வாக்களித்த மக்களுக்கு  விலைவாசி உயர்வு மட்டும்தான் பரிசா? - தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா கேள்வி

 Is the price hike the only gift to the people who voted?- Tamaga Youth Leader Yuvaraja asked

'வாக்களித்த மக்களுக்குவிலைவாசி உயர்வை மட்டுமே பரிசாகக் கொடுக்கிறதுமுதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு' எனதமிழக அரசின் மீது குற்றம் சுமத்துகிறார் ஜி.கே.வாசன் நடத்தி வரும் தமிழ் மாநில காங்கிரசின் இளைஞர் அணி தலைவர் ஈரோடு யுவராஜா. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் மக்கள் நலனுக்காக எதையுமே செய்யவில்லை.சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, தொடர்ந்து சிமெண்ட், செங்கல், மணல், அடுத்து ஆவின் பால் விலை, என பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி மக்களை அவதியில் ஆழ்த்தியுள்ளார்கள். 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆவின் நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்படும் பால் பொருட்களின் விலையை திமுக அரசு உயர்த்தியது. அப்போது நெய் லிட்டருக்கு 30 ரூபாய்வரையிலும் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 21, 2022 ஆம் தேதி ஒரு லிட்டர் நெய்யின் விலை 535லிருந்து 580 ஆக (ரூபாய் 45) இரண்டாவது முறையாக உயர்த்தியது.

இன்று மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக மீண்டும்நெய் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. ஒரு லிட்டர் நெய் ரூபாய் 580லிருந்துரூபாய் 630 ஆக உயர்த்தியுள்ளது. ஆவின் தயிர், ஆவின் பால்தற்போது நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்திக் கொண்டிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல். ஒரே ஆண்டில் 3 முறை நெய் விலையை உயர்த்தி லிட்டருக்கு ரூ.125 வரை அதிகப்படுத்தி இருப்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல்.

மக்களின் மேல் அக்கறை கொண்டவர்களைப் போல் நாடகமாடிய இந்தத்திறனற்ற திமுக அரசின் சாயம் வெளுக்கத்தொடங்கிவிட்டது. தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் ஏமாற்று வாக்குறுதிகள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மக்களின் மீது சுமத்தப்படும் வரிகள் மற்றும் விலையேற்ற நடவடிக்கைகள் இருக்கிறது. இந்த விலையேற்றமானது சாதாரண அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவிற்குப் பின்னடைவை நோக்கிச் செல்ல வழிவகுக்கும். எனவே மக்களுக்கு எந்த ஒரு விடியலையும் தராத இந்த திமுக அரசு இனியாவது அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்' எனக் கூறியிருக்கிறார்.

politics tmc
இதையும் படியுங்கள்
Subscribe