எந்த துறையின் அமைச்சராக இருந்தாலும் திறம்பட பணியாற்றியவர் பிரணாப் முகர்ஜி: மருத்துவர் ராமதாஸ் இரங்கல்!

Pranab Mukherjee

மத்திய அமைச்சரவையில் எந்த துறையின் அமைச்சராக இருந்தாலும் திறம்பட பணியாற்றியவர் பிரணாப் முகர்ஜி என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பிரணாப் முகர்ஜி மறைவு குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவருமான பிரணாப் முகர்ஜி உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி இளம் வயதிலேயே இந்திரா காந்தியால் அடையாளம் காணப்பட்டு அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர். 34 வயதில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பிரணாப் முகர்ஜி இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தவர். இந்திராவுக்குப் பிறகு பிரதமராக வரும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டவர். மத்திய அமைச்சர், திட்டக்குழு துணைத் தலைவர் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளையும் வகித்த பிரணாப் முகர்ஜி, தமது அரசியல் பயணத்தின் உச்சமாக 2012 -2017 காலத்தில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவியையும் அலங்கரித்தவர்.

மத்திய அமைச்சரவையில் எந்த துறையின் அமைச்சராக இருந்தாலும் திறம்பட பணியாற்றியவர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பா.ம.கஅங்கம் வகித்த போது எனக்கு நெருங்கிய நண்பராக திகழ்ந்தார். மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குதல், ஈழத்தமிழர் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் பிரணாபுடன் கடுமையான வாக்குவாதங்கள் நடந்தாலும் கூட, என்னுடைய கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்துக் கேட்டவர். மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் தீர்த்து வைத்து அரசைக் காத்தவர்.

Ad

பாதுகாப்பு அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்த காலங்களில் இந்திய நலனில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாதவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

pmk Pranab Mukherjee Ramadoss
இதையும் படியுங்கள்
Subscribe