Skip to main content

மத்திய அரசைக் குறை சொன்ன புதுச்சேரி முதலமைச்சர்

Published on 14/12/2022 | Edited on 14/12/2022

 

puducherry cm rangasamy talks about central government 

 

புதுச்சேரியில் நடைபெற்ற விழா ஒன்றில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசு மீதான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

 

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள சனி பகவான் ஆலயத்தில் உள்ள ஆன்மீகப் பூங்காவில் வெளிமாநில பக்தர்களை கவரும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் ரூபாய் 7.70 கோடி செலவில் 9 நவக்கிரக மூர்த்திகளின் சன்னதிகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு பணிகள்  முடிவடைந்தன. இதற்கான திறப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிருஷ்ணன் ரெட்டி  காணொளி காட்சி மூலம்  ஆன்மீகப் பூங்காவை திறந்து வைத்தார். இந்த விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

 

இந்த விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, "புதுச்சேரி சுற்றுலா திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மகிழ்ச்சிக்குரியது.  புதுச்சேரிக்கு வணிக வரி, கலால் வரி, சுற்றுலாப் பயணிகள் வருவாய் தான் ஆதாரமாக உள்ளது. புதுச்சேரியில் சுயமாக வருவாயை பெருக்க சுற்றுலாவை வளர்ச்சி அடைய வைக்க வேண்டிய நிலை உள்ளது. மத்திய அரசிடம் அடிக்கடி நிதி கேட்க வேண்டும் என்ற நிலை இருக்கக் கூடாது. மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்குவதற்கு ஏற்படும் கால தாமதத்தால் பல திட்டங்கள் முடங்கும் நிலையில் உள்ளது. விதிகளை தளர்த்தினால் புதுச்சேரியில் முதலீடு செய்ய வருவார்கள்.

 

நான் முதலமைச்சராக பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளாகிறது. ஆனால் சிலவற்றில் முடிவெடுக்க தடங்கல்கள் ஏற்படுவதால் வளர்ச்சியும், வருவாயும் பாதிக்கப்படுகின்றது. புதுச்சேரியில் முதலீடு செய்ய வருபவர்களுக்கு புதுச்சேரிக்கு வந்தால் உடனடியாக அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வர வேண்டும். புதுச்சேரியை நான் சிங்கப்பூராக ஆக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நிர்வாக சிக்கல்களால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை" என கூறினார்.

 

பின்பு பேசிய மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, "முதலமைச்சரின் கோரிக்கைகள் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அதற்கான தீர்வுகள் கிடைக்கும். சுதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தை சேர்த்துள்ளோம். இதன் மூலம் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு ரூ.100 கோடியில் சுற்றுலா திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தார்.

 

அதனைத்  தொடர்ந்து பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், "புதுச்சேரியை புயல் அச்சுறுத்திக் கொண்டிருந்தபோது முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளின் பணியை பாராட்டுகின்றேன். புயலை நல்ல முறையில் எதிர்கொண்டதாக சிலர் முதுகில் தட்டிக் கொண்டிருக்கும் போது புதுச்சேரி அரசு அதை திறம்பட கையாண்டது பாராட்டுக்குரியது" என்றார்.

 

தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க ஆதரவுடன் ஆட்சி செய்து வரும் முதல்வர் ரங்கசாமி மத்திய அமைச்சர் மற்றும் ஆளுநர் முன்பாக தனது அரசுக்கு ஏற்படும் பின்னடைவுகளை பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி அரசின் சுற்றுலா மேம்பாடு; 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்'  மியூசியம் திறப்பு

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
Opening ceremony Of Artist AP Shreethar's Wonders of White Town 

ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் விண்டேஜ் கேமரா, கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தற்போது இவரது கைவண்ணத்தில் புதுச்சேரியின் பாரம்பரியமிக்க ஒய்ட் டவுன்-இல் பிரம்மாண்ட கலாச்சார நிறுவனம் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்' என்ற மியூசியம் தைத்திருநாளை முன்னிட்டு ஜனவரி 15-ஆம் தேதி மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களால் திறக்கப்பட்டு இருக்கிறது.

வில்லா குகா, ரூ சுஃப்ரென், புதுச்சேரி - 605001 என்ற முகவரியில் உருவாகி இருக்கும் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்', இந்தியாவின் அருங்காட்சியக மனிதராக அறியப்படும் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் திரு.வே.குகன் இணைந்து உருவாக்கி உள்ளனர்.

