ஈழத்தமிழர்களின் நலன் காக்கவும், சிறுபான்மையினரான முஸ்லிம் சமுதாயத்தினரின் உரிமைகளைக் காக்கவும், மதரீதியாக நாட்டைக் கூறுபோடும் மத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டிசம்பர் 17 (நாளை) அன்று கழகம், போராட்டக் களம் காண்கிறது என்றும், நாடு காத்திடத் திரளுவோம் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
"வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது!" என்று, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தெற்கிலிருந்து எழுப்பிய முழக்கம், அன்று திசையெட்டும் பரவி, இந்திய அரசியலின் போக்கையும் நோக்கையும் மாற்றிக் காட்டியது.
அது ஆக்கபூர்வமான - ஆரோக்கியமான மாற்றம். சமச்சீரான வளர்ச்சியை நோக்கிய மாற்றம். அதற்கு நேர்மாறாக, இப்போது மத்திய பா.ஜ.க. அரசாங்கத்தின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால், வடக்கு கொழுந்து விட்டு எரிகிறது - வடகிழக்கு கொந்தளிக்கிறது - தெற்கு குமுறுகிறது என்ற அவல நிலைமை உருவாகியுள்ளது.
அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை வழங்கும் மதச்சார்பற்ற தன்மையை, அடிப்படை அம்சங்களில் ஒன்றெனக் கொண்ட இந்திய அரசியல் சாசனத்தையே கேள்விக்குறியாக்கி இருட்டடிப்புச் செய்திடும் விதத்தில், மத்திய பா.ஜ.க. அரசு, மாநிலத்தின் அடிமை அ.தி.மு.க. அரசின் துணையுடன் நிறைவேற்றியிருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, மக்கள் மன்றத்திலும் எதிர்த்துக் களம் காண்கிற இயக்கம்தான் தி.மு.கழகம்.
கழகத்தின் இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி தலைமையில், இளைஞரணியினர் கடந்த டிசம்பர் 13 அன்று சென்னையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் களம் கண்டனர். அந்தச் சட்டத்தின் நகலைக் கிழித்தெறிந்து எதிர்ப்பினை வெளிப்படுத்திய உதயநிதியும், இளைஞரணித் தோழர்களும் காவல்துறையின் கடும் கரங்களால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலையாகினர்.
மாநிலத்தின் பல பகுதிகளிலும் இளைஞரணியினர், குகை விட்டுக் கிளம்பும் புலியெனக் களமிறங்கி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆவேசக் குரல் எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், தலைமைக் கழகம் அறிவித்துள்ள போராட்டம் டிசம்பர் 17 – செவ்வாய்க்கிழமை அன்று தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கிறது.
தி.மு.க. எதிர்க்கட்சியாக இருப்பதால், மத்திய - மாநில அரசுகள் எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும், எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் எதிர்க்கிறது என்று விமர்சிக்கின்ற ஆளுந்தரப்பினர், நாம் முன்வைக்கும் கேள்விகளுக்கு ஒருபோதும் பதிலளிப்பதில்லை. ஆனால், மக்களிடம் நமது போராட்டத்திற்கான தேவையை -நியாயத்தை எடுத்து வைத்து, அவர்களின் ஆதரவையும் பங்கேற்பையும் உறுதி செய்ய வேண்டிய ஜனநாயகக் கடமை நமக்கு இருக்கிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
தற்போது பா.ஜ.க. அரசு செய்திருக்கும் திருத்தம் என்பது, 1955-ல் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கடந்த 60 ஆண்டுகளாக எந்தவிதப் பிரச்சினையுமின்றி நடைமுறையில் இருந்துவரும் குடியுரிமைச் சட்டத்தில் செய்துள்ள திருத்தமாகும். அந்தத் திருத்தத்திற்கு ஏதேனும் அவசிய - அவசரத் தேவை இருக்கிறதா என்பதும், அப்படி அவசரமென்றால், அதில் ஏன் மதரீதியான - இனரீதியான பாரபட்சம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதும்தான் நாம் எழுப்பும் கேள்வி.
நாட்டின் வளர்ச்சியை அதலபாதாளத்திற்குத் தள்ளுகின்ற கடுமையான பொருளாதாரப் பின்னடைவு, வேலையின்மை, அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலையேற்றம் போன்ற பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளினால், மக்களிடையே வளர்ந்து வரும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் திட்டமிட்டுத் திசை திருப்புவதற்காகவே, பாரபட்சமான - ஓரவஞ்சனை கொண்ட இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குள் யாரெல்லாம் வரலாம்; வந்தால் யாருக்கெல்லாம் குடியுரிமை வழங்கப்படும் என்பதை இந்தச் சட்டம் வரையறுக்கிறது.
அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த, இசுலாமியர்கள் நீங்கலாக மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் வரலாம் என்கிறார்கள். இந்துக்களை, கிறிஸ்தவர்களை, சீக்கியர்களை, புத்த மதத்தினரை வரவேற்கும் போது, இசுலாமிய சிறுபான்மையினரை எதற்காக வெறுத்துப் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் தி.மு.கழகம் உள்ளிட்ட மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் எழுப்புகின்ற கேள்வி.
அதுமட்டுமல்ல, அண்டை நாடுகளான இந்த மூன்று நாடுகளிலிருந்தும் இந்துக்கள் உள்ளிட்டோர் வரலாம் என்கிறபோது, இந்தியாவின் தென்முனையில் கண்ணீர்த்துளி போலக் காட்சியளிக்கும் அண்டை நாடான இலங்கையைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு வாய்ப்பளிக்காமல், தடை விதித்தது ஏன் என்பது கழகம் எழுப்புகின்ற மிக முக்கியமான கேள்வி.
அந்த நாட்டில் நடைபெற்ற இனப்படுகொலையால், 30 ஆண்டுகளுக்கு முன்பாக தாய்த்தமிழகத்தில் தஞ்சம் அடைந்த தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் எதிர்காலம் என்னவாகும் என்கிற கவலை தோய்ந்த கேள்வியை முன்வைத்தே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.கழகம் இந்தத் திருத்தச் சட்டத்தை எதிர்த்தது.
தி.மு.கழகத்தின் நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள், இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட தொடக்க நிலையிலேயே, அதனை எதிர்த்து முழங்கி, கழக உறுப்பினர்களுடன் வெளிநடப்புச் செய்து, கழகத்தின் நிலையினைப் பதிவு செய்தார். அதன்பிறகு, மீண்டும் அவைக்கு வந்து, மசோதா மீதான வாதங்களில் தி.மு.கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மத்திய சென்னை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான திரு.தயாநிதி மாறன் அவர்கள், நாட்டை மதரீதியாகப் பிளவுபடுத்தும் பா.ஜ.க.,வின் திட்டத்தை எதிர்த்து சங்கநாதம் போல ஆற்றிய உரை, இந்திய அரசியலின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தது மட்டுமல்ல, உலக அரங்கிலும் இந்தத் திருத்த மசோதா மீதான பார்வை பதியும் அளவிற்குச் சென்றது.
நள்ளிரவு வரை நடைபெற்ற விவாதங்களில் தி.மு.க. உறுப்பினர்கள் பங்கேற்றதுடன், மக்களவையில் அந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். இருப்பினும், பா.ஜ.க. அரசுக்கு உள்ள பெரும்பான்மை பலத்தினால், அந்தத் தீர்மானம் நிறைவேறிவிட்டது.
மாநிலங்களவையிலும் தி.மு.கழகத்தினர் இந்தத் தீர்மானத்தை கடுமையாக எதிர்த்து முழங்கினர். அதுமட்டுமல்ல, முஸ்லிம் சிறுபான்மையினருக்கும், ஈழத்தமிழர்களுக்கும் குடியுரிமை கிடைத்திட வழிவகை செய்திடவேண்டும் என்கிற திருத்தங்களையும், கழகத்தின் மாநிலங்களவைத் தலைவர் திரு. திருச்சி சிவா அவர்கள் முன்வைத்துப் பேசினார். மாநிலங்களவையில் தீர்மானத்தை நிறைவேற்றிட பா.ஜ.க.,வுக்குப் போதுமான பலம் இல்லாத நிலையில், தி.மு.கழகமும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் இதனை எதிர்த்து வாக்களித்தனர்.
அ.தி.மு.க.,வின் மாநிலங்களவை உறுப்பினர்களான 11 பேரும் எதிர்த்து வாக்களித்திருந்தால், இந்தியாவை மதரீதியாகப் பிளவுபடுத்த நினைக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் கொடுங்கோன்மைச் சட்டத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால், சிறுபான்மையினர் நலனிலோ, ஈழத்தமிழர் உரிமையிலோ எப்போதுமே உண்மையான அக்கறையின்றி இரட்டை வேடம் போடுகின்ற அ.தி.மு.க., தனது டெல்லி எஜமானர்களின் பாதம் பணிந்து செயல்பட்டதால் ஒரு விபரீதச் சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாகக் கிடைத்த வாக்குகள் 125. எதிர்ப்பு வாக்குகள் 105. அ.தி.மு.க.வின் 11 வாக்குகளும் எதிர்த்துப் போடப்பட்டிருந்தால், எதிர்ப்பு வாக்குகள் 116 என்ற எண்ணிக்கையை அடைந்திருக்கும். ஆதரவு வாக்குகள் 114 என்ற நிலைக்கு இறங்கியிருக்கும். அதன் மூலமாக மசோதா தோற்கடிக்கப்பட்டிருக்கும். தங்கள் கையிலிருந்த வலிமையான துருப்புச்சீட்டின் தன்மை அறியாத அடிமை அ.தி.மு.க., ஆதரவு வாக்களித்து, சிறுபான்மையினருக்கும் ஈழத்தமிழர்களுக்கும் மாபெரும் துரோகம் இழைத்திருப்பதை, வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.
மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத் தமிழர்களின் நலன்களைப் பற்றிக் கவலைப்படாமல், கடந்த 6 ஆண்டுகளாக தமிழர் விரோதத் திட்டங்களைத் திணிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவருகிறது. அதற்கு, ஈழத்தமிழர் குறித்து அக்கறை இருக்கும் என எதிர்பார்ப்பது வீண். அதுவும், இலங்கை அதிபர் கோத்தபயவை வலிந்து அழைத்து சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்து, இலங்கை ராணுவத்தைப் பலப்படுத்த நிதியுதவியும் செய்துள்ள மோடி அரசிடம் ஈழத்தமிழர்கள் மீதான கருணையை எப்படி எதிர்பார்க்க முடியும்?
ஈழத்தில் சிங்கள பவுத்த பேரினவாத அரசுகளால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, உயிரிழந்த தமிழர்களில் பெரும்பாலானவர்கள், இந்து மதத்தையும் சைவ நெறியையும் சேர்ந்தவர்கள்தான். அவர்களுடன் தமிழ் முஸ்லிம்களும் சிங்கள பவுத்த பேரினவாதத்தால் கொடுமைக்குள்ளானார்கள்.
பாகிஸ்தான் - வங்கதேசம் - ஆப்கானிஸ்தானிலிருந்து அந்நாடுகளின் சிறுபான்மையினரான இந்துக்கள் இந்தியாவுக்கு வந்து குடியுரிமை பெறலாம் என்கிற சட்டம் இயற்றியுள்ள பா.ஜ.க. அரசு, சிங்கள பவுத்த பேரினவாதத்தால் கொடுமைக்குள்ளாகும் இலங்கையின் சிறுபான்மையினரான ஈழத்தமிழ் இந்து - சைவ சமயத்தினருக்கு அந்த உரிமையை மறுப்பது ஏன்? இந்து மதத்திலும், தமிழர்கள் என்றால் புறக்கணிப்பதுதான் பா.ஜ.க.,வின் மதவாதக் கொள்கையா?
குடியுரிமைத் திருத்த மசோதா குறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா அவர்கள், ''இலங்கைத் தமிழர்கள் சுமார் 4 லட்சத்து 61 ஆயிரம் பேருக்கு முதலில் குடியுரிமை வழங்கப்பட்டதாகவும் பிறகு, ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்ததில் 75 ஆயிரம் பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டதாகவும்" குறிப்பிட்டுள்ளார். இது முழுக்க முழுக்க தவறான தகவல்.
அவர் சொல்வது, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வேலைக்குச் சென்ற வம்சாவளித் தமிழர்கள். அதாவது, இந்தியத் தமிழர்களுக்கு இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்ட போது, அன்றைக்குப் பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும் அன்றைய இலங்கைப் பிரதமர் சிரிமாவோவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக வழங்கப்பட்ட குடியுரிமை ஆகும். சுமார் 5 லட்சம் பேருக்கு அப்போது குடியுரிமை வழங்கப்பட்டது.
1974-ஆம் ஆண்டு இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது, இந்தியத் தமிழர்கள் 75 ஆயிரம் பேருக்கு குடியுரிமை தரப்பட்டது. இவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வேலைக்காக - வாழ்வாதாரம் தேடி, இலங்கை சென்ற இந்தியத் தமிழர்கள். ஆனால் நாம் இப்போது குடியுரிமை கேட்பது; ஈழத்தைத் தாயகமாகக் கொண்ட தமிழர்களுக்கு.
தமிழகத்தில் சுமார் 70 ஆயிரம் ஈழத்தமிழர்கள், அவர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 1983-ஆம் ஆண்டு வந்தவர்கள் முதல், 2002-ஆம் ஆண்டு வந்தவர்கள் வரை இருக்கிறார்கள். இவர்களால் மீண்டும் தங்கள் தாயகம் செல்ல முடியாத அவல நிலை இலங்கையில் தொடர்கிறது. அவர்களுக்கான குடியுரிமையைத்தான் கழகம் கேட்கிறது.
