ADVERTISEMENT

"அந்த ஆறு பேர் விரும்புவதையே மோடி செயல்படுத்துகிறார்!" - ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

06:21 PM Feb 17, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, ஏ.எஃப்.டி. திடலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய ராகுல்காந்தி எம்.பி., "எவ்வளவு பேர் எந்த மொழி பேசுகின்றனர், எவ்வளவு பேர் ஒரு பண்பாட்டில் இருக்கிறார்கள் எனக் காங்கிரஸ் கருதுவதில்லை. புதுச்சேரி சிறிய மாநிலமாக இருக்கலாம்; ஆனால், மற்ற மாநிலங்களைப் போல முக்கியத்துவம் புதுச்சேரிக்கு உண்டு. இந்தியாவின் பல கலாச்சாரம், பல மொழிகள் தான் பலமாக இருப்பதாக காங்கிரஸ் ஆத்மார்த்தமாக நம்புகிறது. கலாச்சாரம், பண்பாடு, மாநில உரிமைகளை காங்கிரஸ் எப்போதும் பாதுகாக்கப் பாடுபடும். புதுச்சேரியை தங்கள் சொந்த சொத்தாக யாராவது கருதினால் அவர்கள் விரைவில் ஏமாறுவார்கள். புதுச்சேரிக்கு வெளியே இருப்பவர்களுக்கு அந்த மாநிலம் ஒருபோதும் சொந்தமாகாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அரசை கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செயல்படவிடவில்லை. தேசத்தின் பிரதமராக இருக்கும் மோடி, புதுச்சேரி மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொள்ளவில்லை.

என்னைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிப்பதில்லை. புதுச்சேரி மக்களைக் காப்பாற்ற தர்மயுத்தத்தில் ஈடுபட உள்ளேன். எங்களுக்குத் தரும் வாக்கு புதுச்சேரி மக்களாகிய உங்களின் கனவுகளை நிறைவேற்றும். மத்திய அரசின் தைரியத்தில்தான் கிரண்பேடி அதிகாரத்தைக் கையில் எடுத்துச் செயல்பட்டார். தமிழகத்தில் தமிழ் பேசக்கூடாது என்கிறார்கள்; அரசை எதிர்த்துப் பேசினால் தீவிரவாதி என்கிறார்கள். ஐந்து அல்லது ஆறு பணக்காரர்கள் விரும்புவதையே பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்துகிறார். ஆறு ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கைகள் பணக்காரர்களுக்காகவே இருந்துள்ளது. மோடி என்ன சொல்கிறாரோ, அதுதான் நாட்டின் சொந்த கருத்தாகக் கடைப்பிடிக்க வேண்டும் என நினைக்கிறார். மோடியின் உணவு, உடையை நாட்டு மக்களும் பின்பற்ற வேண்டும் என விரும்புகிறார்" என்றார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள், புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, புதுச்சேரியில் பாரதிதாசன் கல்லூரி மாணவிகளிடையே கலந்துரையாடிய ராகுல்காந்தி, "எனது தந்தையைக் கொன்றவர்கள் மீது எந்தக் கோபமும் இல்லை; நான் அவர்களை மன்னித்துவிட்டேன். என் தந்தையை இழந்தது மிகுந்த வலியை ஏற்படுத்தியது" என்று உருக்கமாகத் தெரிவித்தார். பின்பு மாணவிகளுடன் ராகுல் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT