Skip to main content

“உண்மையைச் சொல்ல பயிற்சி எடு”- கண்டன குரல் எழுப்பிய ஒ.பி.எஸ்!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

"Practice telling the truth" - OPS condemned

 

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் - டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்பு, குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்குவது, கேஸ் சிலிண்டருக்கான மானிய தொகை வழங்குவது, கல்விக் கடன் - நகைக் கடன் தள்ளுபடி, முதியோர் உதவித்தொகை 1,500 ஆக உயர்த்துவது, 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக அதிகரிப்பது உள்பட 505 வாக்குறுதிகளையும் செயல்படுத்தாதையும், தொடர்ந்து ஏற்படும் மின்சார தடையை நீக்க வலியுறுத்தியும் திமுக அரசைக் கண்டித்து உரிமைக்குரல் முழக்க போராட்டத்தை அதிமுக அறிவித்தது.

 

இந்தப் போராட்டத்தை, கரோனா காலம் என்பதால், அவரவர் வீட்டு முன் நின்று குரல் எழுப்ப வேண்டும் என அதிமுக தலைமை வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பி.எஸ், போடியில் உள்ள தனது வீட்டின் முன் கட்சிப் பொறுப்பாளர்கள் சிலருடன் கண்டன பதாகைகளைக் கையில் வைத்துக்கொண்டு ஆளுங்கட்சியான திமுகவுக்கு எதிர்ப்பாக போராட்டக் குரலை எழுப்பினார். அதில் ‘கரோனா நோய்க்கு உரிய சிகிச்சை கொடு’, ‘பெட்ரோல் - டீசல் விலை என்னாச்சு’, ‘தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்று’, ‘மக்கள் நலனை மறந்துவிட்டு பொய் வழக்குப் போடும் திமுக அரசைக் கண்டிக்கிறோம்’.

 

"Practice telling the truth" - OPS condemned

 

‘போடாதே, போடாதே பொய் வழக்கு போடாதே’, ‘உண்மையைச் சொல்ல பயிற்சி எடு’ என திமுக அரசுக்கு எதிராக பல கண்டன குரல்களை எழுப்பினார். இதில் மாவட்டச் செயலாளர் சையது கான் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். அதுபோல் தேனி பாராளுமன்ற உறுப்பினரும் ஓ.பி.எஸ் மகனுமான ரவீந்திரநாத், தேனியில் திமுக அரசைக் கண்டித்து உரிமைக்குரல் முழக்க போராட்டம் நடத்தினார். இதில் நகர ஒன்றியப் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“எந்தக் காலத்திலும் நான் எடப்பாடி பழனிசாமியிடம் யாசகம் கேட்கமாட்டேன்” - ஓ.பி.எஸ் விளாசல்

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
OPS Vlasal said he will never pray to Edappadi Palaniswami

மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை பல கேள்விகளை முன்வைத்து கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஓ.பன்னீர் செல்வம் இன்று எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்து விமர்சனம் செய்துள்ளார். 

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதாவே என்னுடைய விசுவாசத்தை இந்த நாட்டிற்கு பறைசாற்றிய நிலையில், அதைப் பற்றி பேச ‘பத்துத் தோல்வி’ பழனிசாமிக்கு தகுதியில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் பதவியை கொடுத்தவருக்கு துரோகம், பரிந்துரை செய்தவர்க்கு துரோகம், நான்கு ஆண்டு ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தவருக்கு துரோகம், அதிமுக ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்தவருக்கு துரோகம், என சுயநலத்திற்காக பல துரோகங்களை செய்து கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி என்னுடைய விசுவாசத்தை பற்றிப் பேச அருகதையற்றவர். 2017 ஆம் ஆண்டு மூன்று சதவிகிதம் ஆதரவு இருந்த எனக்கு ‘ஒருங்கிணைப்பாளர்’ பதவி தந்ததாகவும், ‘துணை முதலமைச்சர்’ பதவி தந்ததாகவும் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்து இருக்கிறார். நான் 2017 ஆம் ஆண்டு ‘தர்ம யுத்தம்’ நடத்திய காலத்தில் எனக்கு கிட்டத்தட்ட 42 விழுக்காடு மக்கள் ஆதரவு இருந்தது என்பதை பத்திரிகைகள் படம் பிடித்துக் காட்டின. அந்தத் தருணத்தில், நான் எடப்பாடி பழனிசாமியிடம் சென்று எனக்கு ‘ஒருங்கிணைப்பாளர் பதவி அளியுங்கள்’, ‘துணை முதலமைச்சர்’ பதவி தாருங்கள் என்று கேட்கவில்லை.

நாம் ஒன்று சேர்ந்தால்தான் அதிமுக வலுப் பெறும்; அப்போதுதான் தேர்தல்களில் வெற்றி பெற முடியும் என்ற கட்சித் தொண்டர்களின் கருத்தினையும், விருப்பத்தினையும் எஸ்.பி. வேலுமணியும், திரு. பி. தங்கமணியும் என்னை சந்தித்து வெளிப்படுத்தினர். கட்சியின் நலன் கருதி, கழகம் ஒன்றுபட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் கோரிக்கையை நான் ஏற்றுக் கொண்டேன். நான் போய் பழனிசாமியிடம் எந்தப் பதவியையும் கேட்கவில்லை. இனியும் கேட்கமாட்டேன். பழனிசாமிதான் தவழ்ந்து, ஊர்ந்து, காலில் விழுந்துபெற்ற முதலமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தூது விட்டார். எடப்பாடி பழனிசாமி பதவி வெறி பிடித்தவர், சுயநலவாதி என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தனக்கு பெரும்பான்மை இல்லை என்பதால் எனக்கு தூதுவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. 2016 ஆம் ஆண்டு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் 136 இடங்களில் அதிமுக வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ஜெயலலிதா தன்னுடைய உடல் நலத்தைக்கூட பொருட்படுத்தாமல், சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்ததன் காரணமாக மாபெரும் வெற்றி அதிமுகவுக்கு கிடைத்தது. 

ஜெயலலிதாவின் மரணம் குறித்த நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பற்றி கருத்து தெரிவிக்கும் எடப்பாடி பழனிசாமி, கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு குறித்து வாய் திறக்க ஏன் மறுக்கிறார்? கோடநாடு கொலை-கொள்ளை வழக்கினை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி என்னுடைய தலைமையில் நான் ஆர்ப்பாட்டம் நடத்தினேன். கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு குறித்து போராட்டம் நடத்த எடப்பாடி பழனிசாமி ஏன் தயங்குகிறார்? இது மக்கள் மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.‘இரட்டைத் தலைமை’ இருந்தக் காலகட்டத்தில், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், அதிமுக 22 இடங்களில் போட்டியிட்டு ஓர் இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அதிமுக மட்டும் பெற்ற வாக்கு விகிதம் 19.39 விழுக்காடு. கூட்டணி பெற்ற வாக்கு சதவிகிதம் 31.05. ‘ஒற்றைத் தலைமை’ வந்த பிறகு, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 34 இடங்களில் போட்டியிட்டு ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. 34 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், வாக்கு சதவிகிதம் வெறும் 20.46. கூட்டணிக் கட்சியான தேமுதிக வாக்கு சதவீதமான 2.59 விழுக்காட்டினை சேர்த்தால், மொத்த வாக்கு சதவீதம் 23.05. எட்டு சதவிகித வாக்குகளை அதிமுக இழந்திருக்கிறது. ஏழு தொகுதிகளில் டெபாசிட் பறிபோயிருக்கிறது. அதிமுக வரலாற்றில், ஏழு தொகுதிகளில் டெபாசிட் பறிபோனது இதுவே முதல் தடவை. இந்தச் சாதனையைப் படைத்தவர் எடப்பாடி பழனிசாமி. 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அதிமுக இழந்துவிட்டது. இந்த உண்மையை ஒப்புக்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை.

