Advertisment

“முதல்வர் ரங்கசாமி நிரூபித்தால் அடுத்த தேர்தலில் தி.மு.க நிற்காது” - புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா

Puducherry Opposition Leader R. Siva's speech at Memorial Day for Martyrs Public Meeting

புதுச்சேரி மாநில தி.மு.க மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கடந்த 25ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு குருமாம்பேட்டில் நடைபெற்றது.தி.மு.க மாநில மாணவர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.பி. மணிமாறன் தலைமை வகித்தார்.தலைமைக் கழக சொற்பொழிவாளர் கந்திலி கரிகாலன், புதுச்சேரி மாநில தி.மு.க அமைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, தலைமைக் கழக பேச்சாளர் குடந்தை ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றி, மொழிப்போர் தியாகிகளுக்கு பொற்கிழி வழங்கி கௌரவித்தார்கள்.

Advertisment

இந்த கூட்டத்தில் திமுக மாநில அமைப்பாளர் இரா. சிவா பேசும்போது, “புதுச்சேரியில் எந்த ஒரு கட்சிக்கும் தி.மு.க போன்று ஜனநாயக அமைப்பு இல்லை. பற்றுள்ள தொண்டர்களும் இல்லை. அதற்கு காரணம் இயக்கத்தின் மீதும், அதன் கொள்கை, மொழி, இனம், திராவிட சித்தாந்தத்தின் மீது பற்றுள்ள தொண்டர்களை கொண்டுள்ளோம். அதனால் தான் புதுச்சேரியில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும் என்று நம்பிக்கையாக நாங்கள் கூறுகிறோம். கலைஞர் காட்டிய வழியில் எங்கள் தலைவர் தமிழ்நாடு முதல்வர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வழிகாட்டுதலோடு நாங்கள் வீறுநடை போடுகிறோம். புதுச்சேரியில் மக்கள் நலனுக்காக எல்லா பிரச்சனைகளையும் தி.மு.க கையில் எடுத்து போராடி வருகிறது. தி.மு.க தான் இந்த அரசுக்கு கடிவாளமாக இருக்கிறது. புதுச்சேரியில் இரட்டை என்ஜின் பூட்டிய ஆட்சியாக இருந்தாலும், இந்த ஆட்சி டெல்லியில் இருந்து தான் இயக்கப்படுகிறது. ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆட்சியில் இருந்தால் போதும் என்று இருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. அமைச்சர்கள் அடித்துக் கொள்கிறார்கள். இந்தியாவை ஆளக்கூடிய மிகப் பெரிய கட்சியான பா.ஜ.க தானாக ஆட்சிக்கு வர முடியவில்லை. காங்கிரசில் இருந்து மூன்று, நான்கு பேரை மிரட்டி இழுத்துச் சென்றார்கள். ஆட்சி அமைப்பதற்கு முன் நியமன உறுப்பினர்களை நியமித்தார்கள். சுயேட்சையாக வெற்றி பெற்ற மூன்று பேரை வைத்து மெஜாரிட்டியாக இருக்கிறோம் என்று சொல்லி ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொண்டார்கள். ராஜ்யசபாவை பிடுங்கி கொண்டார்கள். ஆனால், இன்று உங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆதரவளித்த எம்.எல்.ஏக்கள் உங்களுக்கு எதிராக பொது மேடையில் பா.ஜ.க சரியில்லை என்றும் எங்களுக்கும், புதுச்சேரிக்கும் எதுவும் செய்யவில்லை என்று கூறி லாட்டரி அதிபரை முன்னிறுத்தினார்கள். லாட்டரி அதிபர் புதுச்சேரியை நல்ல விலைக்கு வாங்குகிறேன் என்று கூறி எங்களையும் வாங்கிவிட்டார், மீதி இருக்கும் பா.ஜ.க எம்எல்ஏக்களையும் வாங்கி விடுவோம் என்று கூறி விட்டார் என்றெல்லாம் பொதுமேடையில் கூறினார்கள். இப்படி கேவலமான ஜனநாயகத்தை புதுச்சேரியில் பா.ஜ.க அரங்கேற்றி வருகிறது.

Advertisment

புதுச்சேரி அரசாங்கம் இன்று போதையில் பயணிக்கிறது. அரசின் கொள்கை என்ன என்பது தெரியாமல் உள்ளது. மதுவிலக்கில் அரசின் கொள்கை என்ன?. நிலத்தடி நீரை பாதிக்கும் வகையில் தண்ணீரை மூலதனமாக கொண்டு செயல்படும் எந்தவொரு தொழிற்சாலையும் புதுச்சேரியில் வரக்கூடாது என தி.மு.க ஆட்சியில் அரசாணை கொண்டு வரப்பட்டது. ஆனால், அதை மீறி புதிய மதுபான தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி தரப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது ஊர் முழுக்க பேச்சாக உள்ளது. இதில் தி.மு.கவின் நிலைப்பாடு என்ன என்றெல்லாம் கேள்வி எழுந்தது. நாங்கள் உறுதியாக சொல்வது மதுபான தொழிற்சாலை புதுச்சேரிக்கு வரக்கூடாது என்பதுதான். அதற்கு காரணம் புதுச்சேரியின் நீர் ஆதாரத்தை பயன்படுத்தி தயார் செய்யப்படும் மதுபானங்களை வேறு மாநிலங்களில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதை எதிர்த்து தான். அதுவும் ஆட்சியாளர்களுக்கு வேண்டிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளார்கள். ஆளுநர் தமிழகத்தை போல் இல்லாமல் நல்லவராக இருப்பதால் இதற்கு அனுமதி அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளார். அதை நாங்கள் வரவேற்கிறோம்.

