Skip to main content

“ஒட்டுமொத்த அரசும் அதானியை பாதுகாக்க முயல்கிறது” - பிரியங்கா காந்தி தாக்கு

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

priyanka gandhi talks about modi government at wayanad kerala

 

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து முதன்முறையாக வயநாடு தொகுதியில் பேரணியாகச் சென்று மக்களை நேரடியாக ராகுல் காந்தி சந்தித்தார். அதன் பிறகு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசுகையில், ''நான் வயநாட்டைச் சேர்ந்தவன் இல்லை. ஆனாலும் வயநாடு மக்கள் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக என்னை கருதுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது என்ன என்று நான் பலமுறை சிந்தித்தது உண்டு. விளைவுகளைப் பொருட்படுத்தாது மக்களின் பிரச்சனைக்காக மக்கள் பிரதிநிதியானவர் குரல் கொடுக்க வேண்டும்.

 

எனது எம்.பி பதவியை பறிக்கலாம். ஆனால் மக்கள் பிரதிநிதியாக நான் தொடர்வதை பாஜகவினால் பறிக்க முடியாது. வயநாடு மக்களுக்கு என்ன தேவை என்பதற்காக போராடுபவன் தான் மக்கள் பிரதிநிதி. நாடாளுமன்ற உறுப்பினர் என்பது பெயருக்கு பின் வரும் சாதாரணமான தகுதிதான். வயநாட்டுக்கு மருத்துவக் கல்லூரி வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக நான் குரல் கொடுத்தேன். சுதந்திரமாக ஒரு நாட்டில் வாழ வேண்டும் என்பதே வயநாடு மக்கள் மற்றும் இந்திய மக்களின் நோக்கம். நான்கைந்து பேருக்கு மட்டுமே சொந்தமாக இருக்கக்கூடிய நாட்டில் யாரும் வாழ விரும்பமாட்டார்கள். வெள்ளம் வந்தபோது வயநாட்டில் நூற்றுக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. எனது வீட்டை பாஜக அரசு எடுத்துக் கொண்டாலும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டேன். பாஜக மக்களை பிளவுபடுத்துகிறது. மக்களிடையே மோதலை உருவாக்குகிறது. பாஜகவை எதிர்த்து கடந்த பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். ஒவ்வொரு சிறிய சமூகத்தினரையும், மதத்தினரையும் நான் மதிப்பேன். தற்போது நடப்பது இருவேறு சமூக கண்ணோட்டங்களுக்கும் இடையிலான மோதல். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் வயநாட்டு மக்களுக்காக போராடிக் கொண்டே இருப்பேன். என் எம்.பி பதவியைப் பறித்தாலும் வயநாடு மக்கள் உடனான எனது உறவைப் பறிக்க முடியாது. வாழ்நாள் முழுவதும் வயநாடு மக்களுக்காக பாடுபடுவேன். நாடாளுமன்றம் சென்றிருந்தபோது ஒரு குறிப்பிட்ட தொழிலதிபர் குறித்து சில கேள்விகளைக் கேட்டேன். அதானி உடன் உங்களுக்குள்ள தொடர்பு என்ன என்று பிரதமரிடம் கேட்டேன். அதானிக்காக இந்திய வெளியுறவு கொள்கைகள் வளைக்கப்பட்டது'' என்றார்.

 

priyanka gandhi talks about modi government at wayanad kerala

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில், "ராகுல் காந்தி மிகவும் தைரியமானவர். நாடாளுமன்றத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்புவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் அடிப்படை கடமையாகும். ஆட்சியாளர்களால் பதிலளிக்க முடியாத கேள்விகளை ஒருவர் எழுப்புவதால் அவரைப் பற்றி அவதூறாகப் பேசி இரக்கமின்றி தாக்குவதுதான் சரியானது என்று பிரதமரும், மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக எம் பி க்கள் என அனைவரும் கருதுவது விசித்திரமாக உள்ளது. இதனால் தான் ஆட்சியாளர்கள் ராகுல் காந்தியின் வாயை மூட முயல்கின்றனர். ராகுல் காந்தி யாருடைய முகத்திற்கு நேராகவும் கேள்விகளை எழுப்ப பயப்படமாட்டார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல் காந்தியின் எதிர்காலம் நீதிமன்றத்தின் கைகளில் தான் உள்ளது. இருப்பினும் ராகுல் காந்தி தொடர்ந்து கேள்விகளை எழுப்புவார்.

 

ஒட்டுமொத்த அரசும் கௌதம் அதானியை பாதுகாக்க முயல்கிறது. பிரதமர் அதானியை பாதுகாக்கிறார். பாஜக நமது ஜனநாயகத்தை தலைகீழாக மாற்றுகிறது. பிரதமர் மோடி தினமும் விலை உயர்ந்த ஆடைகளை மாற்றுவதில் தான்  கவனம் செலுத்துகிறார். ஆனால் அவர், நாட்டில் உள்ள ஏழைகள் படும் துன்பத்தை பற்றி கவலை படுவதில்லை" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“படித்து பட்டம் பெறுவதை விட பஞ்சர் கடை வைக்கலாம்” - பா.ஜ.க எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
BJP MLA's controversial speech in madhya pradesh

நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் ‘பிரதமர் சிறப்புக் கல்லூரி’ என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெறும் இந்த திட்டத்தின் கீழ் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க எம்.எல் ஏ ஒருவர், மாணவர்களிடம் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப் பிரதேசம் மாநிலம், குணா மாவட்டத்தில் இந்த புதிய கல்லூரியில் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அந்த தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ பன்னாலால் ஷக்யா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நாம் இன்று பிரதமர் சிறப்பு கல்லூரியைத் திறக்கிறோம். இந்தக் கல்லூரிப் பட்டங்களால் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

அதற்குப் பதிலாக, குறைந்த பட்சம் மோட்டார் சைக்கிளுக்கு பஞ்சர் பார்க்கும் கடையை வைத்தால் உங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும்” என்று கூறினார். பா.ஜ.க எம்.எல்.ஏவின் இந்தச் சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Next Story

 காசு கொடுக்காமல் ஓடிய காவலர்; தட்டிக்கேட்ட ஊழியருக்கு நேர்ந்த கொடூரம் 

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
employee was beaten for stopping a policeman who left petrol without paying

கேரள மாநிலம் கண்ணூர் அருகே தளாப் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் அணில்(26) என்ற இளைஞர் ஊழியராக வேலை செய்து வருகிறார். கண்ணூர் ஆயுதப்படையில் காவலராக சந்தோஷ்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சந்தோஷ்குமார், தளாப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்குச் சென்று காருக்கு பெட்ரோல் போட்டுள்ளார். அதன்பின் அணில் பெட்ரோல் போட்டதற்குப் பணம் கேட்க, அதனைத் தராமல் காவலர் சந்தோஷ்குமார் காரை வேகமாக எடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து காரின் முன்னே சென்று அணில் தடுத்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த காவலர் சந்தோஷ்குமார், காரின் முன் நின்றுக் கொண்டிருந்த அணிலை காரை கொண்டு வேகமாக மோதியுள்ளார். அதில் காரின் முன்பு ஆபத்தான நிலையில், ஊழியர் அணில் தொங்கியபடியே அமர்ந்திருந்தார். ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல், சந்தோஷ்குமார் 600 மீட்டர் வரை காரை ஓட்டிச் சென்றார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், காவல்துறை ஐ.ஜி.சுனில்குமார் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் நடந்த விசாரணையில், காவலர் சந்தோஷ்குமார் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் மோசடி செய்ததும், ஊழியரை கார் ஏற்றிக் கொல்ல முயன்றதும் உறுதியானது. இதையடுத்து சந்தோஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.