Skip to main content

கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்ட பூவை ஜெகன்மூர்த்தி!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Poovai Jaganmurthy announced the alliance

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகமும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி கண்டிப்பாக தொடர்கிறது. இந்த தேர்தலில் புரட்சி பாரதம் கட்சி போட்டியிடுகிறது. அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற அனைத்து தேர்தல் பணிகளையும் தொடங்குவோம்.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளை விருப்ப தொகுதிகளாக தெரிவித்து அதற்கான பட்டியலை அ.தி.மு.க.விடம் கொடுத்துள்ளோம். இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளோம். அதிலும் குறிப்பாக திருவள்ளூர் தொகுதி சொந்த தொகுதி என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து தெரிவித்துள்ளோம். இது தொடர்பாக அ.தி.மு.க.விடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு இன்னும் அழைக்கவில்லை. அடுத்த வாரம் பேச்சுவார்த்தைக்கு கண்டிப்பாக அழைக்கலாம். அப்போது எங்களது கோரிக்கை குறித்து தெரிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்