OPS Vlasal said he will never pray to Edappadi Palaniswami

நான் இந்த அறிக்கையை விரிவாக வெளியிடுவதற்குக் காரணம், நேற்றைய தினம் மதுரை விமான நிலையத்தில் உண்மைக்குப் புறம்பான, முரண்பட்ட கருத்துகளை எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததுதான். என்னைப் பொறுத்தவரையில், அதிமுக ஒன்றுபட வேண்டும், ஜெயலலிதாவின் ஆட்சியை 2026 ஆம் ஆண்டு அமைக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இந்த விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், தலைமை மாற்றப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். தொடர் தோல்வியை சந்தித்து வரும் ‘படுதோல்வி’ எடப்பாடி பழனிசாமி தலைமையை தொண்டர்கள் நிராகரித்துவிட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்தத் தலைமை தொடர்ந்தால், அதிமுக மாபெரும் வீழ்ச்சியைத்தான் சந்திக்கும். தோல்வியின் மறுவுருவமாக விளங்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையை எந்தத் தொண்டனும், பொதுமக்களும் ஏற்காத நிலையில், பிளவுபட்டு இருக்கின்ற கழகம் இணைந்தால்தான் 50 ஆண்டிற்கும் மேலாக இயங்கி வரும் அதிமுக வலுப்பெறும். இதனை மனதில் வைத்துத்தான் கழகம் இணைய வேண்டுமென்ற கருத்தினை நான் சொல்லி வருகிறேன். இது பழனிசாமிக்கு நான் எந்த நேரத்திலும் என்னை கட்சியில் சேர்க்குமாறு கோரிக்கை வைக்காத நிலையில், ‘என்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது. என்னைப் பொறுத்தவரையில், எந்தக் காலத்திலும் நான் எடப்பாடி பழனிசாமியிடம் யாசகம் கேட்கமாட்டேன். எனக்கு அதற்கான அவசியமும் இல்லை. அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று தான் நான் சொல்லி வருகிறேன். கட்சி இணைவதற்கு நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். கட்சி இணைய எடப்பாடி பழனிசாமி எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாரா என்பதுதான் என் கேள்வி.

‘நிரந்தரப் பொதுச் செயலாளர்’ ஜெயலலிதா தான் என்பதையும், சாதாரணத் தொண்டனும் உச்சபட்ச பதவியை அடையலாம் என்ற விதியையும் மாற்றியுள்ள ‘சுயநலவாத சர்வாதிகாரி’  எடப்பாடி பழனிசாமியிடம் நான் எந்தக் கோரிக்கையும் விடுக்காத நிலையில், என்னைச் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி சொல்வது ஆணவத்தின் உச்சகட்டம். அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிப்பதை தொண்டர்களும், பொதுமக்களும் விரும்பவில்லை. இதனை புரிந்து கொண்டு, தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தக் கழகத்தை பலப்படுத்துதுவற்கு ‘பத்துத் தோல்வி’ பழனிசாமி பதவியிலிருந்து விலகினால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்களும், தொண்டர்களும் விரும்புகிறார்கள். தாமாக பதவி விலக எடப்பாடி பழனிச்சாமி மறுக்கும்பட்சத்தில், தொண்டர்களும், பொதுமக்களும் இணைந்து அதற்கான சூழ்நிலையை உருவாக்குவார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“அரசு இயந்திரம் முழுவதும் நிர்வாகச் சீர்கேடு புரையோடிப் போயுள்ளது” - இ.பி.எஸ் கண்டனம்

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
 EPS says Corrupt administration is rampant throughout the government machinery

பீகாரைச் சேர்ந்த தம்பதியர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேலைக்காகச் சென்னை சைதாப்பேட்டையில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இவர்களுக்கு 2 மகள் மற்றும் 1 மகன் இருந்தனர். 

இந்த நிலையில், தம்பதியரின் 11 வயது மகனுக்குக் கடந்த சில தினங்களாகத் தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சிறுவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவனது உடல்நிலை மிகவும் மோசமானதால் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் சிறுவனை அழைத்து சென்றபோது பாதி வழியிலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தியதில் தம்பதியர் வசிக்கும் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததாகவும், அதனால் அதனைக் குடித்த சிறுவன் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்தச் சம்பவம் குறித்து அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கெனவே தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் சுகாதாரமற்றக் குடிநீரால் 10 பேர் பலியானதாகச் செய்திகள் வந்துள்ள நிலையில், தலைநகர் சென்னையிலும் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும், குறிப்பாகச் சென்னை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் சுகாதாரமற்று இருப்பதாக தொடர்ந்து பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு அலட்சியப்போக்குடன் இருந்த தி.மு.க அரசின் குடிநீர் வழங்கல் துறைக்கும், சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கும், சென்னை மெட்ரோ குடிநீர் வாரியத்திற்கும் எனது கடும் கண்டனம். 

மக்கள் வாழ்வியலுக்கு மிக அடிப்படைத் தேவையான குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதைக் கூட ஒரு அரசாலும் மாநகராட்சி நிர்வாகத்தாலும் உறுதி செய்யமுடியவில்லை என்பது, நிர்வாகச் சீர்கேடு அரசு இயந்திரம் முழுவதும் புரையோடிப் போயுள்ளதைக் காட்டுகிறது. தமிழ்நாடு முழுவதும், குறிப்பாகச் சென்னையில், குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசையும், அதன் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன்.