Postponement of Annamalai walk

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தைத் துவங்கி இருக்கிறார். இந்த நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதில் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். அண்ணாமலை நடத்தும் இந்த பாதயாத்திரை மூலம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ஒரு மத்திய அமைச்சர் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

பல்வேறு கட்டங்களாக நடைபெறும் ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணம் அடுத்த ஆண்டு, ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் நிறைவுபெறும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி இந்த நடைப்பயணத்தின் முதல் இரண்டு கட்டங்களை நிறைவு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து மூன்றாம் கட்ட நடைப்பயணம் அக்டோபர் 6 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில், மூன்றாம் கட்ட நடைப்பயணம் ஒத்தி வைக்கப்படுவதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பாஜக சார்பில் வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) தள பதிவில், “பாஜக தமிழக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணம் அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தற்போது அண்ணாமலைக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. நாளை திட்டமிட்டபடி பாஜக மாவட்டத்தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்பதைத்தெரிவித்துக் கொள்கிறோம். திருத்தப்பட்ட நடைப்பயண பட்டியல் விரைவில் வெளியிடப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.