புலம்பெயர்ந்து வந்திருக்கும் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர் நல்வாழ்வுக்காக ஏராளமான திட்டங்களைத் தீட்டியது, நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அரசு. அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டு, தமிழகத்தில் வசிக்கும் ரேசன் அட்டை தாரர்களுக்குத் தரப்படும் அனைத்துச் சலுகைகளும் ஈழத்தமிழர்களுக்கும் கிடைத்திடச் செய்தவர் கலைஞர் அவர்கள். அவர்களுக்கான உதவித் தொகை வழங்கியவர் தலைவர் கலைஞர்.
"தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் அவர்களுக்கும் பொருந்தும்" என்று சொன்னவர் தலைவர் கலைஞர்.
"உரிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஈழத்தமிழ்க் குழந்தைகள் சேரலாம்" என்று, இலவசக் கல்வி தந்தவர் கலைஞர் அவர்கள். உயர்கல்வியில் இடஒதுக்கீடு தந்ததும் தலைவர் கலைஞர் ஆட்சிதான்.
அதற்கு நேர்மாறாக அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில், ஈழத்தமிழ் மக்கள் தமிழகத்தில் அனுபவித்த துன்ப துயரங்கள் சொல்லி மாளாதவை.
"ஈழ அகதிகள் 12-ஆம் வகுப்புக்கு மேல் படிக்க அனுமதி இல்லை" என்று ஆணை பிறப்பித்த ஆட்சி, ஜெயலலிதாவின் ஆட்சி.
முகாமுக்கு வெளியில் இருப்பவர்கள், அருகில் உள்ள காவல்நிலையத்தில் பதிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி, அவர்களைத் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்வது போல ஆக்கியது, ஜெயலலிதாவின் ஆட்சி.
உயர் கல்விக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்த ஆட்சி ஜெயலலிதா ஆட்சி.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அகதிகள் முகாமுக்குள் செல்லத் தடை விதித்த ஆட்சி, ஜெயலலிதா ஆட்சி.
அப்படிப்பட்டவரின் வழியில் வந்த எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க., நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் இழைத்து, பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருத்த மசோதாவை ஆதரித்து வாக்களித்திருக்கிறது.
ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது, அடிமை அ.தி.மு.க. அரசு.
மாணவ - மாணவியரின் மருத்துவக்கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கும் நீட் தேர்வு, மாநிலத்தின் வருவாயைப் பாதித்து, பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் ஜி.எஸ்.டி., மின்துறையில் மாநிலத்தின் உரிமைகளைப் பறித்துக்கொண்ட "உதய்" திட்டம், சிறுபான்மையினருக்கு எதிரான மத்திய பா.ஜ.க. அரசின் சட்டங்கள், காவிரி டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்குத் துணைபோவது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக நின்று தமிழர்களைச் சுட்டுக்கொன்ற கொடூரம் என, அ.தி.மு.க. அரசு இழைக்கும் துரோகங்கள் தொடர்கின்றன.
ஊழலில் புழுத்த புழுக்களாக ஆட்சி நடத்திக்கொண்டு, ரெய்டு-வழக்கு ஆகியவற்றை சந்தித்துக்கொண்டிருக்கும் எடப்பாடி அரசு, தங்கள் மீதான சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பித்து ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டால் போதும் என்ற பதவி வெறியின் காரணமாக, தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் துரோகம் இழைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஈழத்தமிழர்களுக்கும் இப்போது மாபெரும் துரோகம் இழைத்துள்ளது.
"கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்றால், அது ஈழத்தமிழர் சிந்திய கண்ணீர்" என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். அந்தக் கண்ணீரைத் துடைக்கும் கடமையைச் செய்ய தி.மு.க. எப்போதும் தயங்காது.
ஈழத்தமிழர்களின் நலன் காக்கவும், சிறுபான்மையினரான முஸ்லிம் சமுதாயத்தினரின் உரிமைகளைக் காக்கவும், மதரீதியாக நாட்டைக் கூறுபோடும் மத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டிசம்பர் 17 (நாளை) அன்று கழகம், போராட்டக் களம் காண்கிறது.
அணிதிரள்வோம்!
ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டென முழங்குவோம்!
நாடு காத்திடத் திரளுவோம்!
பா.ஜ.க. அரசின் கொடுங்கோன்மைச் சட்டத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம்!
அதற்குத் துணை போன - துரோக அ.தி.மு.க. அரசை உள்ளாட்சித் தேர்தல் களத்தில் முறியடித்து உரிய பாடம் கற்பிப்போம்!
தமிழர் நலன் காக்கும் அரசமைக்க உறுதியேற்போம்!