Advertisment

“மூன்று அமைச்சர்கள், எந்த திட்டத்தில் அதிக வருமானம் வரும் என பார்த்து செய்துள்ளனர்”-அமைச்சர்களின் தந்திரங்களை விளக்கிய பி.டி.ஆர்!   

PTR explaining the ministers' tactics

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படும் திட்டங்களை ஆய்வு செய்த தமிழக நிதி மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அங்கு நடந்த குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்தார். அதே போல் இதனை மத்திய, மாநில தணிக்கை குழு மூலம் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் பெரியார் பேருந்து நிலையம் மக்கள் நிதியில் கட்டியது மாபெரும் தவறு என்றார். அதன் பின்னர் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாகன நிறுத்த கட்டுமான பணிகள் மற்றும் பெரியார் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் வணிக வளாக பகுதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார்.

Advertisment

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “ஸ்மார்ட் சிட்டி திட்டம் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இந்த ஆய்வு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. ஆய்வுக் கூட்டத்திற்கு முன் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருடன் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். பொதுமக்கள் மற்றும் கடந்த அதிமுக அரசின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூட கருத்து கேட்காமல் மூன்று அமைச்சர்களின் வருமானத்தைக் கருத்தில் கொண்டு மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை மூன்று அமைச்சர்கள், எந்த திட்டத்தில் தங்களுக்கு அதிக வருமானம் வரும் என்று பார்த்து இந்த திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். மூன்று அமைச்சர்களின் ஊழலும் வருமானம் மட்டுமே முக்கியமாகப் பார்க்கப்பட்டுள்ளது.

Advertisment

அதற்கு சிறந்த உதாரணம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி இருந்த பேவர் பிளாக் சாலை மற்றும் ஆற்று மணல்கள் திருடப்பட்டு கருங்கல் போடுவதாக முறைகேடு செய்துள்ளனர். நன்றாக இருந்த சாலையைக் கெடுத்து ஊழலுக்காக, வருமானத்திற்காக அமைச்சர்கள் இது போன்ற திட்டங்களை செய்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தாமதமாக உள்ள திட்டங்களை எவ்வாறு சிறப்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வுகள் செய்து வருகின்றோம். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே வாகனம் நிறுத்தத்திற்காக கட்டப்பட்டுள்ள வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு குளியலறை, கழிப்பறை உள்ளிட்டவை போதுமான வகையில் அமைப்பது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றங்கரையில் போடப்பட்ட சாலைகள் பல இடங்களில் பிளவு ஏற்பட்டு உள்ளது. அந்த பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது போன்ற திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கூர்ந்து கண்காணிப்படவேண்டும்.

PTR explaining the ministers' tactics

இதுபோன்று முறையீடுகள் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் மத்திய, மாநில தணிக்கை துறை மூலம் கூர்ந்து கண்காணித்து எவ்வாறான முறைகேடுகள் நடந்துள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒரு திறப்பு விழாவிற்கு சென்ற போது அந்த திட்டத்தில் கட்டப்பட்ட தரைதளம் உடைந்து விழுந்தது மக்களுக்கு ஞாபகம் இருக்கும். அதுபோன்ற ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக தான் நாங்கள் இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். முதல்வர் தலைமையிலான அரசு மக்கள் பணத்தை எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்பது கடமையாக கொண்டு செயல்படுகின்றோம். வருமானம் வரக்கூடிய திட்டங்களில் கொஞ்சம் அரசு நிதியும், கொஞ்சம் கொஞ்சம் கடனும் பெற்று செய்தால் அதில் வரும் வருமானத்தை கொண்டு கடனை அடைக்க உதவியாக இருக்கும். சேவை மனப்பான்மையுடன் செய்யப்படும் திட்டங்கள் முழுமையாக அரசு நிதியில் இருந்து செய்ய வேண்டும். குடிநீர் இணைப்புக்கு பெறப்படும் நிதி அதிகமாக பெறப்படுகின்றது.

