Advertisment

இந்தியாவின் வளர்ச்சிக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் பிரணாப் முகர்ஜி! -கே.எஸ்.அழகிரி இரங்கல்!

Pranab Mukherjee

இந்தியாவின் வளர்ச்சிக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் பிரணாப் முகர்ஜி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Advertisment

பிரணாப் முகர்ஜி மறைவு குறித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நீண்ட நெடிய காங்கிரஸ் பாரம்பரிய பின்னணி கொண்ட பிரணாப் முகர்ஜி அவர்கள் குடியரசுத்தலைவராக மிக உயர்ந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு ஓய்வு பெற்ற பிறகு உடல் நலக் குறைவு காரணமாக காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். 1969 -இல் காங்கிரஸ் பிளவுபட்ட போது, அன்னை இந்திராவிற்கு உற்ற துணையாக அரசியல் பிரவேசம் செய்தவர். மத்திய அரசில் அவர் வகிக்காத பதவிகளே இல்லையென்று கூறுகிற வகையில் பாதுகாப்பு அமைச்சராக, வெளியுறவுத்துறை அமைச்சராக, வர்த்தக அமைச்சராக, நிதி அமைச்சராக மற்றும் திட்டக்குழு தலைவராக பொறுப்பு வகித்து இந்தியாவின் வளர்ச்சிக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.

Advertisment

அன்னை சோனியா காந்தி அவர்கள் 1998 -இல் காங்கிரஸ் தலைமையை ஏற்க வலியுறுத்தியவர்களில் முதன்மையானவர் பிரணாப் முகர்ஜி. 2004 -இல் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஆட்சியில் அவருக்கு அடுத்த நிலையிலிருந்து பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பெரும் துணையாக இருந்தவர். ஆட்சித்துறையில் பல்வேறு பிரச்சினைகள் எழுகிறபோது அதைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட அமைச்சரவை குழுவில்முதன்மைப் பங்கு வகித்தவர். மத்திய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2012 -இல் குடியரசுத் தலைவராக தேர்வு பெற்றவர் பிரணாப் முகர்ஜி. 50 ஆண்டுகளுக்கும் மேலான பொது வாழ்க்கையில் அவரது பங்களிப்பை அங்கீகரிக்கின்ற வகையில் நமது நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அவருக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவின் வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றிய மேதகு பிரணாப் முகர்ஜியின் மறைவு தேசத்திற்கே மிகப் பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

congress Pranab Mukherjee
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe