வெளிமாநிலத்தவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் -  நாராயணசாமி பேட்டி!   

narayanasamy

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “புதுச்சேரியில் தற்போதைய நிலையில் மூன்று பேர் மட்டுமே கரொனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று புதிதாக 69 பேருக்கு உமிழ் நீர் கொண்டு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் இல்லை என்று வந்துள்ளது. புதுச்சேரியின் பிராந்தியங்களான காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகள் தொற்று இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இதுவரை 17 லட்சம் பேர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்துள்ளோம்.

புதுச்சேரி எல்லைப்பகுதியான கோரிமேடு பகுதியில் காலை ஆய்வுக்குசென்றபோது, தமிழகபகுதியில் இருந்து பலர் ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க வருவது தெரிந்தது. எல்லைப்பகுதியில் உள்ள மருத்துவர்கள் சோதனை செய்கின்றனர். மருத்துவ பரிசோதனைக்கு வருபவர்களை தவிர மற்றவர்களை புதுச்சேரி எல்லைக்குள் அனுமதிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளேன்.

புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று கடைகளை திறந்து வைக்கின்ற நிலையில், சோதனைக்கு வரும் அதிகாரிகளிடம் கடை உரிமையை காண்பிக்க வேண்டும். அதனால் அரசின் அனுமதி பெற்று கடைகளை படிப்படியாக திறக்கலாம்.

மே 3 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. அக்கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசும், அண்டை மாநிலங்களும் என்ன முடிவெடுக்கின்றன என்பதை ஆய்வு செய்து ஊரடங்கு படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேசமயம். முக கவசம் அணியாமல் வந்தால் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். 100 ரூபாய் அபராதம் கட்டினால் அவருக்கு முக கவசம் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

corona virus interview issue Narayanasamy
இதையும் படியுங்கள்
Subscribe