Prosecution against Karur BJP candidate

Advertisment

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை என்ற பகுதியில் கரூர் மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் செந்தில்நாதன் தேர்தல் பரப்புரையில் நேற்று (30.03.2024) ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் 50 ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகளைக் காட்டி, தற்போதைய கரூர் எம்.பி. ஜோதிமணியிடம் குறைகளை தெரிவித்து அவர் அதனை நிறைவேற்றியது குறித்து தனது அலுவலகத்திற்கு வந்து தகவல்தெரிவித்தால் ரூ. 50 ஆயிரம் பரிசு வழங்குவதாக வாக்கு சேகரித்துள்ளார்.

இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தேர்தல் பரப்புரையின் போது ரூ. 50 ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகளைக் காட்டி வாக்கு சேகரித்த கரூர் பா.ஜ.க. வேட்பாளர் செந்தில்நாதன், மாவட்ட பா.ஜ.க. தலைவர் கனகராஜ் உள்ளிட்ட 5 பேர் மீது வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

Prosecution against Karur BJP candidate

முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தேர்தல் விதிகளை மீறும் வகையில் ஆரத்தி எடுத்தபோது பணம் கொடுத்த விவகாரத்தில் தமிழகத்தின்முன்னாள் முதல்வரும், பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஓ. பன்னீர்செல்வம் மீது ஆரத்திக்கு பணம் கொடுத்தல், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே கூட்டம் நடத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அறந்தாங்கி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.