லைவ் ஆர்ட் மியூசியம், டெடி மியூசியம் மற்றும் ஃபிஷ் மியூசியம் என மூன்று பிரத்யேக அருங்காட்சியகங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த கலை மற்றும் கலாச்சார மையத்தை கட்டடத்துறையில் புகழ்பெற்ற அகிலன் ஆர் வடிவமைத்துள்ளார். மெழுகு சிலை சிற்பங்கள், கொண்ட லைவ் ஆர்ட் மியூசியத்தில் உலகின் பிரபல தலைவர்களான மகாத்மா காந்தி, அப்துல் கலாம், மதர் தெரேசா, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட பலர் தத்ரூபமாக இருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகின் மிக உயரமான மனிதன் மற்றும் குள்ளமான மனிதன் பார்க்க உண்மையாகவே காட்சியளிக்கும் சிலிகான் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

டெடி (Teddy) மியூசியம் மனித குலத்தின் சர்வதேச அழகியல், குழந்தை பருவ நினைவுகளை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 195 நாடுகளின் பாரம்பரிய மிக்க உடைகளில் 500 டெடி பொம்மைகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபிஷ் (Fish) மியூசியத்தில் நீருக்கடியில் உள்ள எண்ணற்ற உயிரினங்களை தழுவி உருவாக்கப்பட்ட சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த மியூசியத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் அவரது குழுவினரை வாழ்த்தினார். மேலும் அவர் கூறும்போது, மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள, தலைவர்களின் சிலிகான் சிலைகள் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இந்த மியூசியம் அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது. சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் இந்த மியூசியத்தை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது இருக்கிறது. கலையம்சம் பொருந்திய நல்ல அருங்காட்சியம் அமைந்து இருப்பது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும். சுற்றுலாவுக்கு புதுச்சேரி அரசு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதற்கு உறுதுணையாக இந்த அருங்காட்சியகம் அமைந்து இருப்பது எங்களுக்கு சிறப்பு என்று பாராட்டி கூறினார்.

Next Story

புதுச்சேரி; ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் போக்கு?

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Puducherry; Conflict between the Governor and the Chief Minister?

புதுச்சேரி மாநிலம் காமராஜர் மணிமண்டபத்தில் பொதுப்பணித்துறைக்கு, டெல்லியில் உள்ள நிறுவனத்துடன் கழிவுநீர் பராமரிப்பு உபகரணம் கொள்முதல் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலைமை வகித்தார்.புதுவை முதல்வர் ரங்கசாமி முன்னிலை வகித்தார்.

இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசிதாவது, “பல ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தப்படுத்தவும், பாதாள சாக்கடைகள் உள்ளிட்டவைகளை வெளிநாட்டில் சுத்தம் செய்வது போல் நவீன எந்திரங்கள் மூலமாக சுத்தம் செய்ய எந்திரங்களை வாங்க வேண்டும் என்று கூறி வருகிறேன். தற்போது, எதிர்பார்த்த இந்த திட்டம் செயல் வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக வெற்றி பெற ஊழியர்கள் கையில் தான் இருக்கிறது. பிறர் மீது பழி போட்டு காலம் தள்ளக் கூடாது.

அரசு செயலர்கள் தங்களிடம் வரும் கோப்புகளை துறை தலைவர்கள், இயக்குநர்களிடம் விவரங்களை கேட்டறிந்து உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், பொதுப்பணித்துறை செயலரின் பணி திருப்திகரமாக இல்லை. அரசு செயலரின் நடவடிக்கையால் பொதுப்பணித்துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகள் அச்சமுடன் பணியற்றும் சூழல் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். புதுச்சேரி அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்காத காரணத்தினால் புதுவையில் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வரமுடியாத சூழல்நிலை ஏற்பட்டிருக்கிறது. புதுவையின் வளர்ச்சிக்கு தலைமை செயலர், அரசு செயலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். 

இதனை தொடர்ந்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “முதல்வர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். உச்சநீதிமன்றம் ஆளுநர், முதல்வர் ஆகியோர் பிரச்சனைகளை அமர்ந்து பேசி தீர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது. புதுவை தலைமை செயலாளர் திட்ட காலதாமதத்துக்கான காரணம் குறித்து அமர்ந்து பேச வேண்டும். இதற்கான விளக்கத்தை பெற வேண்டும். துறை தோறும் அதிகாரிகள் பேசி காலதாமதத்தை தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே தலைமை செயலரிடம் தெரிவித்துள்ளேன்.இதை சுமுகமாக பேசி தீர்க்க வேண்டும்” என்று கூறினார்.