரிடர் கால நிவாரண முன்தொகையாக செலுத்தவும் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் ரூ.5,000/- வீதம் வழங்கிடவும் வலியுறுத்தியும் பாப்ஸ்கோ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

ஏ.ஐ.டியு.சி மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமையில் நடந்த முற்றுகைப் போராட்டத்தில் மாநில செயல்தலைவர் வி.எஸ்.அபிஷேகம், பாப்ஸ்கோ தொழிற்சங்க தலைவர் ராஜூ, செயலாளர் மாரியப்பன், பொருளாளர் முருகேசன் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட நேரம் போராட்டம் நடத்தினர். பின்னர் மேலான் இயக்குநர் தவிர்த்து மற்ற பாப்ஸ்கோ அதிகாரிகள் பணத்தைத் திரும்ப அளிப்பதாகக் கூறியதையடுத்துக் கலைந்து சென்றனர்.