ஆனால் பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் வரி வசூல் செய்யப்படுவதில்லை. பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கான வசூல் சற்று தான் வித்தியாசம் உள்ளது. அதனை முதலில் சரிசெய்ய வேண்டும். பெரியார் பேருந்து நிலையம் முழுமையாக மக்கள் நிதியில் கட்டியது;இதுமுற்றிலும் தேவையற்றது. பள்ளிகள் சுகாதாரத்தை மேம்படுத்தும் கழிப்பறை, குளியலறை கட்டுவதற்கு மக்களின் பணத்தை பயன்படுத்தலாம். வருவாய் தரக்கூடிய திட்டங்களில் மக்களின் பணத்தை முழுவதும் செலவு செய்யக் கூடாது. வருமானம் வரக்கூடிய திட்டங்களில் அரசு நிதி கொஞ்சமும் மீதமுள்ள நிதி கடன் பெற்று திட்டத்தை நிறைவேற்றினால் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் வரும் வருவாயைக் கொண்டு அந்த கடனை அடைக்க உதவியாக இருக்கும். அடுத்து வரும் ஆண்டுகளில் இவற்றை கருத்தில் கொண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தொலைநோக்குத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் மூலம் கட்டமைப்பு நிதி மேம்பாட்டு கழகம் மூலம் 70 கோடி ரூபாய் செலவு செய்து ஒரு திட்டமும் செய்யாமல் நிதி மக்களுக்கு பயன் இல்லாமல் தண்ணீராக கரைந்து சென்றுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து இதுபோன்ற திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தலாம் என்று கருத்துக்கள் கேட்டுதான் இனி புதிய திட்டங்களை நாங்கள் செயல்படுத்துவோம். திட்டங்கள் அதிகம் கொண்டுவர, கொண்டுவர வளர்ச்சி அதிகரிக்கும் வளர்ச்சியின் மூலம் பொருளாதாரம் மேம்படும். தமிழக முதல்வர் ஏற்கனவே கூறியது போல் கட்சி வேறுபாடின்றி யார் மீது எங்கெங்கு குற்றச்சாட்டு உள்ளதோ காழ்ப்புணர்ச்சி இல்லாமல் உரிய ஆதாரம் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்த அரசியல்வாதிகளை மட்டும் பேசாமல் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தும் அடிப்படை தவறாக உள்ளது.

அந்த அறிவாளிகள் மேற்கொண்ட திட்டம் தங்களுக்கே தெரியும் பேவர் பிளாக் சாலையில் அகற்றி அங்கிருந்த ஆற்று மணலை திருடிய பின்னர் கருங்கற்களை பதித்தனர். அதில் அதிக சூடு ஏற்படுவதாகக் கூறி அதில் வெள்ளை நிற பெயிண்ட் அடித்துள்ளனர். இதுபோன்ற திட்டங்களைத் தான் அந்த அறிவாளிகள் செய்து உள்ளார்கள். பெரியார் பேருந்து நிலையத்தில் கடைசி நேரத்தில் திட்டத்தில் கூடுதல் நிதியை முறைகேடு செய்வதற்காக தரைதளத்தில் கடைகள் கூடுதலாக கட்டுவதற்கு நிதிகள் அதிகம் ஒதுக்கி உள்ளனர். பழி வாங்குவது இருக்கட்டும்; மக்களின் நிதியை முறையாக எவ்வாறு செலவிடுவது என்பது குறித்து எங்களுடைய பணிகள் இருக்கும். காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனை பாடமாகக் கொள்ளவேண்டும் அப்படி செய்தால் மட்டுமே எதிர்வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காது. இது போன்ற நடவடிக்கைகள் தான் முக்கியம் தனி நபர்களை தாக்குதல் செய்வது முக்கியமல்ல” என்றும் தெரிவித்தார். பெரியார் பேருந்து நிலையம் மற்றும் அங்குள்ள வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களையும் ஆய்வு மேற்கொண்டனர்.

admk ptr palanivel thiyagarajan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe