Prime Minister Modi gave importance to the state language

கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளதால் அங்குத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் 224 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து கர்நாடக தேர்தல் களத்தில் குதித்துள்ளது.

Advertisment

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும் இருக்கும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.

Advertisment

காங்கிரஸ் தரப்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகா அர்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அதேபோல், பாஜக தரப்பில், அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல்வேறு மாநில பாஜக முதல்வர்கள் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம், சித்தரதுர்கா பகுதியில் நேற்று பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “கர்நாடகாவில் நவீன உள்கட்டமைப்பு உருவாக்கப்படும். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்படும். மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் மாநில மொழிகளில் வழங்கப்படும். பாஜக ஒரு சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மாற்றும் திட்டம் பாஜகவிடம் உள்ளது. கர்நாடகாவில் இதற்கு முன் எப்போதும்இல்லாத வகையில், இரட்டை இன்ஜின் அரசு, சமூக நீதி மற்றும் சமூக அதிகாரம் அளித்தலை உறுதி செய்துள்ளது. ஏழைகளின் நலனுக்கு பாஜக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் பாஜக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Advertisment