Skip to main content

''மது விலக்கை தீர்மானிக்கும் அதிகாரம் கிராமசபைக்கு வழங்க வேண்டும்''-பாமக ராமதாஸ் கோரிக்கை!

Published on 03/10/2021 | Edited on 03/10/2021

 

The power to decide the prohibition of alcohol should be given to the village council! -pmk Ramadas request!

 

மதுரை மாவட்டம் பாப்பாப்பட்டியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அந்த கிராம மக்களின் குறைகளைக் கேட்டுறிந்தார். அவைகளை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்திருக்கிறார் ஸ்டாலின். மேலும், கிராமசபைக் கூட்டத்தில் முதலமைச்சரே நேரில் பங்கேற்றிருப்பது அனைத்து தரப்பின் பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறது.

 

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ தமிழ்நாட்டின் வரலாற்றில் கிராமசபைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஒருவர் கலந்து கொண்டது இதுவே முதல் முறை என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. காந்தியடிகளின் பிறந்தநாளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், கிராம சுயராஜ்யம் குறித்தும், கிராமங்களின் தேவைகளை நிறைவேற்றுவது குறித்தும் பேசியிருக்கிறார்.

 

இதை கிராமங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நல்லத் தொடக்கமாகக் கருதலாம். அதேநேரத்தில் கிராமங்களுக்கு தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான அதிகாரமும், தேவையற்ற தீமைகளை கிராமங்களுக்குள் அனுமதிக்க விடாமல் தடுக்கும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். அதுவே உண்மையான கிராம சுயராஜ்யமாகும்.

 

ஒட்டுமொத்த தமிழகமும், குறிப்பாக கிராமப்புறங்கள், இன்றைய நிலையில் எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய பிரச்சினை மது தான். மதுவின் தீமைகள் குறித்தும், அதனால் இன்றைய தலைமுறை சீரழிந்து வருவது குறித்தும் ஆயிரமாயிரம் முறை கூறி விட்டேன். ஆனாலும் மதுவின் தீமையிலிருந்து தமிழ்நாடு இன்னும் மீளவில்லை. அதற்கான முயற்சிகளை எடுக்க ஆட்சியாளர்கள் மனதளவில் நினைத்துக் கூட பார்ப்பதில்லை.

 

மதுவால் சீரழிந்த குடும்பங்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை. கிராமங்களுக்கு சென்றால் 10 வீடுகள் கொண்ட தெருவில் குறைந்தது 2 அல்லது 3 குடும்பங்களாவது மதுவால் பாதிக்கப்பட்டு சீரழிந்தவையாக இருக்கும். இந்தியாவில் அதிக இளம் விதவைகளைக் கொண்ட மாநிலமாகவும், அதிக விபத்துகள் மற்றும் தற்கொலைகள் நிகழும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்வதற்கு காரணம் மது தான். பள்ளிகளுக்குச் செல்லும் பதின்வயது பாலகர்கள் கூட வகுப்பறைகளில் மது அருந்திய நிகழ்வுகள் கொரோனா காலத்திற்கு முன்பு வரை செய்திகளில் வந்து கொண்டு தான் இருந்தன. கொரோனா காலத்தில் குடும்பங்களின் வருவாய் குறைந்தாலும், குடிப்பதற்கான செலவுகள் குறையவில்லை. அதனால், பல லட்சக்கணக்கான குடும்பங்கள், குறிப்பாக குழந்தைகளும், பெண்களும் பசியால் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

 

மதுவின் தீமைகளை தினமும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் கிராமப்புறங்களில் வாழும் பெண்கள் தான். கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து விடக்கூடாது என்பதற்காகத் தான் அரசே மது விற்பனை செய்வதாக கூறும் அரசு நிர்வாகங்கள், இது தொடர்பான நிலைப்பாட்டை இறுதி செய்வதற்கு முன்பாக கிராமப்புற பெண்களின் மனநிலையையும், கருத்துகளையும் அறிய வேண்டும். அது தான் உண்மையான மக்களாட்சித் தத்துவம் ஆகும். அதற்கான மிகச்சிறந்த வாய்ப்பை தமிழக அரசுக்கு கிராம சபைகள் வழங்குகின்றன.

 

மராட்டிய மாநிலத்தில் ‘1949ஆம் ஆண்டின் பம்பாய் மதுவிலக்கு சட்டத்தின்’படி மதுவிற்பனை கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, ஏதேனும் ஒரு நகர வார்டிலோ அல்லது கிராமத்திலோ மதுக்கடைகள் தேவையில்லை என அங்குள்ள பெண்களில் 25% பேர் மனு அளித்தால் அதனடிப்படையில் அங்கு வாக்கெடுப்பு நடத்தப்படும். நகரப்பகுதிகளாக இருந்தால் வட்ட அளவிலும், ஊரகப்பகுதிகளாக இருந்தால் கிராம அளவிலும் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படும். அதில்  பங்கேற்கும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மதுக்கடைகளுக்கு எதிராக வாக்களித்தால், உடனடியாக அங்குள்ள மதுக்கடைகள் மூடப்படும். அதுமட்டுமின்றி, அந்த பகுதியில் மதுக்கடைகளை மீண்டும் திறக்க முடியாது. இதேபோன்ற நடைமுறையை தமிழகத்திலும் கொண்டு வரவேண்டும் என 12 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன்.

 

இந்த யோசனையை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. மதுக்கடைகளை மூட ஆணையிட வலியுறுத்தி தொடரப்பட்ட பொதுநலவழக்கில் 2019-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த  நீதிபதிகள்,‘‘ மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்து விட்டது. இனிவரும் தலைமுறைகளையாவது காப்பாற்ற வேண்டும். மதுக்கடைகளுக்கு எதிராக கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை மதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் அறிவுறுத்தினர். மக்களின் கருத்துகள் மீதும், உயர்நீதிமன்றத்தின் மீதும் மரியாதை வைத்துள்ள தமிழ்நாடு அரசு இந்த யோசனையையும் மதித்து செயல்படுத்த முன்வர வேண்டும்.

 

மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் போதெல்லாம், அதை முனை மழுங்கச் செய்வதற்காக அரசுத் தரப்பில் செய்யப்படும் பிரச்சாரம் ’மதுக்கடைகளை மூடிவிட்டால் நலத் திட்டங்களுக்கான நிதி எங்கிருந்து வரும்?’ என்பது தான். அது மிகவும் தவறு. மதுவைக் கொடுத்து குடும்பங்களைச் சீரழித்து விட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்குவதால் யாருக்கும் எந்த பயனும் ஏற்படாது.

 

அதுமட்டுமின்றி, மதுக்கடைகளை மூடினால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்வதற்கான மாற்றுத் திட்டங்களை பா.ம.க. தெரிவித்திருக்கிறது. இந்த விஷயத்தில் தொடர்ந்து ஆக்கப்பூர்வ ஆலோசனை வழங்க பா.ம.க. தயாராக உள்ளது. இவற்றையெல்லாம் கடந்து மக்களாட்சியில் மக்களின் விருப்பமே முக்கியமாகும். எனவே, கிராமப்பகுதிகளில் மதுக்கடைகள் வேண்டாம் என்று குறிப்பிட்ட அளவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், உடனடியாக கிராமசபைகளைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். அதற்கான சட்டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்துள்ளார் டாக்டர் ராமதாஸ். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்