Puducherry Opposition Leader R. Siva's speech at Memorial Day for Martyrs Public Meeting

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரியின் வருவாயை பெருக்க இதுபோன்ற புதிய நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். புதிய மதுபான தொழிற்சாலைகளால் புதுச்சேரிக்கு எந்த வகையில் வருமானம் கிடைக்கும் என்று முதல்வர் ரங்கசாமி நிரூபித்தால் அடுத்த தேர்தலில் தி.மு.க நிற்காது. அதேபோல் சுற்றுலா வளர்ச்சி மூலம் வருவாயை பெருக்குவது தான் அரசின் நோக்கம் என்றும் அதற்காகத்தான் அதிகளவில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும், இன்னும் 200 ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். அரசுக்கு வருவாய் வரும் என்றால் மகிழ்ச்சிதான். அப்படி என்றால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஏலம் விடுவது போல் புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களுக்கு பொது ஏலம் விட வேண்டும். அல்லது தமிழகம், கேரளா, ஆந்திர அரசுகள் போல் புதுச்சேரி அரசே மதுபான கடைகளை ஏற்று நடத்த வேண்டும். 450 ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. சுற்றுலா லைசென்ஸ் என்ற போர்வையில் தகுதியற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதுவும் சும்மா வழங்கவில்லை. மிக கேவலமான இந்த நடவடிக்கையை மக்கள் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களின் இத்தனை ஆண்டுகால அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகும் வகையில் கொண்டு வரப்பட உள்ள மதுபான ஆலை விவகாரத்தில் முதல்வர் தள்ளாடாமல் தெளிவான முடிவு எடுக்க வேண்டும் என்று நாங்கள் பலமுறை எடுத்துக் கூறி விட்டோம். ஆனால் ஆட்சியாளர்கள் கேட்கவில்லை. ஆகவே, புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் பொதுநல வழக்கு தொடரப்படும்.

புதுச்சேரிக்கு உண்மையாக வருவாய் வேண்டும் என்றால் நல்ல திட்டங்களை கொண்டு வாருங்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம். புதுச்சேரியில் நல்ல சுற்றுலாவை வளர்த்தெடுங்கள். சனி, ஞாயிறு கேளிக்கை சுற்றுலாவாக மாறி உள்ளது. இதை புதுச்சேரி மக்கள் விரும்பவில்லை. கோவில் சுற்றுலா நகரமாக புதுச்சேரி மாற வேண்டும். பெண்கள், குழந்தைகள் சுதந்திரமாக சுற்றுலாவை அனுபவிக்கும் திட்டங்களை கொண்டு வர வேண்டும். அரிக்கன்மேடு, ஆரோவில் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஆறுகளை வளப்படுத்தி சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்.அதேபோல், புதுச்சேரியில் அரசியலை கமர்சியலாக்க ஒரு கூட்டம் கிளம்பி உள்ளது. அந்த கூட்டம், இயற்கை சீற்றத்தால் மக்கள் பாதிக்கும்போது வந்து உதவவில்லை. புதுச்சேரியை விலைக்கு வாங்கி, கேசினோ கிளப், தெருவுக்கு தெரு சூதாட்டம், லாட்டரி கொண்டு வர திட்டம் தீட்டி புதுச்சேரி மக்களை வசப்படுத்த நினைக்கிறது. அது ஒருபோதும் நடக்காது. அதற்கெல்லாம் புதுச்சேரி மக்கள் நல்ல பதில் அளிப்பார்கள். எதிர்காலத்தில் நீங்கள் எந்த வழியில் வந்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அதேபோல் ஒன்றிய அரசு கொண்டுவரும் திட்டங்களை செயல்படுத்தும் பரிசோதனைக் கூடமாக புதுச்சேரியை பயன்படுத்துகிறார்கள். ஜிஎஸ்டி, இடபிள்யூஎஸ் என புதியதாக கொண்டு வருவதை புதுச்சேரியில் அமல்படுத்துகிறார்கள். இடபிள்யூஎஸ் பிரிவில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என கணக்கெடுப்பு நடத்தாமல் இடஒதுக்கீட்டை புதுச்சேரியில் கொடுக்கின்றனர். தலித், எம்பிசி மதிப்பெண்களை விட குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு இதில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் மோசடி நடக்கிறது. இதற்கு புதுச்சேரி அரசு உடந்தையாக இருப்பது வேதனை அளிக்கிறது” எனப் பேசினார்.

rangasamy Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe